
சென்னை லயோலா கல்லூரி உள்ள இடம் பிரபலமான சிவன் கோவில் ஒன்றுக்கு சொந்தமானது என்றும் அதன் குத்தகை 2021ம் ஆண்ட முடிவடைய உள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவை மொபைலில் ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போன்ற படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு செல்லும்வரை அதிகமாகப் பகிருங்கள். லயோலா கல்லூரி அமைந்திருக்கும் 96 ஏக்கர் இடம் சென்னையில் உள்ள பிரபல சிவன் கோவிலுக்கு சொந்தமான இடமாகும். அந்த 96 வருடக் குத்தகை 2021 உடன் முடிவடைகிறது. கோவில் இடத்தை மீட்க இந்து இயக்கங்கள் தயாராகவும்…” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Ramasethu Sekaran என்பவர் 2019 நவம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குடியரசு முன்னாள் தலைவர் வெங்கட்ராமன், ரிவர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன், பத்திரிகையாளர்கள் சோ, என்.ராம், விளையாட்டு வீரர்கள் செஸ் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்பட பல பிரபலங்கள் உருவான இடம் சென்னை லயோலா கல்லூரி. கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் தற்போது அந்த கல்லூரி பற்றி பல தகவல்களை வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் எந்த ஒரு ஆதாரத்தையும் குறிப்பிடவில்லை. பிரபல சிவன் கோவிலுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டவர்கள் அது எந்த கோவில் என்று கூற குறிப்பிடவில்லை. மொட்டை கடிதம் எழுதியது போன்று யார் இதை சொன்னார்கள், இதற்கான ஆதாரம் என்ன என்று எதுவும் அந்த பதிவில் இல்லை.
Search Link |
இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, இணையத்தில் இது தொடர்பாக பகிரப்பட்டு வரும் படங்கள், வதந்தி மற்றும் தீவிர வலதுசாரி இணையதளமான கதர் செய்திகள் வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்தது. இவர்களாவது ஏதேனும் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்களா என்று பார்த்தோம். முழுக்க முழுக்க கதை போலவே செய்தி இருந்தது. எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் அளிக்கவில்லை.
News Link | Archived Link |
அந்த செய்தியில், “செலவைக் குறைப்பதற்காக நீர்நிலைகள் மீது ஆங்கிலேயர்கள் ரயில் பாதையை அமைத்தார்கள். அப்படி ஆக்கிரமிக்கப்படும் நீர் நிலைப் பகுதியில் ஒரு சர்ச்சை கட்டுவார்கள். பிறகு தங்கள் செல்வாக்கால் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை வளைத்துப்போட்டு, ஏரிப்பகுதியை மேடாக்கி வெளிநாட்டு பாதிரிகள் மூலம் கிறிஸ்தவ கல்வி நிலையங்களை கட்ட அனுமதித்து, ஒரு பக்கம் கல்விக் கொள்ளை மற்றொரு புறம் மதம் பரப்புதல் வேலைகளை செய்வது அவர்கள் வழக்கம்..
அப்படி உருவாக்கப்பட்டதுதான் சென்னை லயோலா கல்லூரி. சுமார் 100 ஏக்கர் நிலத்தில் துல்லியமாக கூறுவதென்றால் 99 ஏக்கர் நிலத்தில் இந்த கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. 1925ம் ஆண்டு ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சாதாரண சர்ச் மட்டுமே இருந்த அந்த வளாகம் 100 ஏக்கர் நிலம் கொண்டதாக மாறியது மாயமோ மந்திரமோ இல்லை. சேத்துப்பட்டு என்ற கிராமத்துக்கும் நுங்கம்பாக்கம் என்ற கிராமத்துக்கும் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்ட போது அங்கிருந்த மிகப் பெரிய ஏரியின் இரு பகுதிகளில் ஒரு பகுதியையும், அருகிலிருந்த பொறம்போக்கு நிலங்களையும் ஆங்கில அரசு கைப்பற்றிக் கொண்டது. அந்த நிலத்தை ஆங்கிலேய அரசு 100 ஆண்டு குத்தகைக்கு இந்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கும், இவர்களால் உருவாக்கப்பட இருந்த கல்லூரிக்கும் அளித்ததாகவும் தற்போது அந்த ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ரயில்பாதை அமைக்கப்பட்ட உடனே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டது போல கதிர் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். 1870களில் தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவை தொடங்கிவிட்டது. 1906-08ம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டுவிட்டது. ஆனால் லயோலா கல்லூரியோ 1924ம் ஆண்டுதான் தொடங்கியது. கதிர் செய்தி குறிப்பிட்டது உண்மை என்றால், சென்னை கடற்கரை தொடங்கி தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் பாதையில் ஒவ்வொரு ரயில் நிலையம் அருகிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனம்தான் இருந்திருக்க வேண்டும். நுங்கம்பாக்கம் (லயோலா கல்லூரி), தாம்பரம் (கிறிஸ்தவ கல்லூரி) என்று ஒரு சில கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து வேறு எந்த ரயில் நிலையம் அருகிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனம் இல்லை.
