
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை, ஜெய் ஶ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தினால், சவுதியில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாமியராக மாற்றுவேன் என்று இந்தியாவுக்கு சவுதி இளவரசர் எச்சரக்கை விடுத்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
குடிக்கிற கஞ்சியிலே மண்ணள்ளி போடப்போற……
RSS -BJP இந்துத்தீவிரவாதிகளால் வயித்துப்பிழைப்புக்காக சென்ற இந்துக்களுக்கு ஆபத்து.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இந்துத் தீவிரவாதிகளால் வயிற்றுப் பிழைப்புக்காக சவுதி சென்ற இந்துக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சவுதி இளவரசர் எச்சரக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லச்சொல்லி இஸ்லாமியர்கள் கட்டாயப்படுத்தப் படுவதாகவும், அப்படி செய்தால், சவுதி அரேபியாவில் உள்ள இந்துக்களை இஸ்லாமியர்களாக மாற்றுவேன் என்றும், அவர்கள் விசா ரத்து செய்யப்படும் என்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சவுதி இளவசர் படத்தின் கீழ் இந்தியில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. அதை மொழிபெயர்த்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சகவாசம் குலநாசம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை, 2019 ஜூன் 2ம் தேதி Royal Ibrahim என்பவர் பகிர்ந்துள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜெய் ஶ்ரீராம் என்பது ஒரு கட்சியின் கோஷம் போல மாறிவிட்டது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி சென்றபோது அவருக்கு அவருக்கு எதிராக ஜெய் ஶ்ரீராம் என்று முழக்கம் எழுப்பினர். குருக்கிராமத்தில், தொழுகை முடித்துவந்த இளைஞர் ஒருவரை, ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி இஸ்லாமியர்கள் வற்புறுத்தப்பட்டால், சவுதியில் உள்ள இந்துக்களின் விசா ரத்து செய்யப்படும் என்று சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் கூறியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய, முதலில் இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அது போல எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.


சவுதி அரேபியா அரசு தரப்பில் இந்தியாவுக்கு ஏதேனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்று தேடியபோது, இந்தியாவுக்கு ஆபத்து நேரத்தில் உதவிய சவுதி அரேபியா, ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை என்று மற்ற செய்திகள்தான் கிடைத்தன. இந்தியாவுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்தியாவுக்கு சவுதி இளவரசர் எச்சரிக்கை விடுத்தார் என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
