கொரோனா வைரஸ் போகர் எழுதிய பாடல் என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

Coronavirus சமூக ஊடகம் சர்வ தேசம் மருத்துவம் I Medical

கொரோனா வைரஸ் குறித்து போகர் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கொரோனா வைரஸ் குறித்து கி.மு. 400 நூற்றாண்டில் வாழ்ந்த போகர் சித்தர் பாடல் எழுதியுள்ளார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது என்று நாளிதழ் ஒன்று வெளியிட்ட நியூஸ் கிளிப் பகிரப்பட்டுள்ளது.

அதில், “கொரோனா வைரஸ் குறித்து கி.மு. 400ம் நூற்றாண்டில் போகர் சித்தர் எழுதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு உயிர் பலிகள் தொடர்ந்து வருகின்றன. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இந்தநிலையில், கி.மு 400ம் நூற்றாண்டிலேயே போகர் சித்தர் கொரோனா வைரஸ் பற்றி எழுதிய பாடலும் பொருளும் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது. அப்பாடலும், பொருளும் வருமாறு:

“சரவணனடி வாழ் அரவும்

விடப்பற் கொண்டு நெளியும்

வெட்டியதை புசிப்பவர் தம்

உடலில் சுவாசம் திணறும்

ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும்

உடற் மண்டலம் சிதைந்து

உயிர் போகுமே பறந்து.

பொருள்: முருகன் காலடியில் தவழும் விஷப்பல் கொண்ட பாம்பினத்தை கொன்று உண்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.. உடலில் ரோகம் பிடிக்கும் உடலின் நரம்பு மண்டலம் சர்வ நாசமடைந்து துர் மரணம் நிகழும்.

வாட்ஸ் ஆப்பில் இத்தகவல் வைரலாகி வர மற்றொருபுறம் இதற்கான மருத்துவ குறிப்புகளையும் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்” என்று உள்ளது.

இந்த பதிவை, K7 Tamil News என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி 13ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா வைரஸ் என்ற பொதுப் பெயர் நீண்ட காலமாக இருந்தாலும் புதிய வகை வைரஸ் கிருமிக்கு உலக சுகாதார நிறுவனம் இப்போதுதான் COVID-19 என்று பெயரையே சூட்டியுள்ளது. அதற்குள்ளாக அந்த காலத்திலேயே கொரானா வைரஸ் இருந்தது, அது பற்றி மருத்துவக் குறிப்பு உள்ளது, மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று ஆளாளாளுக்கு தகவல் பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் போகர் பாடிய பாடல், சிலப்பதிகாரத்தில் பாடல் என்று நிறைய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த போகர் பாடல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

போகர் பாடல் என்று கூறப்படுவதை காப்பி செய்து கூகுளில் தேடினோம். அப்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சமயம் இணைய ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது.

அந்த செய்தியில், “போகர் சித்தரின் பாடல்கள் தொகுப்பில் பெரும்பகுதி கண்ணிகளாக (இரண்டு வரிகளாக என்று பொதுவாகப் புரிந்து கொள்க) அமைக்கப்பட்டவை. முதலில், பரவும் இந்தப் பாடலின் வடிவம் அப்படியாக இல்லை. பிற்கால சித்தர்களின் இயைபுகளான காணப்பா, பூணப்பா போன்ற இயைபுகளும் காணப்படவில்லை.

மேலும் இதுகுறித்து அறிந்துகொள்ள சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழனை தொடர்பு கொண்டு கேட்டோம். சமயம் தமிழுக்கு பதிலளித்த அவர், “இது.நிச்சயமாக போகர் எழுதியது கிடையாது. உடல் மண்டலம் உடற் மண்டலம் என்றிருக்கிறது. இவை பிழைகள் என்று பொறுத்துக்கொண்டாலும் இது நல்ல செய்தியா என்றால் இல்லை. ஏதாவது மருத்துவக் குறிப்பை பரப்புவதற்காக யாராவது சித்த மருத்துவர்கள் தங்கள் குறிப்பை இந்த சித்தர் எழுதியது அந்த சித்தர் எழுதியது என்று சொல்வார்கள். அதில் கூட ஏதாவது நன்மை இருக்கும். ஆனால், இது முழுக்க முழுக்க பிரச்சார மனநிலையில் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

tamil.samayam.comArchived Link

இதன் மூலம் இந்த பாடல் போகர் எழுதியது இல்லை என்பது உறுதியானது. 

சமூக ஊடகத்தில் இந்த பாடல் தொடர்பாக தேடியபோது ஒரு பதிவு கிடைத்தது. “நண்பர் வெங்கடேஷ் ஆறுமுகம் சில நாட்களுக்குமுன் அவரே புனைந்த பாடலொன்றை போகர் சித்தருடையது என காமெடியாக பதிவிட்டார். அதை (தினமலர்)நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிட்டது.(அதில் நண்பரின் பெயரில்லை என்பதை கவனிக்க..)

கி.மு 400 ஆம் நூற்றாண்டில் (அதாவது 40000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு) எழுதப்பட்ட பாடலென்று குறிப்பிட்டிருந்ததைக்கூட அந்த பத்திரிக்கை கவனிக்கவில்லை.

அல்லது கவனித்திருந்தாலும் பரவாயில்லை..இதை நம்ப ஒரு முட்டாள் கூட்டம் இருக்கிறது என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். இப்போது அதை ஒரு டிக்டோக் பெண் மனப்பாடம் செய்து அபிநயத்துடன் விளக்குகிறார். எப்படியெல்லாம் மூட நம்பிக்கைகளும் பொய்களும் மக்களிடையே பரப்பப்படுகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.. அவர் எழுதிய பதிவு.. பதிப்பிக்கப்பட்ட பேப்பர் கட்டிங்.. அந்த பெண்ணின் டிக்டோக்.. உங்கள் பார்வைக்கு..” என்று குறிப்பிட்டிருந்தார்.

Facebook LinkArchived Link

அந்த வெங்கடேஷ் ஆறுமுகம் ஃபேஸ்புக் பக்கத்தை தேடி எடுத்தோம். அதில் அவர் வெளியிட்ட பதிவும், வதந்தியைப் பரப்பும் நோக்கில் இதை வெளியிடவில்லை என்று குறிப்பிட்ட பதிவும் கிடைத்தது.

Archived Link 1Facebook LinkArchived Link 2

இதன் மூலம், விளையாட்டாக செய்யப் போய், அதை மற்றவர்கள் உண்மை என்று நம்பி போகர் எழுதிய பாடல் என்று பரப்பி வருவது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், போகர் எழுதியது என்று பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனா வைரஸ் போகர் எழுதிய பாடல் என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False