FACT CHECK: பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள்... எச்.ராஜா பெயரில் வதந்தி!
பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்றும், பெட்ரோல் விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று எச்.ராஜா கூறியதாக இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் இரண்டு பகிரப்பட்டுள்ளன. அதில், "பெட்ரோல் விலையை குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை - ஹெச்.ராஜா, பாஜக" என்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் - ஹெச்.ராஜா, பா.ஜ.க" என்றும் இருந்தது.
இந்த பதிவை, வண்டியூர் மணிகண்டன் என்பவர் 2021 பிப்ரவரி 26 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெட்ரோல் விலை உயர்வு பற்றி சில தினங்களுக்கு முன்பு எச்.ராஜா கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடுகையில் தற்போது குறைவாகவே விலை உயர்ந்துள்ளது என்று புது விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அவர் பெட்ரோல், விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்றோ, விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசியதாகவே எந்த செய்தியும் வெளியாகவில்லை. அப்படி இருக்கும்போது புதிய தலைமுறையில் மட்டும் எப்படி இந்த செய்தி வந்தது என்று ஆய்வு செய்தோம்.
நியூஸ் கார்டில் இந்த புகைப்படங்கள் 2021 பிப்ரவரி 20ம் தேதி வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, அந்த தேதியில் வெளியான புதிய தலைமுறை நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அப்போது, "பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் - ஹெச்.ராஜா, பாஜக" என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டு வெளியாகி இருப்பது தெரிந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியானது.
இதை மேலும் உறுதி செய்வதற்காக புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது, இந்த இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானது என்று அவர் உறுதி செய்தார்.
2021 பிப்ரவரி 20ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக எச்.ராஜா அளித்த பேட்டியைத் தேடினோம். தந்தி டிவி, புதிய தலைமுறை என எல்லா ஊடகங்களும் அந்த பேட்டியை வெளியிட்டிருந்தன. எதிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்று எச்.ராஜா கூறியதாக இல்லை.
அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்றும், பெட்ரோல் விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று எச்.ராஜா கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டுகள் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
எச்.ராஜா தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள்... எச்.ராஜா பெயரில் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: Altered