
டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இந்த பேஸ்புக் பதிவில், ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் பலரும் ஒருவர் பின் ஒருவராக ரயில் ஒன்றின் மேற்கூரையில் இருந்து, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்து வரிசையாக கீழே இறங்குவதைக் காண முடிகிறது. இதனை டிஜிட்டல் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவை பார்வையிட்டபோது, அதன் கமெண்ட் பகுதியில் பலரும் ‘இது வங்கதேசத்தில் நடந்த நிகழ்வு, இதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை,’ என்று கூறி கருத்து பகிர்ந்ததைக் காண முடிந்தது.
எனவே, நமக்கும் இது இந்தியாவில் நடந்ததா, வங்கதேசத்தில் நடந்ததா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அதன்பேரில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது வங்கதேசத்தில் நிகழ்ந்ததுதான் என்றும், இது கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் பரவி வருகிறது என்றும் உறுதியானது.
வங்கதேசத்தில் இத்தகைய ஆபத்தான ரயில் பயணங்கள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாடும் பொதுமக்கள் வேறு வழியின்றி இத்தகைய ஆபத்தான பயணங்களை செய்ய நேரிடுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய நடவடிக்கை எடுப்பது நலம்.
சமீப காலமாக, வங்கதேசத்தில் நிகழும் ஆபத்தான ரயில் பயணங்களை இந்தியாவுடன் தொடர்புபடுத்தி பகிர்வதைச் சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படியான ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவும்.
ஏற்கனவே இதுபோன்ற ரயில் பயணங்கள் பற்றி நாம் ஆய்வு செய்து உண்மைத்தன்மை வெளியிட்டிருக்கிறோம்.
FactCrescendo Tamil Link 1
FactCrescendo Tamil Link 2
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
