வேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது?

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

வேலூர் இரும்பு பாலத்தின் பெருமை என்று பகிரப்படும் பதிவு ஒன்றில் பாலத்தின் திறப்பு விழா படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அது உண்மையில் வேலூர் பாலம்தானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

காட்பாடி அடுத்த திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட ராஜேந்திரா இரும்புப் பாலம் பற்றி புகழ்ந்து பதிவிடப்பட்டுள்ளது. அதில் பாலம் பற்றிய பல தகவல்கள், படங்கள் இடம் பெற்றிருந்தன. அதனுடன் பழைய படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் போல பகிரப்பட்டு இருந்து. இந்த பதிவை ‎Tamil Vanan‎ என்பவர்  History of Vellore (வேலூா் வரலாறு) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்திருந்தனர்.

உண்மை அறிவோம்:

ராஜேந்திரா பாலத்தின் பெருமையை பற்றி சந்தேகம் இல்லை. ஆனால், பாலத்தின் படத்துக்கும் பாலம் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படத்துக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண முடிந்தது. ராஜேந்திரா பாலம் மிகவும் விசாலமாக உள்ளது. ஆனால், பழைய படம் சற்று குறுகலாகவும், இரும்பு தூண்கள், சட்டங்கள் வேறுபட்டதாகவும் இருந்தது. எனவே, வேறு படத்தை எடுத்து பகிர்ந்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது.

ராஜேந்திரா பாலம் பற்றி அறிய கூகுளில் தேடியபோது, ஆனந்த விகடன், தினமணி. தினமலர் என பல ஊடகங்களில் அந்த பாலம் பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. தினமணி வெளியிட்ட செய்தி ஒன்றில் மேற்கண்ட பழைய படத்தை வெளியிட்டிருந்தனர். அதில் இந்த பாலம் ராஜேந்திரா இரும்பு பாலம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

dinamani.comArchived Link 1
vikatan.comArchived Link 2

இந்த பாலம் கட்டப்பட்ட பிறகே கொல்கத்தா ஹவுரா பாலம் என்று எல்லாம் எல்வேறு வியப்பூட்டும் தகவலை வெளியிட்டிருந்தனர். மேலும் இந்த பாலத்தை அப்போது சென்னை மாகாண பிரதமராக இருந்த ராஜகோபாலாச்சாரி திறந்து வைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் ராஜகோபாலாச்சாரி இல்லை. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள இரிட்டி இரும்பு பாலம் என்று பலரும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. மேலும், இரிட்டி பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படம் என்று குறிப்பிட்டு சில பதிவுகளும் கிடைத்தன. alamy.com என்ற இணையதளம் கூட இந்த புகைப்படத்தை விற்பனைக்கு வைத்திருக்கிறது. அதில் 1933ல் திறக்கப்பட்ட இரிட்டி இரும்பு பாலம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

alamy.comArchived Link 1
kallivalli.blogspot.comArchived Link 2

ராஜேந்திரா இரும்பு பாலத்தின் முகப்புத் தோற்றத்தைத் தேடினோம். அப்போது பழைய படத்துக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று தெரிந்தது. வடிவமைப்பில் வித்தியாசம் தெரிகிறது. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாலம் படத்தில் பாலம் தொடங்கும் இடத்தில் திண்டு போல கட்டப்பட்டுள்ளதை காண முடிகிறது. ராஜேந்திரா இரும்பு பாலத்தில் அப்படி திண்டு இல்லை. உருண்டை போன்ற வடிவமைப்பு இருக்கிறது. ஆனால், இரிட்டி இரும்பு பாலத்தில் திண்டு இருப்பதை காண முடிகிறது. இதன் மூலம், தினமணி தவறாக வெளியிட்ட படத்தை பலரும் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False