
காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர்கள் உடனடியாக மரணம் அடைந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் உள்ள விவரங்களின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
கடுப்பேத்துறார் மை லார்டு (Kadupethurar My Lord) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், 2019 மே 23ம் தேதி ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “காமராஜர் 1957, 1962ம் ஆண்டு முதல்வரானார். அதைத் தொடர்ந்து மரணமடைந்தார். அண்ணாதுரை 1967, 72ம் ஆண்டு வெற்றிபெற்றார். அண்ணா மறைந்தார்.
1977, 1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர் வெற்றிபெற்றார். பின்னர் அவர் மறைந்தார்.
2011, 2016ம் ஆண்டு ஜெயலலிதா வெற்றிபெற்றார். பின்னர் அவர் மறைந்தார்.
2014, 2019ல் மோடி வெற்றிபெற்றுள்ளார். அட்வான்ஸ் ஆர்.ஐ.பி மோடி” என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மை என்று நம்பி ஏராளமானோர் இதைப் பகிர்ந்து வருகின்றனர். ビット コイン オンライン カジノ
உண்மை அறிவோம்:
தகவல் தொழில்நுட்பம், விழிப்புணர்வு அதிகமாக உள்ள இந்த காலக்கட்டத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்று முதல்வர் ஆனால் அவர்கள் மரணம் அடைவார்கள் என்ற மூடநம்பிக்கை அதிக அளவில் பகிர்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியது. மூட நம்பிக்கைக்குள் செல்ல விரும்பவில்லை. அவர்கள் அளித்திருக்கும் தகவல் சரியா என்று மட்டும் சரிபார்த்தோம். தமிழக முன்னாள் முதல்வர்கள் தொடர்பான தகலை தமிழ்நாடு சட்டப்பேரவை இணைய தளத்தில் சரிபார்த்தோம். அதில் இருந்து நமக்கு கிடைத்த தகவல்கள்…
முதலில், காமராஜரைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவில், 1957 மற்றும் 1962ம் ஆண்டு அவர் முதல்வர் ஆனார் என்று குறிப்பிட்டுள்ளனர். அது உண்மைதான். ராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து, 1954ம் ஆண்டு தமிழ்நாட்டின் மூன்றாவது முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 1957 மற்றும் 1962ம் ஆண்டுகளில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் ஆனார். பின்னர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். பதவியிலிருந்து இறங்கி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து காமராஜர் மரணம் அடைந்தார்.

தமிழகத்தில், 1967ம் ஆண்டு முதன் முறையாக தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது. அண்ணாதுரை தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். முதல் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு, அதாவது 1969ம் ஆண்டு அண்ணாதுரை மரணம் அடைந்தார். இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை.
1977ம் ஆண்டு முதன் முறையாக எம்.ஜ.ஆர் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடைய ஆட்சி 1980ல் கலைக்கப்பட்டது. அடுத்து அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் ஆனார். 1985ல் தொடர்ந்து அவர் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று முதல்வர் ஆனார். 1987ம் ஆண்டு எம்.ஜி.ராமச்சந்திரன் மரணம் அடைந்தார். தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர்.
2011ம் ஆண்டு ஜெயலலிதா வெற்றிபெற்று தமிழக முதல்வர் ஆனார். அதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றார். இதனால், அவரது முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் ஆனார். சொத்துக் குவிப்பு வழக்கில் குமாரசாமி வழங்கிய தீர்ப்பு காரணமாக ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்று முதல்வர் ஆனார். அதே ஆண்டு அவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
மரணம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியதுதான். அதை பதவியுடன் முடிச்சிப்போட்டு அபத்தமான பதிவை வெளியிட்டுள்ளனர். இந்த பதிவிலும் உண்மை இல்லை. காமராஜர் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்துதான் இயற்கை ஏய்தினார். அண்ணாதுரை தன்னுடைய முதல் ஐந்தாண்டு கால ஆட்சிப் பொறுப்பை நிறைவு செய்வதற்கு முன்பே மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆர் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் மரணம் நிகழும் என்பது தவறான பிரசாரம். 2004 மற்றும் 2009ம் ஆண்டு மன்மோகன் சிங் தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தார். அவர் நலமுடன் வாழ்ந்து வருகிறார். உண்மை இவ்வாறு இருக்க இரண்டாவது முறையாக மோடி வெற்றிபெற்று பிரதமர் ஆகும் வெறுப்பில், மோடிக்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் முன்கூட்டிய இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை, விஷமத்தனமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததால் மோடிக்கு ஆபத்து! – தரம்தாழ்ந்த ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Praveen KumarResult: False
