மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரைச் சூட்டிய மத்திய அரசு– நிஜமா?

அரசியல் சமூக ஊடகம்

மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் குத்துவிளக்கேற்றுகிறார். அவர் அருகில் தேவேந்திர ஃபத்னாவீஸ் உள்ளிட்டவர்கள் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பின்னணியில், ராஜேந்திர சோழன் 1 என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் அருகில், ராஜேந்திர சோழன் சிலை மற்றும் கப்பலின் புகைப்படம் பிரேம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மேலே, “மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரைச் சூட்டியது மத்திய அரசு” என்று குறிப்பிட்டுள்ளனர். கீழே, “நீங்க இன்னும் அண்ணா, பெரியார், எம்ஜிஆர், கலைஞர், அம்மானு இவங்க பெயரையே வைங்கடா” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் தமிழ் மற்றும் தமிழ் மன்னர்களின் புகழை மத்திய அரசு பரப்புவதாகவும், தமிழகத்தில் கட்சித் தலைவர்களின் புகழ் பாடப்படுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இந்த படத்தை, களக்காடு BJP நண்பர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூன் 6ம் தேதி பகிர்ந்துள்ளனர். இது உண்மை என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு மகாராஷ்டிர அரசால் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் புகைப்படம் ஒன்று வழங்கப்பட்டது. அது முதல், மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழனின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது.

மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். மும்பை துறைமுகத்தின் பெயர் என்ன என்று தேடினோம். அதன் இணையதளத்தில் மும்பை போர்ட் டிரஸ்ட் என்றே உள்ளது. ராஜேந்திர சோழன் பெயரில் இந்தியாவில் ஏதாவது துறைமுகம் உள்ளதா என்றும் தேடினோம். அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

MUMBAI PORT 1A.png

மேலும், மும்பை துறைமுகத்துக்கு பெயர் மாற்றம் செய்வது எல்லாம் மத்திய அரசு தொடர்புடையது. இந்த படத்தில் மத்திய அமைச்சர்கள் யாரும் இல்லை. மராட்டிய ஆளுநர், முதல்வர் உள்ளிட்டவர்களே இருந்தனர். இதனால் ராஜேந்திர சோழன் படத்தை வழங்கிய நிகழ்ச்சியை, மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திரன் பெயர் சூட்டியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்தது.

அதை உறுதி செய்ய,இந்த பதிவில் உள்ள படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படம் மற்றும் அது தொடர்பான செய்திகள், படங்கள் நமக்குக் கிடைத்தன.

MUMBAI PORT 2.png

படத்தில், முதலாம் ராஜேந்திர சோழனின் புகைப்படம் வழங்கும் விழா என்று மேடையில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டு இருந்தது.

MUMBAI PORT 3.png

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியைப் படித்துப் பார்த்தோம்… “அதில், தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை மும்பையில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு மராட்டிய அரசு வழங்க உள்ளது. இந்த விழாவில், மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், மராட்டியத்தைச் சேர்ந்த ஒரே தமிழ் எம்.எல்.ஏ கேப்டன் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் முரளி மனோகர் பாரிக்கர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தமிழில் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது தமிழ் சமயம், தினமணி உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது தெரிந்தது. விழா தொடர்பாக தமிழ் சமயம் வெளியிட்ட செய்தியில், “2016 செப்டம்பர் 29ம் தேதி, மும்பையில் உள்ள மஜ்கான் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு மராட்டிய அரசு சார்பில் முதலாம் ராஜேந்திர சோழனின் உருவப்படம் வழங்கப்பட்ட உள்ளது. இந்த தகவலை முன்னாள் எம்.பி தருண் விஜய் தெரிவித்துள்ளார்” என்று இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

விழா முடிந்த பிறகு தினமணி வெளியிட்ட செய்தியில், ராஜேந்திர சோழன் உருவப்படத்தை மராட்டிய அரசு வழங்கியது என்று கூறப்பட்டு இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்கு கிடைத்த தகவல்கள்…

1) மும்பை துறைமுகத்தின் பெயர் மும்பை போர்ட் டிரஸ்ட் என்றே அதன் இணையதளம் உள்ளிட்டவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம், ராஜேந்திர சோழன் உருவப்படத்தை கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கும் விழாவில் எடுக்கப்பட்டது.

3) முதலாம் ராஜேந்திர சோழன் 1000ம் ஆண்டு விழாவையொட்டி அவருடைய புகைப்படம் ஒன்று மும்பையில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட செய்தி நமக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயர் வைக்கப்பட்டதாக வெளியான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரைச் சூட்டிய மத்திய அரசு– நிஜமா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •