நியூசிலாந்தைப் போல பெங்களூருவிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதா? - விபரீத ஒப்பீடு
நியூசிலாந்தை விட அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்திய எடியூரப்பாவை பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்பதால் ஊடகங்கள் பாராட்டவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நியூசிலாந்து மற்றும் பெங்களூருவை ஒப்பிட்டு புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், பாராட்ட மறந்த ஊடகங்கள்... காரணம் அது பிஜேபி ஆளும் மாநிலம். ஒரு நாட்டைவிட தன் நகரத்தின் நோயை கட்டுப்படத்திய தலைமை" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை I Support H.Raja என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 11ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நியூசிலாந்தின் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்தார் என்று சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவையும் நியூசிலாந்தையும் ஒப்பிட்டு பல செய்திகள் வெளியாகின. இரண்டு நாடுகளும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கை அமல்படுத்தின.
நியூசிலாந்து ஊரடங்கை அமல்படுத்தும்போது 205 நோயாளிகள் அங்கு இருந்தனர். இந்தியாவில் அப்போது 519 பேர் இருந்தனர். சீனாவிலிருந்து கேரளாவுக்கு வந்தவருக்கு கொரோனோ உறுதியானதற்கு அடுத்த நாள் அதாவது ஜனவரி 31ம் தேதி சீனாவுடனான விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்தியது... நியூசிலாந்தோ முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பதற்கு 24 நாட்களுக்கு முன்பு, அதாவது பிப்ரவரி 3ம் தேதி சீனாவுடனான விமான தொடர்பைத் துண்டித்தது என்று எல்லாம் பல்வேறு ஒப்பீடுகள் உள்ளன.
இந்த நிலையில் பா.ஜ.க ஆதரவாளர்கள் பெங்களூரு நகரத்துடன் நியூசிலாந்தை ஒப்பிட்டு பதிவை உருவாக்கியுள்ளனர். நியூசிலாந்தை விட இரண்டரை மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூரு நகரத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
எதன் அடிப்படையில் இப்படி ஒரு ஒப்பீட்டை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. எடியூரப்பா பெங்களூருவை மட்டும் ஆட்சி செய்யவில்லை, ஒட்டுமொத்த கர்நாடகாவுக்கும் அவர்தான் முதல்வர். கர்நாடகாவில் கொரோனா முற்றிலுமாக இல்லை என்ற நிலை வந்துவிட்டதா, அல்லது இவர்கள் ஒப்பீட்டின்படி பெங்களூருவிலாவது கொரோனா இல்லை என்ற நிலை உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது என்றும், தொற்று பாதிப்பு மண்டலங்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் 36ல் இருந்து 113 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2020 ஜூன் 12ம் தேதி கூட கொரோனா நோயாளி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஹல்சூர் பகுதி மலர்கள் சந்தை மூடப்பட்டதாகவும் செய்திகள் பல நமக்குக் கிடைத்தன.
கர்நாடக சுகாதாரத் துறை அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்த்தோம். அப்போது கர்நாடகாவில் 2020 ஜூன் 11ம் தேதி மாலை வெளியான அறிக்கை படி மட்டும் 204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் 17 பேர் பெங்களூரு நகர்ப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், பெங்களூரு நகரத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. பெங்களூரு நகரத்தில் கொரோனா பரவிக்கொண்டே இருக்கிறது, உயிரிழப்புக்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அதே நேரத்தில் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் 969 பேருக்கும், யாதகிரி மாவட்டத்தில் 735 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஜூன் 11ம் தேதி யாதகிரியில் புதிதாக 66 பேருக்கும், உடுப்பியில் புதிதாக 22 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கொரோனா குறைந்ததற்கு எடியூரப்பா காரணம் என்றால் உடுப்பி, யாதகிரி உள்ளிட்ட கர்நாடகாவின் இதர பகுதிகளில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்புக்கு யார் காரணம் என்ற கேள்வி எழுகிறது.
மேலும், கொரோனா பரவல் எப்போது அதிகரிக்கும், எப்போது குறையும் என்றே சொல்ல முடியாது. அது நிரந்தரமாக முடிவுக்கு வரும்பட்சத்தில்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியும். ஒரு நகரில் 100 பேருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், அது ஆபத்துதான். கொரோனாவை குறைத்து மதிப்பிட முடியாது.
நம்முடைய ஆய்வில்,
பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டதாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு வெளியான ஜூன் 11ம் தேதி மட்டும் பெங்களூருவில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 72 பேரும், பெங்களூரு நகரத்தில் மட்டும் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்துவிட்டதாக வெளியான செய்தி உண்மை. ஆனால், பெங்களூரு நகரத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள நியூசிலாந்து தொடர்பான தகவல் உண்மையானது என்றும் மற்ற தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:நியூசிலாந்தைப் போல பெங்களூருவிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதா? - விபரீத ஒப்பீடு
Fact Check By: Chendur PandianResult: Partly False