கோவை குடிநீர் கோவிந்தா: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம்

‘’கோவை குடிநீர் கோவிந்தா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை, காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

கோவை குடிநீர் கோவிந்தா….!!!

கோவையை வச்சு செய்ய கங்கனம் கட்டிவிட்டார்கள் காவி கார்பரேட் கூட்டம்…

இனி திராவிட தேசிய கட்சிகளை நம்பி வாக்களித்தால்…
சர்வநாசம் நிச்சயம்….

Archived Link

கடந்த மார்ச் 26ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு வீடியோ மற்றும் புகைப்படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர்.

வீடியோவில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் பேசுகிறார். அவர், ‘’கோவை மாநகராட்சி சார்பாக நடைபெறும் குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற நிறுவனத்திற்கு தாரைவார்த்துவிட்டார்கள். பொலிவியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தண்ணீரை சுரண்டி மக்களை ஏமாற்றிய இந்நிறுவனம், அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டுவிட்டது. தற்போது கோவையில் இந்நிறுவனம் நுழைந்துள்ளது. மாநகராட்சி குடிநீர் விநியோகத்திற்கு, இனிமேல் கட்டணம் வசூலிப்பது, கிணறு, மழைநீர் சேகரிப்பு என அனைத்து வழிகளையும் சூயஸ் நிறுவனம் கட்டுப்படுத்தும். நம் மண்ணில் கிடைக்கும் நீருக்கு கட்டணம் வசூலிக்க, வெளிநாட்டு நிறுவனத்தை அனுமதித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது,’’ என்று அந்த நபர் பேசுகிறார்.

இதேபோல, புகைப்படத்தில், கோவை குடிநீர் கோவிந்தா, வருகிறான் கார்ப்பரேட், இனி மழைநீர் பிடிக்கவும் வழியில்லை, எனக் கூறியுள்ளனர்.

Sengazhuneer Tamizh Piriyan என்பவர் வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்னை தொடர்புடையது என்பதால், இந்த பதிவை பலரும் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கோவை குடிநீர் விநியோகம் தொடர்பாக முன்வைக்கப்படும் இப்பிரச்னை பற்றி கூகுளில் ஏதேனும் செய்தி ஆதாரம் கிடைக்கிறதா என, தேடிப் பார்த்தோம். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக, 2018ம் ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில் விகடன் இணையதளம் வெளியிட்ட 3 செய்திகளின் இணைப்பு கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\coimbatore 2.png

தேதி வாரியாக, இந்த 3 செய்திகளையும் படித்துப் பார்த்தோம். முதலில், ஜூன் 21ம் தேதி விகடன் வெளியிட்ட செய்தியை திறந்து படித்தோம். அதில், ‘’கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, 3,100 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால், குடிநீர் கட்டணம் உயருமா… பொதுக் குழாய்கள் நீக்கப்படுமா… அப்படி பொதுக் குழாய்கள் நீக்கப்பட்டால், அதை நம்பியிருக்கும் மக்களின் நிலை என்ன? பணம் இருப்பவர்களுக்குத்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுமா என்பன போன்ற பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பினர். மேலும் கோவை குடிநீர் விநியோகம், தனியார் மயமாக்கப்பட்டதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது,’’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் பற்றி கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் உள்ள குடிநீர்க் குழாய்கள், சேதமடைந்துள்ளதால், அவற்றை மாற்றியமைக்கவும் பராமரிக்கவும்தான் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம்தான் நியமிக்கும் என்று, அவர் கூறியுள்ளதாகவும், விகடன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதையடுத்து, ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்ட விகடன் செய்தியில், ‘’கோவை குடிநீர் விநியோக விவகாரம்; வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, கோவை மாநகராட்சி ஆணையாளரின் விளக்கத்தையும் மீறி, பலர் சமூக ஊடகங்களில், கோவை குடிநீர் விநியோகம் தொடர்பாக, சூயஸ் நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி வதந்தி பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\coimbatore 3.png

மேற்கண்ட விகடன் செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த விவகாரம் 2018ம் ஆண்டிலேயே வைரலாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்ததை அடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகம் உரிய விளக்கம் அளித்துள்ளதோடு, இந்த வதந்தியை பரப்பினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக, தெரியவருகிறது.

மேலும், கோவை மாநகராட்சி சார்பாக நடைபெறும் குடிநீர் விநியோகம் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில்தான், சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றபடி குடிநீர் விநியோகம், கட்டணம் நிர்ணயிக்கும் பொறுப்பு மாநகராட்சியின் வசம்தான் உள்ளது என்றும் நமக்கு தெரியவருகிறது. இதுதொடர்பாக, ஏற்கனவே, கோவை மாநகராட்சி, சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றையும் அளித்துள்ளதால், இதுபற்றி வீண் வதந்திகளை பகிர்வது சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு ஆபத்தாக முடியும் என, எச்சரிக்க விரும்புகிறோம்.

இதுதவிர மூன்றாவதாக, விகடன் வெளியிட்ட ஒரு செய்தியில், இந்த குடிநீர் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை கோவை மாநகராட்சி பகிரங்கமாக வெளியிடவில்லை என்பதால், இதில் சந்தேகம் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். கோவை மாநகராட்சி போலீசில் புகார் அளித்திருந்தாலும், இவ்விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இன்றி செயல்படுவதாக, தெரியவருகிறது. எனவே, கோவை மாநகராட்சி சொல்வதை முழுதாக, நம்பிவிட முடியாது.

அதேசமயம், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவலும், குழப்பமானதாக உள்ளது. வீடியோ ஆதாரம் நம்பகமானதாக இல்லை. அத்துடன், அதில் கூறப்பட்டுள்ள, ‘’கோவை குடிநீர் கோவிந்தா. கோவையை வச்சு செய்ய கங்கனம் கட்டிவிட்டார்கள் காவி காப்பரேட் கூட்டம், இனி திராவிட தேசிய கட்சிகளை நம்பி வாக்களித்தால், சர்வநாசம் நிச்சயம். வருகிறான் கார்ப்பரேட். இனி மழைநீர் பிடிக்கவும் உரிமையில்லை,’’ போன்றவை தவறான தகவல்களாகும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல், பாதி உண்மை மற்றும் பாதி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கோவை குடிநீர் கோவிந்தா: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Parthiban S 

Result: Mixture