“இழிவாக பேசியவரின் கையை உடைத்த போலீஸ்?” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா!

சமூக ஊடகம் சமூகம்

சென்னையில் குடி போதையில் தகராறு செய்த இளைஞரின் கையை போலீசார் உடைத்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு போலீசை தாக்கிய இஸ்லாமியர்களை எதுவும் செய்யவில்லை ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

POLICE 2.png

Facebook Link I Archived Link 

கையில் கட்டுப்பட்ட இளைஞர் ஒருவரின் படமும், போலீஸ்காரரை இரண்டு பேர் தாக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “குடிபோதையில் காவலர்களை இழிவாக பேசியவனின் கையை உடைத்தனர் காவல்துறையினர்… சூப்பர். இதே மாதிரி நடுரோட்டில் 6-7 இஸ்லாமியர்கள் ஒரு காவலரை போட்டு அடித்தனரே சில நாட்கள் முன்பு… அடித்த எந்த இஸ்லாமியனாவது கட்டுப் போட்டானா?? அந்த காவலரைதான் டிரான்ஸ்பர் செஞ்சீங்க. காக்கி சட்டை மீது வை வைத்த இவர்கள் கையும் உடைந்திருக்க வேண்டாமா” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Hindu Munnani Jaikarthick என்பவர் ஜூன் 27, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போலீசாருடன் இளைஞர் ஒருவர் தகராறு செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அது அமைச்சர் சி.வி.சண்முகம் மகன் என்று வதந்தி பரப்பப்பட்டது. அது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டது. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் நவீன், கையில் கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. போலீசார் அவரது கையை உடைத்துவிட்டதாகவும், சில தினங்களுக்கு முன்பு 6-7 இஸ்லாமியர்கள் ஒரு காவலரை அடித்ததாகவும், அவர்கள் கை உடைக்கப்பட்டதா, எந்த இஸ்லாமியராவது கட்டு போட்டு இருந்தார்களா, அடி வாங்கிய காவலர்தான் இட மாற்றம் செய்யப்பட்டார். காவலரை அடித்த இஸ்லாமியர்களின் கைகள் உடைக்கப்படவில்லை. அதை உடைத்திருக்க வேண்டாமா என்று குற்றச் சம்பவத்துக்கு மத சாயம் பூசி பதிவை வெளியிட்டிருந்தனர். 

நவீன் கையை போலீஸ்தான் உடைத்ததா என்று அறிய, சென்னை நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “சமூக ஊடகங்களில் தொடர்ந்து தவறான தகவல் பரவுகிறது. அமைச்சர் ஒருவரின் மகன் என்று முதலில் வதந்தியைப் பரப்பினார்கள். இப்போது போலீசார் அந்த இளைஞரின் கையை அடித்து உடைத்துவிட்டதாகப் பரப்புகிறார்கள். 

உண்மையில், சம்பவத்தன்று அந்த இளைஞரைப் பிடிக்க முயற்சி செய்தோம். அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்த அவர், சாலை தடுப்பு ஒன்றில் ஏறி குதிக்க முயன்றார். அப்போது கீழே விழுந்து சாலைத் தடுப்பில் இடித்ததில் அவருக்குக் கையில் அடிபட்டது. அவருக்கு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தோம். பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகே அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” என்றார்.

இதன் மூலம், இளைஞரின் கையை போலீசார் உடைத்தார்கள் என்பது தவறு என்று உறுதியானது.

காவலரை தாக்கிய இஸ்லாமியர்கள் பற்றிய செய்தியில் உண்மை உள்ளதா என்று ஆய்வு செய்தோம். இந்த சம்பவம் ஜூன் 13ம் தேதி நடந்ததாக, இந்து தமிழ் திசையில் ஜூன் 14ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், திருநங்கைகளுடன் பேசிக்கொண்டிருந்தவர்களை காவலர் கார்த்திகேயன் கலைந்து செல்லும்படி கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் கார்த்திகேயனை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று செய்தி வெளியாகியது. கார்ததிகேயன் இட மாற்றம் செய்யப்பட்டதால் காவலர்ள் மத்தியில் கொந்தளிப்பான மனநிலை உள்ளதாகவும், அதனாலதான் காவலரை நான்கு பேர் தாக்கும் வீடியோ வெளியானது என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கவனத்துக்குச் சென்றது. அவர் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், இந்த நான்கு பேரும் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாது. அதே நேரத்தில், காவலரை இட மாற்றம் செய்து உத்தரவிட்ட உதவி ஆணையரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம், காவலைத் தாக்கிய நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. ஓராண்டுக்கு அவர்களால் ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

இளைஞரின் கையை போலீசார் உடைத்தார்கள் என்ற செய்தி தவறானது என்று இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

காவலரைத் தாக்கிய நான்கு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு பேரும் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“இழிவாக பேசியவரின் கையை உடைத்த போலீஸ்?” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா!

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •