
“மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
திருமாவளவன் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக பகிர்ந்துள்ளனர். திருமாவளவன் படத்தின் மீது, “மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது – திருமா” என்று உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் படத்தின் கீழ், “ஜல்லிக்கட்டிற்காகப் போராடிய லட்ச கணக்கான இளைஞர்களை (ஆண்கள், பெண்களை) இழிவுபடுத்திப் பேசிய திருமாவளவனே எம்.பி பதவியை ராஜினாமா செய்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டு இருந்தது.
இந்த பதிவை, தமிழ் தேசம் , தமிழனின் அடையாளம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 6ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:திருமாவளவன் சொல்லிய ஒற்றை வரியை வைத்துப் பார்க்கும்போது தவறாக பேசியது போலவே தெரிகிறது. அவர் பேச்சு முழுமையாக இதில் பதிவிடப்படவில்லை. எனவே, முழுமையான செய்தியைத் தெரிந்துகொள்ள கூகுளில் ஆய்வு செய்தோம். “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காண்டம் விநியோகிக்கப்பட்டது” என்று கூகுளில் டைப் செய்தபோது, திருமாவளவன் பேசியது தொடர்பாக பல ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் நமக்கு கிடைத்தன.
”ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காண்டம் விநியோகம்…” திருமாவளவன் சொன்ன அதிர்ச்சித் தகவல் என்று தலைப்பிட்டு விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முயற்சியாக, ‘மெரினா புரட்சி’ என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பாராட்டும் விழா நடந்தது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த விழாவில் தொல் திருமாவளவன் பேசுகையில், “மெரினா புரட்சி நம்முடைய புரட்சிதான். ஆனால், இதில் அரசியல் ஏதோ இழையோடுகிறது. போராடியவர்களை எந்த வகையிலும் நான் குறைசொல்லவில்லை. மெரினா புரட்சி நடந்த முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரையில் அரசு என்ன செய்தது என்பதை நாம் புலனாய்வு செய்யத் தேவை இருக்கிறது.
மெரினா புரட்சி நடந்துகொண்டிருந்தபோது அதில் கலந்துகொண்ட தம்பிகள் என்னிடம் வந்து அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னார்கள். ‘நாங்கள் யாருக்கும் கோரிக்கை விடவில்லை. ஆனால், தினம்தோறும் எங்களுக்கு உணவு பொட்டலங்கள் வந்துகொண்டே இருந்தன. எந்த கார்ப்பரேட் நிறுவனம் அனுப்பியது என எங்களுக்குத் தெரியாது. ‘போராடுகிறவர்களுக்குச் செய்யப்படும் உதவி’ என அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தோம். எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வோர் உணவுப் பொட்டலத்துக்குள்ளும் ஒரு காண்டம் (நிரோத்) இருந்தது. ‘இது எதற்காக? எங்களைக் கொச்சைப்படுத்துவதற்காகவா அல்லது வேறு என்ன காரணத்துக்காக என்று எங்களுக்குத் தெரியவில்லை’ எனச் சொன்னார்கள்.
இந்த விஷயம், இந்தப் படத்தை ஆய்வுசெய்த தோழர்களுக்குத் தெரியுமா, தெரியாதா என எனக்குத் தெரியாது. நான் அதை பார்க்கவில்லை. ஆனால், போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சொன்னார்கள். இந்தப் பின்னணியில் எதுவும் இருக்கட்டும். ஆனால், இதை ஆய்வுசெய்ய வேண்டியது இளைய தலைமுறையின் கடமை” என்று கூறினார்.
அதாவது, உணவுப் பொட்டலத்துடன் காண்டத்தை வைத்து போராடியவர்களை இழிவுபடுத்தும் முயற்சி நடந்தது. இதைப் பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து நக்கீரன் வெளியிட்ட செய்தியைப் படித்தோம். அதிலும் இந்த பேச்சு அப்படியே இருந்தது. எனவே, திருமாவளவன் பேச்சு வீடியோவை ஆய்வு செய்தோம். நக்கீரன் யூடியூப்-ல் நமக்கு அந்த வீடியோ கிடைத்தது.
தமிழ்நாட்டில் நிர்வாண சாமியார்கள்? என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த வீடியோவை ஆய்வில் திருமாவளவன் பேச்சைக் கேட்டோம். வீடியோவின் 3.17வது நிமிடத்தில் உணவுப் பொட்டலத்தில் காண்டம் இருந்தது என்ற பேச்சு தொடங்கியது. நாங்கள் யாரிடமும் கோரிக்கைவிடவில்லை என்று அவர் பேசியது அப்படியே அதிலிருந்தது.
திருமாவளவன் பேசியதன் முன், பின் பகுதிகள் நீக்கப்பட்டு ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்து திருமாவளவன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இழிவுபடுத்திவிட்டார் என்று பொய்யான தகவல் வெளியிட்டது தெரிந்தது.
நம்முடைய ஆய்வில்,
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி உணவு பொட்டலத்தில் காண்டம் வழங்கியதாக இளைஞர்கள் குற்றம்சாட்டியதாக திருமாவளவன் கூறிய செய்தி கிடைத்துள்ளது.
திருமாவளவன் பேச்சின் முழு வீடியோவும் கிடைத்துள்ளது. அதில், போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் நோக்கில் உணவு பொட்டலத்தோடு காண்டம் வழங்கப்பட்டது என்று குற்றம்சாட்டியது இருந்தது.
இதன் அடிப்படையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது என்று திருமாவளவன் பேசியது உண்மைதான் என்று உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் அப்படிக் கூறவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொச்சைப்படுத்த அப்படி யாரோ விஷமிகள் செய்தார்கள், அது பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று மட்டுமே திருமாவளவன் பேசியுள்ளார். ஆனால், திருமாவளவன் பேசியதை சுருக்கி, தவறான அர்த்தம் வரும் வகையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிட்டுள்ளது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் பொய்யான தகவலும் சேர்த்து வெளியிடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது- திருமாவளவன் பெயரில் பரவும் தகவல்
Fact Check By: Chendur PandianResult: Mixture

அந்த தகவலை தந்த இளைஞர்கள் யார் என்பதை திரு திருமாவளவன் சொல்வாரா அத்தனை லெடசம் பேர் இருந்த இடத்தில் இந்த தகவல் இதுவரை எப்படி வெளியாகமல் இருக்கும் .. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது