அமெரிக்காவில் எந்த ஒரு நாட்டு அமைச்சருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு ஜெய்சங்கருக்கு கிடைத்ததா?

அரசியல் இந்தியா சர்வதேசம்

அமெரிக்காவின் பென்டகனில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வேறு எந்த ஒரு நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கிடைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “புதிய சக்திவாய்ந்த இந்தியாவின் சக்திக்கு சாட்சி… இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பென்டகன் தலைமையகத்திற்கு வரவேற்றார். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் … தெரியவில்லை , வேறு எந்த நாட்டின் EA அமைச்சருக்கும் பென்டகன் வரலாற்றில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருக்குமா…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Raveendran UA என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

மற்றொரு பதிவில், மோடியின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே அமைச்சர் ஜெய்சங்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுப் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒரு வெளியுறவுத்துறை அமைச்சருக்கே இவ்வளவு வரவேற்பா? இந்தியாவின் ஆளுபவர் சரியான ஆளாக இருந்தால் அடிபணிபவன் சரியான முறையில் நடந்துகொள்வான். “இந்தியாடா” “மோடிடா ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை ஆறுமுக பாண்டியன் ஆனந்த் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்சங்கர். சமீபத்தில் இவர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Archive

இந்த நிலையில், அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனில், வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கிடைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளது. மோடியின் செயல்பாடு காரணமாகத்தான் இப்படிப்பட்ட வரவேற்பை அமெரிக்கா அளித்தது என்று வேறு சிலர் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் பென்டகனில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது இல்லையா என்று ஆய்வு செய்தோம்.

பென்டகனுக்கு மற்ற நாட்டுத் தலைவர்கள் வந்துள்ளார்களா, அவர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது என்று தேடிய போது, பல நாட்டுத் தலைவர்கள் அங்கு வந்திருப்பது தெரிந்தது. பாகிஸ்தான் தொடங்கி, வியட்நாம், இந்தோனேஷியா எனப் பல நாட்டுத் தலைவர்கள் பென்டகனுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது போன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

மோடி காரணமாகத்தான் ஜெய்சங்கருக்கு இப்படிப்பட்ட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்ததால், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியத் தலைவர்கள் யாராவது பென்டகனுக்குச் சென்ற வீடியோ கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது 2011ம் ஆண்டு இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த அட்மிரல் நிர்மல் வர்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோ கிடைத்தது. அதில் பீரங்கி குண்டுகள் வெடிக்க, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

இதன் மூலம் இதுவரை பென்டகனில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மட்டுமே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது. மேலும், 2011ல் இந்திய ராணுவ தலைமை தளபதிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், மோடி மிக வலிமையாக இந்தியாவை ஆட்சி செய்வதால்தான் பென்டகனில் ஜெய்சங்கருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது என்ற தகவலும் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

அமெரிக்காவின் பென்டகனில் உலகத் தலைவர்களில் யாருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு இந்தியாவின் ஜெய்சங்கருக்கு கிடைத்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அமெரிக்காவில் எந்த ஒரு நாட்டு அமைச்சருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு ஜெய்சங்கருக்கு கிடைத்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading