ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ பங்கேற்றாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அஷ்ரப் பங்கேற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஒருவர் மேடையில் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் இந்து அமைப்பின் தலைவர் ஒருவர் புகைப்படம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் இந்த முஸ்லீம் லீக் MLAக்களுக்கு அறிவுகிடையாது… மஞ்சேஸ்வரம் MLA M.K.M அஷ்ரப் RSSஸின் நிகழ்ச்சியில்.. முஸ்லீம்லீக் தலைவர்கள் சங்கிகளுக்கு சர்பத் கலக்கிக்கொடுத்தும் பச்சை லட்டும் வழங்குன இந்த மாதிரிதான் நடக்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Mohmed Meeran Saleem என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தில் இருக்கும் நபர் யார் என்று தெரியவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மஞ்சேஸ்வரம் எம்.எல்.ஏ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் இல்லை. மஞ்சேஸ்வரம் எங்கு உள்ளது என்று தேடிப் பார்த்தோம். அப்போது, கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம் என்று ஒரு சட்டமன்ற தொகுதி இருப்பதும் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக முஸ்லிம் லீக் கட்சியின் எம்.கே.எம்.அஷ்ரப் என்பவர் இருப்பதும் தெரியவந்தது.

அவர் ஏதேனும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்றாரா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் கீழ் கமெண்ட் பகுதியில் ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்தோம். அதில் எம்.எல்.ஏ அஷ்ரப், நான் பங்கேற்ற கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்த கூட்டம் இல்லை என்று விளக்கம் அளித்திருந்தார். 

அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ அஷ்ரப் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதில் அவர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருந்தது தெரிந்தது. இது குறித்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவின் துணையோடு அந்த வீடியோவில் என்ன சொல்கிறார் என்று பார்த்தோம். அவர் பேசியதன் சுருக்கத்தை நமக்கு கொடுத்தார்கள். 

அவர், “நான் பக்த சமாஜ் சேவா என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்றேன். அது இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த சமூகத்தின் அமைப்பு. இந்த பிரிவில் 15 ஆயிரம் மக்கள் உள்ளனர். தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். நான் அந்த கூட்டத்தில் பங்கேற்றேன். கூட்டம் நடந்த இடத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் படம் மாட்டியிருந்தது. அதற்காக அந்த கூட்டமே ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்த கூட்டம் என்று கூறினால் எப்படி. யார் அந்த அரங்கில் நிகழ்ச்சி நடத்தினாலும் அதை ஆர்.எஸ்.எஸ் கூட்டம் என்று கூறுவீர்களா? சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறுவதாக குறிப்பிட்டனர்.

மேலும், நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் தரப்பில் இருந்து அந்த அமைப்பின் தலைவர் சுஜாதாவை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “எங்கள் அமைப்பு சிறுபான்மையினர் அமைப்பு. இந்த பிரிவு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில் ஒன்றுக்கு சொந்தமான அரங்கில் நிகழ்ச்சியை நடத்தினோம். அங்குதான் மிகவும் குறைந்த வாடகையில் அரங்கு கிடைத்தது. அந்த ஒரு காரணத்திற்காகத்தான் அங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த அரங்கில் சில ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் புகைப்படம் இருந்தது உண்மைதான். எங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியையோ, அமைப்பையோ சேர்ந்தவர்கள் இல்லை. எல்லா கட்சியிலும் அமைப்பிலும் எங்கள் சமூகத்தினர் உள்ளனர். அனைத்து பிரிவினைகளையும் கடந்து ஒரே சமூகமாக ஒன்று கூடி நிகழ்ச்சியை நடத்தினோம். தொகுதி எம்.எல்.ஏ என்ற வகையில் அஷ்ரப்பை அழைத்தோம்” என்றார்.

இதன் மூலம் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அஷ்ரப் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்றார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கேரளாவில் மத நல்லிணக்கத்தை காக்க ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ பங்கேற்றார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ பங்கேற்றாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False