
சமூக செயற்பாட்டாளர் நந்தினி, இனி விபசாரம் செய்யமாட்டேன் என்று பேனர் எழுதி, கையில் பிடித்திருப்பது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த தொண்டு நாயை ,,,,கன்ட இடத்தில் செருப்பால் அடிக்கவும்,,,,,,
சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் கையில் ஒரு பேனரைப் பிடித்தபடி நிற்கிறார். அதில், “இனி விபச்சாரம் செய்ய மாட்டேன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதை தம்பி கோபாலன் என்பவர் மே 26ம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்துள்ளனர். பொது வெளியில் மிகவும் ஆபாசமான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருபவர் நந்தினி ஆனந்தன். சட்டக் கல்லூரி மாணவியாக இருக்கும்போது அவர் போராட்டத்தைத் தொடங்கினார். தற்போது வழக்கறிஞர் ஆகிவிட்டார். ஆனாலும், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட முறை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது விலக்கு மட்டுமின்றி, மின்னணு வாக்குப்பதிவு, அரசியல் என்று பல விஷயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். தொடர்ந்து பா.ஜ.க, அ.தி.மு.க அரசுக்கு எதிராக போராடி வருவதால் பா.ஜ.க-வினர் இவர் மீது வெறுப்பில் உள்ளனர். தன்னைத் தாக்க பா.ஜ.க-வினர் முயல்வதாகவும் நந்தினி குற்றம்சாட்டியிருந்தார். பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது மிகவும் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
தற்போது, இவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை ரத்து செய்துவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்றும் போராடி வருகிறார். இந்தநிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து மோடி வெற்றிபெற்றுள்ளார் என்று வருகிற 30ம் தேதி மதுரையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நந்தினிக்கு எதிராக பா.ஜ.க-வினர் எதிர்மறையான கருத்தை தெரிவித்து வருகின்றனர். தம்பி கோபாலன் என்பவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு சித்தரிக்கப்பட்டது என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அசல் புகைப்படத்தை நந்தினி ஆனந்தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். அப்போது, நந்தினி ஆனந்தன், 2019 பிப்ரவரி 27ம் தேதி வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.
கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வர இருந்த சூழலில் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ராணுவ வீரர்களின் படுகொலையை வைத்து ஓட்டு அரசியல் செய்யும் மோடியே பதவி விலகு. கண்டன போராட்டம். 01-03-2019 (காலை 9 மணி) கன்னியாகுமரி, கடற்கரை காந்தி நினைவு மண்டபம்” என்று உள்ளது. அதை கம்ப்யூட்டரில் பெயிண்ட் போன்ற மென்பொருளை பயன்படுத்தி அழித்து, தவறான கருத்தை எழுதியுள்ளது தெரிகிறது. இரண்டு படங்கள் ஒப்பீட கீழே…

இந்த பதிவை வெளியிட்ட தம்பி கோபாலன் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னுடைய அரசியல் பார்வைப் பற்றி எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடைய பதிவுகள் பா.ஜ.க ஆதரவு, சிறுபான்மையினர் வெறுப்பு தன்மை கொண்டதாக இருந்தது.

சமீபத்தில், வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் சென்ற இளம் பெண் ஒருவர், தங்கும் விடுதியில் ஐ.டி அடையாளம் கேட்டது பற்றி டிக்டாக் மூலம் தன்னுடைய கோபத்தை தெரிவித்திருந்தார். விவரம் இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் மோடியை திட்டி அந்த பெண் பேசியிருந்தார். அதற்கு, அவரை பாலியல் தொழிலாளிபோல சித்தரித்து பலரும் பதிவிட்டிருந்தனர். இவர் அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி என்றே உறுதி செய்து பதிவிட்டிருந்தார்.
கருத்து அரசியலைத் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கையை அசிங்கம் செய்யும் வகையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல பதிவுகள் அந்த ரகத்தைச் சார்ந்ததாகவே உள்ளது.
ஒருவருடைய கருத்தில் தவறு என்றால், அவருக்கு உண்மை என்ன என்று புரிய வைத்திருக்கலாம். ஆனால், அதைவிடுத்து தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியிருப்பது அருவருக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு விஷமத்தனத்தோடு வெளியிடப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சமூக செயற்பாட்டாளர் நந்தினி பற்றிய அவதூறு… எல்லை தாண்டிய ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Praveen KumarResult: False
