காலை உணவுத் திட்டத்தை தொடங்குகிறதா தமிழக அரசு?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

EPS 2.png
Facebook LinkArchived Link

“வரலாற்றில் இடம் பெறுகிறார் தமிழக முதலமைச்சர். இந்தியாவின் முதல்முறையாக #தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு  காலை_உணவுத் திட்டம் அறிமுகம். இட்லி, சப்பாத்தி, பொங்கல் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பச்சைப்பயறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக்கஞ்சி, கொண்டைக்கடலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டம்” என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை Kishore K Swamy என்பவர் 2020 ஜனவரி 11ம் தேதி வெளியிட்டுள்ளார். 

EPS 3.png
Facebook LinkArchived Link

இதே நபர் அதே நாளில் மற்றொரு புகைப்பட பதிவை வெளியிட்டுள்ளார். அதில் காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. காமராஜர் படத்துக்கு அருகே மதிய உணவுத் திட்டம் தந்த முதல்வர் காமராஜர், சத்துணவு திட்டம் தந்த முதல்வர் எம்.ஜி.ஆர், பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா – முதல்வர் கருணாநிதி, 7 மாநிலங்கள் பின்தொடரும் அம்மா உணவகம் தந்த முதல்வர் ஜெயலலிதா, காலை உணவுத் திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை உணவுத் திட்டத்தை அறிவித்துவிட்டது போன்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சுதந்திரத்துக்கு முன்பு தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சி இருக்கும்போதே மதிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மதிய உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்தார் காமராஜர். அதை சத்துணவாக மாற்றினார் எம்.ஜி.ஆர். மதிய உணவோடு முட்டை, பயறு உள்ளிட்டவற்றை சேர்த்து வழங்கி அதை முழு சத்துணவாக மாற்றினார் கருணாநிதி. ஏழை மக்கள் வயிறார சாப்பிட மிகக் குறைந்த விலை உணவக திட்டத்தை கொண்டுவந்தார் ஜெயலலிதா. இதில் ஒருவரை மட்டும் விமர்சித்து பதிவிட்டுள்ளனர். அது பற்றிய அரசியலுக்குள் நாம் செல்லவில்லை.

இந்தியாவிலேயே முதன் முறையாகக் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தற்போது காலை உணவு வழங்கும் திட்டம் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் தொடங்கிவைத்தார். 

EPS 4.png
dinamani.comArchived Link

இதே போல் ஓசூரில் அசோக் லேலண்ட் நிறுவனமும் தொண்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து 70 அரசுப் பள்ளிகளில் பயிலும் 7800 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கின. 2015ல் இருந்து இப்படி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளுர் என்று பல மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கிடைத்தன. தஞ்சாவூரில் தேர்வு சமயத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இப்படி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் பல இடங்களில் பல நல்ல உள்ளங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் முதன்முறையாகப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார் என்று இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். 

dinamani.comArchived Link 1
hindutamil.inArchived Link 2

இந்தியாவில் வேறு எங்காவது பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறதா என்று தேடியபோது முழு மாநிலத்துக்கும் என்று இல்லாமல் மாவட்ட அளவில் சில இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதாக செய்திகள் கிடைத்தன. தமிழ்நாட்டில் தமிழக ஆளுநர் தொடங்கிவைத்த திட்டம் பற்றியே தெரியாத இவர், இந்திய அளவில் முதல் முறையாக என்று குறிப்பிட்டிருந்தது வேடிக்கையாக இருந்தது.

deccanherald.comArchived Link

தமிழகம் முழுக்க காலை உணவு திட்டத்தை கொண்டுவருவதாக தமிழக அரசு அறிவித்ததா என்று தேடினோம். அப்போது, “இது வெறும் வதந்தி” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிய செய்திகள் நமக்கு கிடைத்தன. தமிழ் சமயம் வெளியிட்டிருந்த செய்தியில், “அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவுவதைப் பார்த்தோம். அதில் அவ்வளவு சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் மதிய உணவு தயார் செய்து வழங்குவதற்கான நேரம்தான் சத்துணவு ஊழியர்களின் உள்ளது. இது வாட்ஸ்ஆப்பில் வந்திருக்கிற ஒரு வதந்தி. இது பற்றி நான் கருத்து கூற முடியாது. ஆனால் இது பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்றார்.

Archived Link 1tamil.samayam.comArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

தமிழகத்தில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஓராண்டாக காலை உணவு வழங்கப்பட்டு வரும் செய்திகள் கிடைத்துள்ளன.

ஓசூரில், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் உதவியோடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிவரும் செய்தி கிடைத்துள்ளது.

அரசு பள்ளிகளில், காலை உணவு வழங்கும் தமிழக அரசுக்கு திட்டம் உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார், அறிவிப்பு வெளியிட உள்ளார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காலை உணவுத் திட்டத்தை தொடங்குகிறதா தமிழக அரசு?

Fact Check By: Chendur Pandian 

Result: False