
‘’மோடியின் கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை. சவூதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பொது மன்னிப்பாக அவர்களை விடுதலை செய்துள்ளனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ரமளான் மாத பொது மன்னிப்பாக சௌதி அரேபிய அரசு சிறைக் கைதிகளை ஆண்டு தோறும் விடுதலை செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 850 இந்தியர்களையும் விடுதலை செய்துள்ளது.
அதை தனது சாதனையாக பீற்றிக் கொண்டு பொய் சொல்லித் திரியும் மோடி!
இந்த பதிவில் மோடி பற்றி தி இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தியையும், சவூதி கெஸட் பற்றிய விவரத்தையும் சேர்த்து, பதிவிட்டுள்ளனர். இதில், ‘’ ரமளான் மாத பொது மன்னிப்பாக சௌதி அரேபிய அரசு சிறைக் கைதிகளை ஆண்டு தோறும் விடுதலை செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 850 இந்தியர்களையும் விடுதலை செய்துள்ளது. அதை தனது சாதனையாக பீற்றிக் கொண்டு பொய் சொல்லித் திரியும் மோடி! சமஸ் Samas,’’ எனக் கூறியுள்ளனர். இதன்படி, சமஸ் என்பவரின் ஃபேஸ்புக் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில், இப்பதிவை வெளியிட்டுள்ளதாக, தெரிகிறது.
உண்மை அறிவோம்:
இதன்படி, முதலில் தி இந்து தமிழ் திசையில் இத்தகைய செய்தி எதுவும் வெளியாகியுள்ளதா என தேடிப் பார்த்தோம். அதன் உண்மை ஆதாரம் கிடைத்தது.

அந்த செய்தி இணைப்பை திறந்து பார்த்தபோது, இந்த பதிவில் உள்ளதுபோலவே, அப்படியே இந்துவில் வெளியான செய்தியும் இருந்தது. எனவே, இது உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது.

அந்த செய்தியை விரிவாகப் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.
அதில், கடந்த பிப்ரவரி மாதம் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அப்போது, சவூதி சிறையில் வாடும் 850 இந்தியர்களை விடுவிக்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதையேற்று, சவூதி அரசு அவர்களை விடுவித்துள்ளது. இதனை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோடியும் மேற்கோள் காட்டி, மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக, அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இதன்பேரில், மீண்டும் ஆதாரங்களை ஒப்பிடு செய்து பார்த்தோம். நியூஸ் 18, அல் ஜஸீரா, ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை பார்வையிட்டோம். அனைத்து ஊடகங்களிலுமே, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்றுத்தான், சவூதி அரசு இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, எந்த இடத்திலும் மோடி பற்றியோ, சவூதி அரசின் இந்த நடவடிக்கை பற்றியோ குழப்பமான செய்தி வெளியாகவில்லை. அனைத்திலும் ஒரே மாதிரியான செய்திதான் உள்ளது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள விசயம், குழப்பமான ஒன்றாகிறது. சவூதி அரசு ரமலான் மாதத்தின் அடிப்படையில் இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் தகவலில் நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவலில் நம்பகத்தன்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய நம்பத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மோடி கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: Mixture
