கொரோனா வைரஸ்க்கு ரோச் தடுப்பூசி தயார் என்று டிரம்ப் தெரிவித்தாரா?

Coronavirus மருத்துவம் I Medical

‘’கொரோனா வைரஸ்க்கு அமெரிக்காவைச் சேர்ந்த ரோச் நிறுவனம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டது,’’ என்று டிரம்ப் கூறியதாக, ஃபேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

மார்ச் 27, 2020 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ்புக் பதிவில் வீடியோ ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’அடுத்த ஞாயிறன்று ரோச் மெடிக்கல் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று டொனால்டு டிரம்ப் அறிவிப்பு,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், வீடியோவை பார்த்தால், கொரோனா வைரஸ் தொற்றை ஒட்டி, டொனால்டு டிரம்ப் தேசிய பேரிடர் அறிவிப்பை வெளியிடும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. 

முன்னுக்குப் பின் முரணாக உள்ள இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி என்று கூறி ஏற்கனவே ஒரு தகவலை பகிர்ந்திருந்தனர். ஆனால், அது கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியக் கூடிய டெஸ்ட் கிட் ஆகும். அதுபற்றி நாமும் ஆய்வு செய்து, உண்மை முடிவை வெளியிட்டிருந்தோம். 

FactCrescendo Tamil Link

இந்நிலையில்தான், மேற்கண்ட தகவல் கூடுதல் விவரம் சேர்க்கப்பட்டு, மீண்டும் பகிரப்பட தொடங்கியுள்ளது.

ஆனால், இந்த வீடியோவில் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்தால், Roche Diagnostics நிறுவனத்தின் வட அமெரிக்கப் பிரிவு தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி Matt Sause பேசுகிறார். பேச்சின் இடையே, தங்களது மருந்து சோதனைக்கு உடனடியாக அனுமதி அளித்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (FDA) நன்றி தெரிவித்துக் கொள்கிறார். அந்த காட்சியை மட்டும் எடிட் செய்து பகிர்ந்துள்ளனர்.

அதேசமயம், இதுதொடர்பான முழு வீடியோவும் நமக்குக் காணக் கிடைத்தது. அதில் எங்கேயும் டிரம்ப், வரும் ஞாயிறன்று கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என்று கூறவே இல்லை.

வீடியோவை கண்டாலே நமக்கு தெளிவாக விசயம் புரிகிறது. இதுதவிர, நமக்கு கிடைத்த மற்ற செய்தி விவரங்களை பார்வையிட்டபோது, நெருக்கடி காலத்தைக் கருத்தில் கொண்டு, ரோச் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவே குறிப்பிட்டுள்ளனர்.

இதனை சம்பந்தப்பட்ட Roche நிறுவனமே விளக்கமாகக் கூறியுள்ளது.

Roche.com LinkArchived Link 

     
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) ரோச் நிறுவனத்தின் கொரோனா தொற்று பரிசோதனைக்கு அமெரிக்க அரசு உடனடியாக அங்கீகாரம் அளித்துள்ளது. அது தடுப்பூசியோ, மருந்தோ அல்ல; வெறும் பரிசோதனை முறை மட்டுமே.

2) கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என்று எந்த இடத்திலும் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுப் பேசவில்லை.

3) குறிப்பிட்ட வீடியோவில் கூறியுள்ள தகவலை தவறாகப் புரிந்துகொண்டு, அதில் சில நொடிகளை மட்டும் எடிட் செய்து தனியே பகிர்ந்து, சமூக ஊடக பயனாளர்களை குழப்பி வருகின்றனர்.

4) ஏற்கனவே இதுபோல தென்கொரிய நிறுவனம் ஒன்று தயாரித்த ‘டெஸ்ட் கிட்’ புகைப்படத்தை வைத்துச் சிலர் வதந்தி பரப்பியதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:கொரோனா வைரஸ்க்கு ரோச் தடுப்பூசி தயார் என்று டிரம்ப் தெரிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False