நடிகர் சங்கத் தேர்தல் செய்தியை முதல் பக்கத்திலும், நதி நீர் இணைப்புத் திட்டம் தொடர்பான செய்தியை உள்ளேயும் போட்டு தமிழக ஊடகங்கள் விவஸ்தையே இல்லாமல் செயல்படுகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

MEDIA 2.png

Facebook Link I Archived Link

தினத்தந்தியில் வெளியான இரண்டு செய்திகளின் படத்தை வைத்துள்ளனர். முதல் படத்தில், தினத்தந்தியின் முதல் பக்கத்தில் நடிகர் சங்க வாக்குப் பதிவு செய்தியை வைத்துள்ளனர். அதன் கீழ், 13ம் பக்கத்தில் சிறிதாக வெளியான ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகளை இணைக்கும் திட்டம் செய்தியை வைத்துள்ளனர்.

இந்த படத்தின் மீது, "எது தலைப்பு செய்தியாகப் போட வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாத ஊடகங்கள்... தமிழ்நாட்டின் .... ஊடகங்கள்" என்று மிக மோசமாக விமர்சித்துள்ளனர்.

இந்த பதிவை, நாம் இந்துக்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூன் 24ம் தேதி வெளியிட்டுள்ளனர். இது உண்மை என்று நம்பி பலரும் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் உள்ள 60 நதிகளை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்று ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. உண்மையில் இந்த செய்தி 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தது என்றும், 60 நதிகளை இணைக்கும் பிரம்மாண்ட திட்டம் இன்னும் தொடங்கவில்லை என்றும் உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், எந்த செய்தியை பிரதானமாக வெளியிட வேண்டும் என்ற விவஸ்தையே பத்திரிகைகளுக்கு இல்லை என்று செய்தியை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் நடிகைகள் பங்கேற்ற நடிகர் சங்க தேர்தல் வாக்குப் பதிவு என்பதால் அதை முதல் பக்கத்தில் பிரதான செய்தியாக வெளியிட்டது போல் காட்டியுள்ளனர். ஆனால், 60 நதிகளை இணைக்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்ற செய்தியை சிறியதாக 13ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

அந்த செய்தி 2017ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெளியானது என்று அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கூட கவனிக்காமல், பிரதமர் மோடியை தமிழக ஊடகங்கள் புறக்கணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பரபரப்புக்காகவும் லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அவதூறான பதிவை வெளியிட்டது போல் தெரிகிறது.

MEDIA 3.png

ஒருவேளை, நதி நீர் இணைப்புச் செய்தியை 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் பக்கத்தில் வெளியிடவில்லை என்று கோபத்தில் இப்படி வெளியிட்டிருக்கலாம் என்று கூட தோன்றியது. அந்த செய்தியைப் படித்துப் பார்த்தாலே தெரியும், 5.5 லட்சம் கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படும் என்றும், இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க விழா நடைபெறலாம் என்றும் யூகத்தின் அடிப்படையில் அந்த செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தால் கட்டாயம் அந்த செய்தி முக்கிய செய்தியாகவே வந்திருக்கும். இந்த திட்டம் தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணைய தளத்தை ஆய்வு செய்தபோது தொடங்கியதாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. நதி நீர் இணைப்புத் திட்டம் இன்னும் முழு செயல்வடிவம் பெறவில்லை, சுற்றுச்சூழல், வனம்த் துறை அனுமதி பெற வேண்டியுள்ளது, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, இதனால் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டு, புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய ஜல சக்தி அமைச்சகம் இணைய தளத்திலேயே விரிவாக குறிப்பிட்டிருப்பதை காண முடிகிறது. அப்படி இருக்கும்போது உறுதி செய்யப்படாத செய்தியை உள்ளே சிறியதாக வெளியிட்டதற்கு கோபப்படுவதில் நியாயமே இல்லை.

Archived link

மோடி செய்தியை தினத்தந்தி முதல் பக்கத்தில் வெளியிடாமல் புறக்கணிக்கிறதா என்று பார்த்தால் அப்படியும் இல்லை... உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு, நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி, பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்றார் என்று அந்த அந்த நேரத்தில் முக்கியமான செய்தி எதுவோ அதைத் தினத்தந்தி முதல் பக்கத்தில் வெளியிட்டு வந்ததைக் காண முடிந்தது.

MEDIA 4.png
MEDIA 12.png

நம்முடைய ஆய்வில்,

ரூ.5.5 லட்சம் கோடி செலவில் நதி நீர் இணைப்புத் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் திறந்து வைக்கிறார் என்ற செய்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சரவை ஒப்புதல் அளித்து திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ செய்தி ஏதும் வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2017 செப்டம்பர் 2ம் தேதி வெளியான செய்தி கிளிப்பை, 2019 ஜூன் 24ம் தேதி வெளியான செய்தி கிளிப்புடன் இணைத்து தவறான தகவலைப் பகிர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தொடர்பான செய்திகளும் தினத்தந்தி முதல் பக்கத்தில் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு விஷமத்தனமானது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“தலைப்புச் செய்தி போட தெரியாத ஊடகங்கள்!” – ஃபேஸ்புக் பதிவின் உண்மை

Fact Check By: Praveen Kumar

Result: False