பா.ஜ.க ஆதரவாளர்களிடம் மட்டும் ரூ. 40 லட்சம் கோடி கருப்பு பணம்: விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம்

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் ரூ.72 லட்சம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ரூ.40 லட்சம் கோடி பாஜ.க ஆதரவு பெற்ற தொழிலதிபர்களிடம் இருப்பதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியானதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவல் அறிவோம்:

Archived link

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அறிவிப்பு வெளியிடுவது போன்ற படத்தில், “இந்தியாவில் இருந்து பதுக்கப்பட்ட கருப்பு பணம் எழுபத்தி இரண்டு லட்சம் கோடி. அதில் பா.ஜ.க மற்றும் பா.ஜ.க ஆதரவு பெற்ற தொழிலதிபர்களின் பணம் மட்டுமே நாற்பது லட்சம் கோடி – ஆதாரத்துடன் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Smp Kasaali Mohideen என்பவர் மே 3ம் தேதி வெளியிட்டுள்ளார். எப்போது இந்த அறிக்கை வெளியானது, இதில் குறிப்பிட்டுள்ள பணம் ரூபாய் மதிப்பிலா, டாலர் மதிப்பிலா என்று எதுவும் இல்லை. தேர்தல் நேரம் என்பதால் இந்த தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பது குறித்து பல ஆண்டுகளாக பா.ஜ.க பேசி வருகிறது. 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையிலேயே கருப்பு பணம் மீட்பு பற்றித் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் பலமுறை இது குறித்து பிரச்னை எழுப்பினார் அத்வானி.

2014ல் மோடி அதை மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்தார். “கருப்பு பணத்தை மீட்டால் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்த முடியும்” என்றார். இதை எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் கேள்வி கேட்கத் தொடங்கின.

இதற்கு பதில் அளித்த பா.ஜ.க-வின் மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, “15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதி அளிக்கவில்லை. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தும் அளவுக்கு கருப்பு பணம் உள்ளது” என்று மட்டுமே மோடி பேசினார் என்றனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அப்படி இருக்கையில், பா.ஜ.க-வினர் மற்றும் பா.ஜ.க ஆதரவு பெற்ற தொழிலதிபர்களிடம் மட்டுமே ரூ.40 லட்சம் கோடி கருப்பு பணம் இருப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டு இருந்தது.

இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவலை வெளியிடுவேன் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியன் அறிவித்திருந்தார். ஆனால், அது தொடர்பான பட்டியல் ஏதும் வந்ததாக நினைவில் இல்லை. இதனால், ஜூலியன் அசாஞ்சே இந்திய கருப்பு பணம் தொடர்பாக ஏதேனும் பட்டியல் வெளியிட்டுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அதுபோல் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், 2011ம் ஆண்டு டைம்ஸ் நவ் எடிட்டர் இன் சீஃப்-க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “சுவிஸ் வங்கி உள்ளிட்ட உலகின் பல வங்கிகளில் பணம் பதுக்கியுள்ளவர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. வங்கிகள் தரப்பிலிருந்து சட்ட நெருக்கடி எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். கட்டாயம் அந்த தகவல் அனைத்தும் ஒருநாள் வெளிவரும்.

சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியலும் உள்ளது. ஆனால், அவர்கள் பெயர் எதுவும் என் நினைவில் இல்லை. நம்பிக்கை இழக்க வேண்டாம்… நிச்சயம் அவை ஒருநாள் வெளிவரும் என்று இந்திய மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதன்பிறகு இந்திய அரசு தரப்பில் வெளிநாட்டு வங்கிகளிடம் பேசி, பணம் பதுக்கியவர்கள் பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறப்பட்டு வருகிறது. முதலில் இவை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. நீதிமன்றத்தில் மட்டுமே இவை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ரகசிய ஆவணங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு செய்து வெளியிட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மத்திய அரசும் கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டியலை வெளியிட்டது. முதலில் ஐந்து பேர் பெயரும் பின்னர், ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி-யில் கணக்கு வைத்துள்ள 100 பேர் பெயரையும் வெளியிட்டது.

செய்தி 1

செய்தி 2

இதற்கிடையே மத்திய அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக, சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை தர சுவிஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 2019 செப்டம்பர் முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அதன்பிறகே, கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பா.ஜ.க-வினர் மற்றும் பா.ஜ.க ஆதரவு தொழிலதிபர்களிடம் மட்டும் ரூ.40 லட்சம் கோடி கருப்பு பணம் உள்ளது என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவலை நிரூபிக்க எந்த ஒரு செய்தியும் ஆதாரமும் கிடைக்கவில்லை.  இதன் மூலம், பா.ஜ.க-வுக்கு எதிராக விஷமத்தனமான தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பா.ஜ.க ஆதரவாளர்களிடம் மட்டும் ரூ. 40 லட்சம் கோடி கருப்பு பணம்: விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Praveen Kumar 

Result: False