கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோமில் விநாயகர் வழிபாடு: வைரல் புகைப்படம் உண்மையா?

ஆன்மீகம் வரலாறு

‘’கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோமில் வழிபடப்பட்ட விநாயகர், அரிய புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

புரட்சி புயல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ‘’ மிக அரிய படம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ROME நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு. மிக பழமையான ரோம் விநாயகரை நீங்களும் ஷேர் செய்யுங்கள்,’’ என்று எழுதியுள்ளனர். ஆதாரத்திற்காக, செய்தி புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியில், விநாயகர் போன்ற புகைப்படம் உள்ளது. அத்துடன், ‘’பழங்காலத்தில் ரோமானியர்கள் சிவன் மற்றும் பார்வதியின் மகனான கணேசனை வழிபட்டுள்ளனர். ரோமானியர்களும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி,’’ என ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக விநாயகர் வழிபடப்படுகிறார். இதுதவிர புத்தம், சமணம் உள்ளிட்டவற்றிலும் விநாயகரை வணங்குகிறார்கள். இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில்தான் விநாயகர் பல்வேறு பெயர்களில் யானை முகத்துடன் வணங்கப்படுகிறார். இதுதவிர மேற்கத்திய நாடுகளில் பெரிய அளவில் விநாயகர் வழிபாடு கிடையாது. அங்கு குடியேறிய இந்திய அல்லது புத்தர்கள், சமண மதத்தினர் விநாயக வழிபாட்டை அறிமுகம் செய்திருக்கலாம்.

ஆனால், நாம் சந்தேதிக்கும் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, விநாயகரை ரோமானியர்கள் வழிபட்டார்களா என்ற சந்தேகத்தில் Yandex இணையத்தில் குறிப்பிட்ட புகைப்படத்தை பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது இது தவறான தகவல் என்றும், இதுதொடர்பாக ஏற்கனவே சில இணையதளங்கள் உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை சமர்ப்பித்துள்ளன என்றும் தெரியவந்தது. 

இதன்படி, ஐரோப்பியர்களுக்கு பிற்காலத்தில் சிவன், பார்வதி மற்றும் கணபதி (விநாயகர்) உள்ளிட்டோர் அறிமுகமான போது, தவறான பெயர்களில் அறிமுகமாகியுள்ளனர். அதாவது, சிவனுக்கு பெயர் Ixora (ஈஸ்வரன்), விநாயகருக்குப் பெயர் Quenevadi (கணபதி) என மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக லத்தீன் நாடுகளில் உள்ளது.
நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள புகைப்படம், கி.பி. 1673 முதல் 1733 வரை வாழ்ந்த ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் பெர்னார்ட் பிகார்ட் என்பவர் வரைந்ததாகும்.

பெர்னார்ட் பிகார்ட் வரைந்த மேலும் பல ஓவியங்களை பற்றி தெரிந்துகொள்ள இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும். குறிப்பிட்ட கணபதி ஓவியத்தை அவர் 1723 – 1743 ஆகிய இடைப்பட்ட ஆண்டுகளில் வரைந்திருக்கிறார். ஐரோப்பிய நாடுகளை கடந்து எங்கேயும் பயணம் செல்லாத அவர், கீழை நாடுகளில் காணப்படும் கடவுள் வழிபாடு பற்றியும், செவிவழிச் செய்திகள் மூலமாகக் கேள்விப்பட்டு, இந்த ஓவியத்தை அவர் வரைந்துள்ளார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 16, 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃபிரான்ஸ் நாட்டு ஓவியர் வரைந்த ஓவியத்தை, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே வரையப்பட்டதாகக் கூறி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர். இது தவறு என உறுதி செய்யப்படுகிறது.

 முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் பற்றிய செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோமில் விநாயகர் வழிபாடு: வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False