பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் பறக்கவிடப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "வாகா எல்லையில் புதிய இந்திய தேசியக் கொடி 360 அடி உயரத்தில் : செலவு ரூ 3.5 கோடி. 55 டன் எஃகு கொண்டு உறுதியான கொடிக்கம்பம். கிரேன் நிறுவ 60 லட்சம் வாடகை. கொடியின் அகலம் 120 அடி. கொடியின் உயரம் 80 அடி.

கொடி கம்பம் 360 அடி உயரம். 110 அடி தடிமனோடு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 12 கொடிகள் தயாராக உள்ளன. இது உலக சாதனை.

எப்போதும் போல் பாகிஸ்தான் ஆட்சேபனை செய்தது. ஆனால் இது இந்தியா - பாக் எல்லையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இந்திய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசு கூறிவிட்டது. இதற்கு அமைச்சர் திரு அனில் ஜோஷி முன்முயற்சி எடுத்துள்ளார் திரு சுமர்சிங் பி.எஸ்.எஃப் ஐ.ஜி அதில் பங்கேற்றார். நமது தேசியக் கொடி பட்டொளி வீசி எல்லையில் உயரமாக பறக்கிறது ... *MD.ராஜசேகர்* திருவண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை, Seshadri P S என்பவர் 2020 செப்டம்பர் 6-ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லைப் பகுதியில் 360 உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு அங்கு 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது உண்மைதான். ஆனால், அதன்பிறகு காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தேசியக் கொடி கிழியும் பிரச்னை ஏற்பட்டது.

பாகிஸ்தான் எல்லைக்கு சில மீட்டர் தொலைவில் இந்த கொடி கம்பம் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து பார்க்கும்போது இந்திய தேசியக் கொடி கிழிந்தபடி இருப்பது வேதனை அளிப்பதாக பலரும் புகார் கூறினர். இதனால் அங்கு 2017ம் ஆண்டிலேயே கொடி ஏற்றுவது நிறுத்தப்பட்டது. அது தொடர்பான விவகாரத்துக்குள் செல்லவில்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று இது வாகா எல்லையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியா என்று ஆய்வு செய்தோம்.

dailythanthi.comArchived Link

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இந்த வீடியோவை சில ஆண்டுகளாக பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. பல பதிவுகளில் இது எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஒரு வீடியோ பதிவில் இது ஐதராபாத் நகரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் அடிப்படையில் ஐதராபாத் நகரில் மிக பிரம்மாண்ட தேசியக் கொடி ஏற்றப்பட்டதா என்று தேடினோம். அப்போது, 2016ம் ஆண்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான, பிரம்மாண்டமான தேசியக்கொடியை ஐதராபாத்தில் ஏற்றினார் என்று செய்தி மற்றும் வீடியோ கிடைத்தன.

இந்த வீடியோக்களை ஆய்வு செய்தோம். அதில் இரண்டு வீடியோவிலும் பிரபல ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் வரும் ஜெய்ஹோ பாடல் இசை பின்னணியில் கேட்கிறது. கொடியேற்றப்படும் இடத்தின் தோற்றம் இரண்டு வீடியோக்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது. மேலும், விழா நடைபெறும் இடம் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தது.

hindustantimes.comArchived Link

இதன் மூலம் இந்த வீடியோ வாகா அட்டாரி எல்லையில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. அட்டாரி எல்லையில் தேசியக் கொடி அமைக்கப்பட்ட தகவலுடன் ஐதராபாத்தில் பறக்கவிடப்பட்ட கொடி வீடியோவை சேர்த்துப் பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் இது உண்மையுடன் தவறான தகவல் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் வெவ்வேறு செய்தி மற்றும் வீடியோவை இணைத்து வெளியிட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் உண்மையும் தவறான தகவலும் கலந்த பதிவாக உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வாகா எல்லையில் பறக்கும் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: Partly False