காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்: வைரல் புகைப்படத்தின் பின்னணி!

அரசியல் உலக செய்திகள்

‘’காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்படம் நமது கவனத்திற்கு வந்தது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

இதில், எலிசபெத் ராணியும், காமராஜ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். உணவு மேஜை அருகே அனைவரும் இருப்பதால், இது உணவு பரிமாறுவதைப் போல தோன்றுகிறது. ஆனால், எலிசபெத் ராணி, காமராஜ்க்கு உணவு பரிமாறுகிறார், எனக் கூறி இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் பற்றி இணையத்தில் நீண்ட நேரம் செலவிட்டு, தகவல் ஆதாரங்கள் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்திற்கும், bosotto bros என்ற பேக்கரிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக, தெரியவந்தது. ஆம்,  சென்னையின் பல்வேறு இடங்களில் கிளைகளை நிறுவி செயல்பட்டு வரும் bosotto bros பேக்கரி, பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே செயல்படுகிறது.

சமூகத்தில் உயர்நிலை அந்தஸ்தில் உள்ளவர்கள் தொடங்கி, சாமானியர்கள் வரை பலரும் இந்த பேக்கரி உணவுகளை விரும்பி வாங்கிச் செல்வது வாடிக்கை. பிரிட்டிஷார் காலத்தில், அண்ணா சாலையில் உள்ள இந்த பேக்கரியின் தலைமை அலுவலகம் எப்போதும் உயர் அதிகாரிகளின் கூட்டத்தால் நிரம்பியிருக்குமாம்.

அதற்குப் பிறகும், தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் சந்திக்கும் இடமாக இது இருந்திருக்கிறது. இந்த பேக்கரியின் சிறப்புகள் பற்றி அவர்களே, பழைய புகைப்படங்களை தொகுத்து பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பொக்கிஷங்களில் ஒன்றுதான் மேற்கண்ட புகைப்படமும்.

அண்ணா சாலை விரிவுபடுத்தப்பட்ட போது, வேறு வழியின்றி இந்த பேக்கரி இடம் மாற்றம் செய்யப்பட நேரிட்டது. இதுபற்றி தி இந்து வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அந்த செய்தியில்தான் நாம் ஆய்வு செய்யும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த, 1961ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி இளவரசர் ஆண்ட்ரூவின் முதலாவது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, ராணி எலிசபெத் சென்னை வந்திருக்கிறார். அப்போது, bosotto bros பேக்கரி சார்பாக, பிரத்யேக கேக் தயாரிக்கப்பட்டு, ராஜாஜி அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய முதல்வர் காமராஜர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்க, எலிசபெத் கேக் வெட்டி, ஆண்ட்ரூவுக்கு ஊட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் நாம் ஆய்வு செய்யும் புகைப்படம்.

ராணி எலிசபெத் கேக் வெட்டுவதை மேற்கண்ட புகைப்படத்தில் தெளிவாகக் காண முடிகிறது. இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கேக் வெட்டும் புகைப்படத்தை எடுத்து, பக்கிங்காம் அரண்மனையில் ராணி கையால் காமராஜருக்கு உணவு பரிமாறப்பட்டதாகக் கூறி, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் பற்றிய தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்: வைரல் புகைப்படத்தின் பின்னணி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False