
‘’ரஜினிகாந்த், தேர்தல் ஆணையத்திடம், ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க விண்ணப்பித்துள்ளார்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், ரஜினி பற்றி நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, கவுண்டமணி, செந்தில் சினிமா காட்சி ஒன்றையும் இணைத்து, பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் தரப்பட்டுள்ளது,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
உண்மை அறிவோம்:
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில், அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்தார். 2021 ஜனவரி மாதத்தில் கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல், அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள அதேசமயம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரையும் கவனிக்க வைத்துள்ளது.
இதையொட்டி, ரஜினிகாந்த் பற்றியும், அவர் தொடங்க உள்ள கட்சி பற்றியும் வித விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட, ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரை கேட்டு, தேர்தல் ஆணையத்தில், ரஜினி விண்ணப்பித்துள்ளார் எனும் தகவலும்..
உண்மையில், இப்படி News7 Tamil ஊடகம் செய்தி எதுவும் வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா நம்மிடம் பேசுகையில்,
‘’எங்களின் பெயர் மற்றும் லோகோவை தவறாகப் பயன்படுத்தி, இப்படி ஒரு போலி நியூஸ் கார்டு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இப்படி எந்த செய்தியும் நாங்கள் வெளியிடவில்லை,’’ எனக் குறிப்பிட்டார்.
எனவே, அரசியல் பரபரப்பிற்காக, ஊகத்தின் அடிப்படையில் தனிநபர்கள் இவ்வாறான நியூஸ் கார்டை தயாரித்து, பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயர் கேட்டு ரஜினி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
