
துளசி மரம் என்று சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

துளசி விதைகள் நிறைந்த மரம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “துளசி செடி தான் பார்த்திருக்கிறோம். மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை U Murugesan என்பவர் 2019 ஜூலை 2ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2020 ஏப்ரல் 16ம் தேதி வரை பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
துளசி என்பது சிறு புதர் வகை செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அது மரமாக வளரும் என்றால் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் துளசி மரமாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இமயம் முதல் குமரி வரை மக்கள் துளசியை புனிதமாக நினைத்து வளர்த்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது துளசி மரம் என்று பகிர்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உண்மையில் துளசி மரம் போல வளருமா என்று கூகுளில் தேடினோம். அப்போது இது நேராக வளரும் கிளைத்த புதர் வகையைச் சேர்ந்தது அதிகபட்சமாக 24 இன்ச் அளவுக்கு வளரக்கூடியது என்று குறிப்பிட்ட தகவல் மட்டுமே கிடைத்தன.

நம்முடைய தேடலில் பசுமை விகடன் என்ற வேளாண்மை இதழ் வெளியிட்ட செய்திகள் கிடைத்தன. அதில், மழை பெய்தால் முளைக்கும் துளசி என்று குறிப்பிட்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மானாவாரியாக விளையும் துளசி செடியின் இலைகளைப் பறித்து விற்பனை செய்யும் பெண்கள் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியில் பல்லடம் பகுதியில் பல ஏக்கர் கணக்கில் இயற்கையாக விளைந்து நிற்கும் துளசியை விவசாய கூலி பெண்கள் பறித்து விற்பனை செய்வதாக குறிப்பிட்டிருந்தனர்.
அதில் அந்த பெண்கள் இலையை மட்டுமே பறிப்பார்கள் என்றும் விதையை பறிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த விதைகள் நிலத்தில் விழுந்து அடுத்த ஆண்டு நல்ல மழை பொழியும் போது இயற்கையாக மீண்டும் விளைகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து இது செடி வகையைச் சேர்ந்தது என்று சில செய்திகள் கிடைத்தன. பல்லடம் பகுதியில் மானாவாரியாக விளையும் துளசியை முழுவதுமாக பறித்துவிடுவதும் இல்லை. அப்படிப் பார்த்தால் அந்த பகுதியில் துளசி மரமாக வளர்ந்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக தாவரவியல் துறை ஆசிரியர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “இது துளசி மரம் இல்லை. வேறு வகையான மரம். துளசி என்பது சிறு புதர் வகையைச் சேர்ந்த குறுந்தாவரம். சில அடிக்கு மேல் அது வளராது. துளசி பூ ஒருவகையான ஊதா நிறத்தில் இருக்கும். இதைப் பார்க்கும்போது மஞ்சள் நிறத்தில் உள்ளது” என்றார்.
உண்மையில் இது என்ன படம் என்பதை அறிய, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில பூத்துக்குலுங்கும் மாமர படங்கள் கிடைத்தன. அதுவும் தூரத்திலிருந்து பார்க்கும்போது துளசி விதைபோலவே தெரிந்தன. அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா என்று கண்டறியும் ஊடகமும் ஒன்றும் இதே படத்தை ஆய்வு செய்திருப்பது தொடர்பான கட்டுரை கிடைத்தது.
அதில், கர்நாடகத்தில் உள்ள துளசி மரம் என்று பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும், தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “துளசி செடி மரமாக வளராது” என்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு அந்த தகவல் தவறானது என்று முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில்,
துளசி புதர் வகை செடி என்று அறிவியல் உலகம் கூறும் செய்தி கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்த பிறகு மானாவாரியாக துளசி விளைகிறது என்று பசுமை விகடன் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
துளசி பெரிய மரம் போல வளராது என்று தாவரவியல் ஆசிரியர் உறுதி செய்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் துளசி மரம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பெரிய மரமாக வளர்ந்திருக்கும் துளசி– ஃபேஸ்புக் வைரல் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
