
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பசுக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
1.39 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதில் ஏராளமான பசுக்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. சில வெள்ள நீரில் நீந்தியபடியும் செல்கின்றன.
நிலைத் தகவலில், “கேரளாவில் பெய்த கனமழையால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சிந்தித்து செயல்படு என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஆகஸ்ட் 10ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேரளாவில் கடந்த மாதம் கன மழை பெய்து, பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வீடியோ கேரளாவில் எடுக்கப்பட்டது போல இல்லை. வீடியோவில் ஒரு வாகனம் செல்வதை காட்டுகின்றனர். அது இந்தியாவில் உள்ள வாகனம் போல இல்லை. வீடியோவின் கடைசியில் யாரோ சிலர் பேசுவது கேட்கிறது. அது மலையாளம் இல்லை.
எனவே, வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தது. எனவே, வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மத்தியப் பிரதேசம், கர்நாடகம் என்று பல மாநிலங்களில் இந்த சம்பவம் நடந்ததாக பலரும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதை காண முடிந்தது.
Free Press Journal என்ற வெரிஃபைடு பக்கத்தில் பசுக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லும் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும் வீடியோவில் பேசிய நபர்கள் பேச்சு லத்தீன், ஸ்பானிஷ் போல இருந்ததால் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது, 2020 ஜூலை இறுதியில் மெக்சிகோவில் ஏற்பட்ட கன மழை காரணமாக மிகப்பெரிய பாதிப்பு என்று வெளியான பல செய்திகளில் இந்த பசுக்களின் வீடியோக்களை வைத்திருந்தனர். அவற்றை மொழிமாற்றம் செய்து பார்த்த போது மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளி, மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமான பசுமாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதுதொடர்பாக, ஸ்பானிஷ் மொழியில் வெளியான செய்தி வீடியோக்களும் கிடைத்தன. அதில் பேசியவர்களின் மொழி கிட்டத்தட்ட வீடியோவில் கேட்ட மொழி போலவே இருந்தது. எனவே, அந்த குரல் ஸ்பானிஷ் மொழியாக இருக்கலாம். இதன் அடிப்படையில் மெக்சிகோவில் எடுக்கப்பட்ட வீடியோவை கேரளாவில் எடுத்தது என்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கேரள மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பசுக்கள்- வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
