அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா ஸ்பெயினில் தொடங்கியதா?

இந்தியா சமூக ஊடகம் சர்வதேசம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையொட்டி ஸ்பெயினில் உள்ள இந்துக்கள் விழா கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1 Archived Link 2

வெளிநாட்டில் காவி கொடியோடு பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலம் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஸ்பெயினில் அயோத்தி ராமர் கோயிலுக்கான பூமி பூஜா தொடக்கம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Siva Priya Priya என்பவர் 2020 ஆகஸ்ட் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் மத்தியில் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஸ்பெயினில் அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி தொடக்கத்தையொட்டி ஊர்வலம் சென்றார்கள் என்ற தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஸ்பெயினில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு தளர்வு உள்ள நிலையில் ஊர்வலம் செல்ல அனுமதித்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், வீடியோவில் யாருமே முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. ஒருவர் கூட மாஸ்க் அணியாதது, இது பழைய வீடியோவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எனவே, வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமீபத்தில் அயோத்தியை மையப்படுத்தி இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதும், பல ஆண்டுகளாக இந்த வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருப்பதும் தெரியவந்தது. 

ஸ்பெயின் வீதிகளில் Dhol Tasha எனக் குறிப்பிட்டு யூ டியூபில் 2019, 2018ம் ஆண்டுகளில் இதே வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. எனவே இது 2018ல் எடுக்கப்பட்டதா, அதற்கும் முந்தியதா என்பதை அறிய, Dhol Tasha, ஸ்பெயின் போன்ற கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது, மகாராஷ்டிராவில் உள்ள இசைக்குழு ஒன்று ஸ்பெயின் சென்று இந்த ஊர்வலம் நடத்தியது தொடர்பான முழு வீடியோ நமக்கு கிடைத்தது.

தொடர்ந்து தேடிய போது மும்பையைச் சேர்ந்த தோல் தஷா இசைக் குழு ஸ்பெயினில் நடைபெற உள்ள சர்வதேச கிராமிய இசை விழாவில் பங்கேற்க உள்ளதாக 2018 ஜூன் 15ம் தேதி வெளியான செய்தி கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள இசைக் குழுவும், யூடியூபில் கிடைத்த இசைக் குழுவும் ஒன்றே என்பது தெரியவந்தது.

mid-day.comArchived Link

நம்முடைய ஆய்வில், சர்வதேச கிராமிய இசை விழா ஊர்வலத்தின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இந்த ஊர்வலம் 2018ம் ஆண்டு நடந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட Dhol Tasha ஊர்வல வீடியோவை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஸ்பெயினில் உள்ள மக்கள் கொண்டாடினர் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா ஸ்பெயினில் தொடங்கியதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False