
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு பெண்கூட நெருக்கமாக இருப்பது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நேரு போன்ற தோற்றம் அளிக்கும் நபர், பெண் ஒருவரை பிடித்தபடி காதல் செய்யும் படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த பெண்ணைப் பார்க்க மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா போல உள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா சுதந்திரத்துக்குப் போராடியதை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Sasikumar என்பவர் 2020 ஜனவரி 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் பக்கமாக இருந்தாலும் இது தமிழ்நாடு பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை. BJP Tamilnadu என்ற வெரிஃபைடு பக்கம் தமிழக பா.ஜ.க-வுக்கு உள்ளதால் இந்த பக்கத்தில் வெளியான பதிவு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தில் உள்ள நபர் நேரு போல இல்லை. நேருவின் பழைய படங்களுக்கும் இந்த படத்தில் உள்ள நபருக்கும் வித்தியாசங்கள் தெரிந்தன. இதனால், முதலில் இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது Hampstead Theatre என்ற அமைப்பு நடத்திய டிராயிங் தி லைன் என்ற மேடை நாடகத்தில் இந்த காட்சி வருகிறது என்ற தகவல் நமக்கு கிடைத்தது. அந்த இணையதள பக்கத்தை திறந்து பார்த்தோம்.

Search Link |
அதில், 1947ம் ஆண்டு இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் என்று தனிநாடு உருவாக்க இங்கிலாந்து அரசு மவுண்ட் பேட்டனை அனுப்பியது தொடர்பான மேடை நாடகம் அது என்பது தெரிந்தது. அதில், புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப் பகுதியில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படம் இருந்தது. அதில், நேருவாக சிலாஸ் கார்சன் (SILAS CARSON), எட்வினா மவுண்ட்பேட்டனாக லூசி பிளாக் (LUCY BLACK) என்று குறிப்பிட்டிருந்தனர்.

hampsteadtheatre.com | Archived Link |
இந்த நாடகத்தில் நடித்தவர்கள் என்று தனியா மற்றொரு பதிவு இருந்தது. அதில், நேரு மற்றும் எட்வினாவாக நடித்தவர்களின் அசல் படமும் இருந்தது. இதன் மூலம் இந்த மேடை நாடக காட்சியிலிருந்து நேரு படத்தை எடுத்து தவறான கருத்தை பகிர்ந்திருப்பது தெரிந்தது.

நம்முடைய ஆய்வின்போது, இந்த வதந்தி பல ஆண்டுகளாக பரவி வருவதும் தெரிந்தது. சர்வதேச ஊடக நிறுவனமான ஏ.எஃப்.பி முதல் பெங்களூரு மிரர் வரை பல ஊடகங்கள் இந்த படத்தில் இருப்பது நேரு மற்றும் எட்வினா இல்லை என்று செய்தி வெளியிட்டிருப்பதும் தெரிந்தது.
factcheck.afp.com | Archived Link 1 |
bangaloremirror.indiatimes.com | Archived Link 2 |
நம்முடைய ஆய்வில்,
மேடை நாடக காட்சியை எடுத்து நேரு என்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் உள்ளவர்கள் மேடை நாடகக் கலைஞர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல ஊடகங்கள் இது தொடர்பான கட்டுரையை வெளியிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், எட்வினா மவுண்ட்பேட்டனுடன் நெருக்கமாக இருக்கும் நேரு என்று பகிரப்பட்டுள்ள படம் சித்தரிக்கப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:எட்வினாவுடன் ஜவஹர்லால் நேரு நெருக்கமாக இருக்கும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
