ஷாரூக்கான் மகன் ஆர்யான்கான் போதை தலைக்கேறி விமான நிலையத்தில் பொது வெளியில் சிறுநீர் கழித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார்.

அதில், இளைஞர் ஒருவர் விமானநிலையத்தில் பொது வெளியில் சிறுநீர் கழிக்கிறார். அந்த பதிவில், "ஷாருக்கான் மகன் ஆர்யான்கான் போதை ததலைக்கேறி பண்ணும் செயலை பாருங்கள். இவனைத்தான் நம்ம ராகுல் உட்பட எதிர்கட்சிகள் போதை மருந்து வழக்கில் சிக்கிய போது அப்பாவி குழந்தை என்றனர்" என இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறதா என்று தேடிப் பார்த்தோம். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். நாஞ்சில் ராஜா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் இந்த வீடியோவை 2022 ஜனவரி 5ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில், "ஷாருக்கான் மகன் ஆர்யான்கான் போதை தலைக்கேறிப் பண்ணும் செயலை பாருங்கள். #காவல்துறை அவனை கைது செய்கிறது. இவனைத்தான் நம்ம காங்கரஸ் தலைவன் ராகுல் உட்பட எதிர்க்கட்சிகள் போதை மருந்து வழக்கில் சிக்கிய போது அப்பாவி குழந்தை என்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:

பார்ப்பதற்கு வெளிநாட்டு விமானநிலையம் போல உள்ளது. அந்த இளைஞர் ஷாரூக்கான் மகன் ஆர்யான்கான் போலவும் இல்லை. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை Invid WeVerify தளத்தில் பதிவேற்றி புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஹாலிவுட் திரைப்பட நடிகர் விமானநிலையத்தில் சிறுநீர் கழித்தார் என்று முடிவுகள் நமக்கு கிடைத்தது. 2013ம் ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவும் நமக்கு கிடைத்தது.

டெய்லி மெயில் என்ற இங்கிலாந்து ஊடகம் இது தொடர்பாக 2013ம் ஆண்டு வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தோம். அதில் ட்விலைட் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்ற 25 வயதான ப்ரோன்சன் பெல்லெட்டியர் என்பவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையில் பொது மக்கள் முன்னிலையில் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் 2012ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நடந்தது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர் என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: dailymail.co.uk I Archive 1 I tmz.com I Archive 2

இது தொடர்பாக பல்வேறு செய்திகள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் வீடியோவில் இருப்பது ஆர்யான்கான் இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் விமானநிலையத்தில் போதை காரணமாக பொது வெளியில் ஷாரூக்கானின் மகன் ஆர்யான் கான் சிறுநீர் கழித்தார் என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஷாரூக்கான் மகன் விமானநிலையத்தில் போதை தலைக்கேறி அட்டகாசம் செய்த வீடியோ என்று பகிரப்படும் வீடியோ ஹாலிவுட் நடிகர் ஒருவருடையது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விமானநிலையத்தில் சிறுநீர் கழித்த ஷாரூக்கான் மகன் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False