குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்தியை மறைத்த ஊடகங்கள்- விஷம பதிவு!

சமூக ஊடகம் | Social சமூகம்

ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டதாகவும் அதை ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அன்னை?? தெரசாவின் மிஷனரி ஆப் சாரிட்டியின் சிஸ்டர் கைதுவழக்கம் போல *** ஊடகங்கள் கள்ள மவுனம்

Archived link

கன்னியாஸ்திரி ஒருவர் தலையில் கை வைத்தபடி கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் ஏ.என்.ஐ எடுத்த படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜார்கண்ட் மாநிம் ராஞ்சியில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட அன்னை தெரசாவின் மிஷனரி ஆஃப் சாரிட்டியின் கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் வழக்கம் போல ஊடகங்கள் கள்ள மவுனம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Adhiseshan என்பவர் 2019 ஜூன் 5ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில மாதங்களுக்கு முன்பு ராஞ்சியில் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக மிஷனரி ஆஃப் சாரிட்டியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது இது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழகத்தில் எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். இது தொடர்பாக கூகுளில் தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இருந்த படம் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரியுடையது என்பது தெரியவந்தது. இப்போது குழந்தைகள் கடத்தப்பட்டதாக கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டார் என்று எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

RANCHI NUN ARRESTED 2.png

இதன் மூலம் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வை, இப்போது நடந்தது போல வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த செய்தியை எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை என்று ஊடகத்தையும் வசைபாடியிருந்தது தெரிந்தது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போல குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டார்களா என்று ஆய்வு செய்தோம். ஆனால், “திருமணம் ஆகாமல் குழந்தைப்பேறு அடைந்த பெண்களின் குழந்தைகள் மற்றும் யாரும் இல்லாத, சிறப்புக் குழந்தைகளுக்கான இல்லத்தை மிஷனரி ஆஃப் சாரிட்டி சகோதரிகள் ராஞ்சியில் நடத்தி வந்தனர்.

அங்கிருந்த குழந்தை ஒன்றை, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், பேசிய பணத்தை வழங்கவில்லை என்று கூறி குழந்தையை திரும்பப் பெற்றுக்கொண்டனர். அந்த உத்தரப்பிரதேச தம்பதிகள் கொடுத்த புகார் அடிப்படையில் ஜார்கண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்ற பெண்களின் குழந்தைகளைப் பணத்துக்கு விற்றது தெரியவந்ததது. குழந்தையைப் பணத்துக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இது தொடர்பாக தமிழில், இந்து தமிழ்திசையில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். புதிய தலைமுறையில் குழந்தைகள் கடத்தி விற்பனை என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், செய்தியில் கடத்தப்பட்டதாக குறிப்பிடவில்லை. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆனால், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டார்கள் என்ற தகவலை மிஷனரி ஆஃப் சாரிட்டி தலைமை மறுத்துள்ளது. அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டே நடக்கிறது. ஆனால், குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக நலத் துறை சந்தேகிக்கிறது. போலீசார் மற்றும் சமூக நலத்துறையின் ஒளிவுமறைவற்ற, நேர்மையான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்” என்று மிஷனரி ஆஃப் சாரிட்டியின் தலைமை தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஜார்கண்டில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மிஷனரி ஆஃப் சாரிட்டி நடத்தும் இல்லங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய குழந்தைகள் நலத் துறை உத்தரவிட்டது. அரசின் செயலுக்கு மேற்கு வங்க முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“களங்கம் ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி பா.ஜ.க அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருந்த செய்தியும் நமக்குக் கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இப்படி, தேசிய ஊடகங்கள் முதல் தமிழ் ஊடகங்கள் வரை அனைவரும் இந்த செய்தியை மறைக்காமல் வெளியிட்டிருந்தது உறுதிசெய்யப்படுகிறது.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

ஜார்கண்டில் கன்னியாஸ்திரி கைது, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்துள்ளது.

குழந்தைகள் கடத்தப்படவில்லை. பெற்றோர் இல்லாத கைவிடப்பட்ட குழந்தைகள் தத்து கொடுக்கப்படுவதற்கு பதில் விற்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி எல்லா முன்னணி தொலைக்காட்சி, நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. யாரும் இதை மறைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டது உண்மைதான். ஆனால், 2018ல் நடந்த சம்பவத்தை, இப்போது நடந்தது போலவும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே அதை மறைத்தது போலவும் தவறான, விஷமத்தனமான தகவலை பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்தியை மறைத்த ஊடகங்கள்- விஷம பதிவு!

Fact Check By: Praveen Kumar 

Result: False