தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்த தரமற்ற சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மழை வெள்ளம் காரணமாக தார் சாலை நகர்ந்து சாலைக்கு வெளியே இருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ரோடு லேசா மழைல நனஞ்சிடுத்து அதான் காயபோட்டுள்ளோம்... நன்றி எடப்பாடி அரசு" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, தமிழ்தேசிய ஆதரவாளர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Niyas Mkv என்பவர் 2020 ஜனவரி 1ம் தேதி வெளியிட்டுள்ளார். ஆயிரக் கணக்கானோர் இதை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

இந்த படத்தைப் பார்க்கும்போது தமிழகத்தில் எடுத்தது போல தெரியவில்லை. அப்படி தமிழகத்தில் எடுக்கப்பட்டதாக இருந்தால் மாவட்டம், நகரம், கிராமம் முதற்கொண்டு தகவல் தெரிவித்திருப்பார்கள். ஆனால், நிலைத் தகவலில் எடப்பாடி அரசு என்று ஒற்றை வரியில் முடித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் எங்கே எடுக்கப்பட்டது என்ற சரியான தகவல் இல்லை. ஆனால், இந்தோனேஷியா, மலேசியாவில் இந்த படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருவது தெரிந்தது. அதிலும் 2019 டிசம்பர் இறுதி வாரத்தில் இந்தோனேஷியா, மலேசியாவை சேர்ந்த நபர்கள் மற்றும் குழுக்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் இந்த படம் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.

Search Link

தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்யும் தங்லிஷ் போல நிறைய பதிவுகள் கிடைத்தன. அது என்ன மொழி, என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய சில பதிவுகளில் இடம் பெற்ற வார்த்தைகளை கூகுள் டிரான்ஸ்லேட்டரில் அதை அப்படியே டைப் செய்து பார்த்தோம். அப்போது அது இந்தோனேஷிய மற்றும் மலாய் மொழிகள் என்று காட்டியது.

Facebook Link 1Facebook Link 2

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. இது குறித்து கருத்து கூற முடியுமா என்று தமிழக நெடுஞ்சாலைத் துறையைத் தொடர்புகொண்டு பேசினோம். "எங்கு எடுத்தது என்று எந்த ஒரு தகவலும் இல்லாமல் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பிய அவர்கள், தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது என்று கூறினால், அது பற்றி விசாரித்து பதில் அளிக்கிறோம்" என்றனர்.

எந்த சாலை என்று குறிப்பிடாமல் எடப்பாடி அரசு என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டதால் தமிழக அரசின் கருத்தை பெற முடிவு செய்தோம். தமிழக நெடுஞ்சாலைகள் துறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளதால், இது பற்றி அவருடைய கருத்தை அறிய தமிழக மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் உதவியை நாடினோம். என்ன சாலை, எங்கே என்று எல்லா விவரத்தையும் கேட்ட அவரிடம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் புகைப்படத்தை காட்டி அவர் தரப்பு கருத்தைக் கேட்டோம்.

விசாரித்துவிட்டு சொல்கிறேன் என்ற அமைச்சர் ஜெயக்குமார், பிறகு நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, “இது வெளிநாட்டில் எடுக்கப்பட்டதாக பல ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்த்தேன். இந்த படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை. தமிழக அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றே இதை வெளியிட்டுள்ளார்கள். தமிழக அரசு மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தவறான தகவலை பலரும் பரப்பி வருகின்றனர். இவற்றை மக்கள் நம்பமாட்டார்கள்" என்றார்.

நம்முடைய ஆய்வில்,

இந்த படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

இந்த பதிவு வெளியானதற்கு சில நாட்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்தவர்கள் இந்த படத்தை டிரெண்ட் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் இந்த தகவல் தவறு என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக அரசு அமைத்த தரமற்ற சாலை என்று பகிரப்படும் படும் தகவல் மற்றும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எடப்பாடி பழனிசாமி அரசு அமைத்த தரமற்ற சாலை; வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False