கதிர் செய்திகளில் “மிகச்சரியாக கூறுவது என்றால் 99 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவோ 96 ஏக்கர் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி இணையதளத்தில் தேடியபோது 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
“1925ம் ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பில் சர்ச் மட்டுமே இருந்த அந்த வளாகம் 100 ஏக்கராக மாறிவிட்டது” என்று கதிர் செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், லயோலா கல்லூரியின் வரலாறே வேறு விதமாகக் கூறுகிறது. 1924ம் ஆண்டு 75 மாணவர்களுடன் கல்லூரி தொடங்கப்பட்டதாகவும் கல்லூரி வளாகத்தில் உள்ள கிறிஸ்து அரசர் சர்ச் 1931ம் ஆண்டு கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Loyola College Website | Archived Link |
கதிர் நியூஸ் செய்தியில் கூட லயோலா கல்லூரி உள்ள இடம் பிரபலமான சிவன் கோவிலுக்கு சொந்தமானது என்று குறிப்பிடவில்லை. ஏரி புறம்போக்கு நிலத்தில் கல்லூரி அமைந்துள்ளதாகவும் 100 ஆண்டு குத்தகை முடிந்து காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுவதாகவும் ஏஷ்யமாகவே தெரிவித்துள்ளனர். எந்த ஒரு உறுதியான ஆதாரத்தையும் அவர்கள் அளிக்கவில்லை.
Loyola College Link | Archived Link |
கல்லூரி நிலம் வாங்கப்பட்டதா, குத்தகைக்கு எடுக்கப்பட்டதா இது குறித்து கல்லூரி இணையதளத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்று பார்த்தோம். கல்லூரியை நிறுவிய முதல்வர் பாதிரியார் பெட்ரோம் சென்னையில் ஒரு கல்லூரியைக் கட்ட நிதி திரட்ட ஐரோப்பாவுக்கு சென்றாராம். அப்போது முதல் உலகப்போர் முடிந்த சமயம் என்பதால் பெரிய அளவில் உதவி கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ரோமில் உள்ள அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு லட்சம் இத்தாலி லிரேவை போப் பெனடிக்ட் 15 வழங்கியுள்ளார்.
பாதிரியார் பெட்ரோம் திருச்சி புனித ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்து சென்னையில் கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்டவர். இதனால், திருச்சி புனித ஜோசப் கல்லூரியிடமிருந்து ரூ.2 லட்சம் கடனாகப் பெற்று கல்லூரிக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார். பல தேடல்களுக்குப் பிறகு நுங்கம்பாக்கம் ஏரிக்கரை சாலைக்கும் ரயில் நிலையத்துக்கும் இடையே 50 ஏக்கர் நிலத்தை ரூ.60 ஆயிரத்துக்கு வாங்கினார் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் நிலம் லீசுக்கு பெறப்பட்டது என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
நம்முடைய ஆய்வில்,
சென்னை லயோலா கல்லூரி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
தீவிர வலதுசாரி இணையதளமான கதிர் செய்திகள் கூட ஏரி புறம்போக்கு நிலத்தில் உள்ள கல்லூரி என்றே குறிப்பிட்டுள்ளது.
கல்லூரி அமைந்துள்ள நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்று உறுதியாகி உள்ளது. கல்லூரி தொடங்கப்பட்ட 1924-25ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.60 ஆயிரத்துக்கு 50 ஏக்கர் நிலம் வாக்கப்பட்டதாக கல்லூரி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், லயோலா கல்லூரி அமைந்துள்ள 96 ஏக்கர் இடம் இந்து ஆலயம் ஒன்றுக்கு சொந்தமானது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் லயோலா கல்லூரி?
Fact Check By: Chendur PandianResult: False
