கர்நாடகாவில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கொடி கம்பம் உச்சியில் காவிக் கொடியை இளைஞர் ஒருவர் கட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்னாடகா : ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியேற்றிய மாணவர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Q7TV News என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 பிப்ரவரி 08ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய பெண்கள் புர்கா, ஹிஜாப் அணிந்து வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவே பிரச்னை வெடித்தது. இஸ்லாமிய மாணவிகளுக்கு போட்டியாக நாங்களும் காவி துண்டை அணிந்து வருவோம் என்று என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் கல்லூரி ஒன்றில் உள்ள தேசியக் கொடி ஏற்றும் கொடி கம்பத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டுக் காவிக் கொடியை ஏற்றியதாக ஊடகங்களில் செய்தி மற்றும் வீடியோ வெளியானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சன் டிவி உள்ளிட்ட ஊடகங்களில் ஷிமோகாவில் மாணவர்கள் தேசியக் கொடியை இறக்கிவிட்டுக் காவிக் கொடியை ஏற்றினார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், வீடியோவில் தேசியக் கொடியைக் கழற்றும் காட்சி இல்லை. காலியாக உள்ள கொடி கம்பத்தின் உச்சியில் காவிக் கொடியை கட்டுவது போலவே காட்சிகள் இருந்தன. 

ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தி.மு.க எம்.பி கனிமொழி கூட தேசியக் கொடி இறக்கப்பட்டது என்று ட்வீட் செய்திருந்தார். எனவே, உண்மையில் என்ன நடந்தது என்று ஆய்வு மேற்கொண்டோம்.

Archive

இது தொடர்பாகத் தேடிய போது தேசியக் கொடியை கழற்றுவது போன்று எந்த ஒரு வீடியோவும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஷிமோகா போலீஸ் தரப்பில் காலியாக இருந்த கொடி கம்பத்தில்தான் காவிக் கொடி ஏற்றப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archive

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் மாவட்ட எஸ்பி பி.எம்.லட்சுமி பிரசாத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் தேசியக் கொடிக்கு பதில் காவி கொடி ஏற்றப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலியாக உள்ள கொடி கம்பத்தின் முன்பு போராட்டம் நடத்திய பல படங்கள் உள்ளன என்று கூறினார்.

கல்லூரி முதல்வர் பிஆர் தனஞ்ஜெயாவை தொடர்புகொண்டு கேட்ட போது, “மாணவர்கள் போராட்டம் நடத்திய போது கொடி கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் காலி கொடி கம்பத்தில் ஏறித்தான் காவிக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடியை அவதிக்கும் எந்த ஒரு நிகழ்வையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் பெங்களூருவில் பணியாற்றி வரும் டைம்ஸ் நவ் ஊடகத்தின் முதன்மை செய்தியாளர் தீபக் போபன்னாவைத் தொடர்புகொண்டு கேட்கப்பட்டது. அவரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தின் போது கொடி ஏற்றப்பட்டது. அதன் பிறகு அந்த கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. போராட்டத்தின் போது காலியாக இருந்த கம்பத்தின் மீது தான் காவி கொடி ஏற்றப்பட்டது” என்றார்.

Archive

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கல்லூரி முதல்வர் அளித்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் காலை 10.15க்கு எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த படத்தில் கொடி கம்பத்தில் தேசியக் கொடி இல்லை. இதன் மூலம் காலியாக இருந்த கம்பத்தில் தான் காவிக் கொடியை ஏற்றினார்கள் என்பது உறுதியாகிறது.

தேசியக் கொடி கழற்றப்பட்டதாக எந்த ஒரு வீடியோவும் நமக்கு கிடைக்கவில்லை. கல்லூரி தரப்பு மற்றும் மாவட்ட போலீஸ் தரப்பில் தேசியக் கொடி கழற்றப்படவில்லை என்று உறுதி செய்துள்ளனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தேசியக் கொடியை கழற்றிவிட்டு, காவி கொடியை ஏற்றினார்கள் என்று பகிரப்படும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கர்நாடகாவில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False