காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை செய்யப்பட்டதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை நடந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

கோவில் கருவறைக்கு அருகில் ஒருவர் பாம்பை பிடித்தபடி நிற்க, அர்ச்சகர் அதற்கு பூஜை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவில் காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Panu Mathi என்பவர் Senthil Ganesh Rajalakshmi என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

பஞ்சபூத சிவதலங்களுள் வாயு தலமாக திருக்காளத்தி எனப்படும் காளஹஸ்தி கோவில் விளங்குகிறது. ராகு, கேது தோஷம் காரணமாக திருமணம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து நாக பிரதிஷ்டை பூஜை செய்வது வழக்கம். இதனாலோ என்னவோ நாகப் பாம்புக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், வீடியோவைப் பார்க்கும்போது காளஹஸ்தி கோவில் போல இல்லை. எனவே, சந்தேகத்தின் பேரில் வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

நம்முடைய தேடலில் பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. பாம்பு கோவில் என்று சிலர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், எந்த ஊரில் என்று குறிப்பிடவில்லை. எந்த கோவில், எங்கே உள்ளது என்று தெரியாமலேயே 2020ம் ஆண்டு எடுத்தது போல சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அப்படி ட்விட்டரில் வெளியான பதிவு ஒன்றில் இந்த கோவில் மலேசியாவில் உள்ள ஶ்ரீபிரத்தியங்கிரா தேவி சக்தி பீடம் கோவில், தமான் ரியா, ஜாசின், மலாக்கா, மலேசியா என்று குறிப்பிட்டிருந்தார்.

Archived Link

அதை அடிப்படையாக வைத்து மலாக்கா மாகாணத்தில் பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளதா, அங்கு நிஜ நாகத்துக்கு வழிபாடு நடத்தப்பட்டதா என்று அறிய கூகுளில் தேடினோம். அப்போது மலேசியாவில் ஒரு கோவில் இருப்பதும், அங்கு நடந்ததாகக் கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து தேடியபோது, ஜாசினில் பக்தர் ஒருவர் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகிறது என்று 2014ம் ஆண்டு வெளியான ஒரு செய்தி கிடைத்தது. ஶ்ரீ பிரத்தியங்கிரா தேவி சக்தி பீடத்தைச் சேர்ந்த அர்ச்சகர் எஸ்.சுப்பிரமணியம்தான் அர்ச்சனை செய்தவர் என்றும் குறிப்பிட்டு, அவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தனர். 

இதை அர்ச்சகரின் உறவினர் டவுன் லோட் செய்து காட்டியுள்ளார். அதை அவர் தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பினார். அதை அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்பினர். இப்படியே அந்த வீடியோ உலகம் முழுக்க பரவிவிட்டது. இந்தியத் தொலைக்காட்சிகளிலும் கூட இந்த வீடியோ ஒளிபரப்பானது. 

thestar.com.myArchived Link 1
mystiquearth.blogspot.comArchived Link 2

கர்நாடகாவில் ஒளிபரப்பாகும் ஸ்வர்னா டி.வி-யில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்று செய்தி வெளியிட்டனர். ஆனாலும் பலர் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்து எங்களுக்கு போன் செய்து வாழ்த்து கூறினார். சுவிட்சர்லாந்தில் இருந்து கூட அழைப்பு வந்தது. 

இந்த நாக பூஜை 2014 மே மாதம் நடந்தது. பாம்பு விஷம் மிக்கதாக இருந்தாலும், மந்திரம் சொல்லி பூஜை ஆரம்பித்த பிறகு அது அமைதியாகிவிட்டது. அடுத்த முறை நாக பூஜை செய்யும்போது வீடியோ எடுக்க இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஊடகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன” எனக் கூறியதாக குறிப்பிட்டு இருந்தனர். பூஜை தொடர்பான படங்களையும் அந்த செய்தியில் வெளியிட்டிருந்தனர்.

இதன் மூலம் இந்த வீடியோ காளஹஸ்தியில் எடுக்கப்பட்டது இல்லை. மலேசியாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் சேர்த்து பகிரப்பட்டுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை செய்யப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False