
‘’ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை மிரட்டி இழிவுபடுத்திப் பேசினார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
ஆம் நாங்கள் சமூக விரோதிகள் எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் கடை அமைக்கக் கோரி மனு கொடுக்கச் சென்ற இஸ்லாமியர்கள் சிலரை மிரட்டியதோடு, இழிவுபடுத்தி தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் தற்போது நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ஆளுங்கட்சியான அஇஅதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, ஆளுங்கட்சி என்பதால், இந்த தொகுதிகளில் வெற்றியை தக்க வைக்கும் நோக்கில் அஇஅதிமுக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில்தான், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை ராஜேந்திர பாலாஜி இழிவுபடுத்தியதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம்தான். இதனால், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியும் உண்மை என பலராலும் நம்பப்படுகிறது.
இதுபற்றி விகடன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் சிலர் ரேஷன் கடை அமைக்கக் கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் அவர்களை அமைச்சர் மிரட்டிப் பேசியதாகவும் கூறி, ஆதாரத்திற்கு சிலரது பேட்டியையும் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இச்செய்தி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தவரிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளதால், இதற்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இதில், ‘’என்னைச் சில இஸ்லாமியர்கள் சந்திக்க வந்தனர். கையில் மனு ஒன்றை வைத்திருந்தனர். ஆனால், அது என்ன விவகாரம் என முழு விளக்கம் அளிக்காமல் திடீரென என்னை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச எனக்கு நேரம் இல்லாததால் தேர்தல் பணிகளை பார்க்க, கிளம்பிவிட்டேன். ஆனால், இதனை தவறாக சித்தரித்து திமுக.,வினர் வேண்டுமென்றே வதந்தி பரப்பும் பணிகளைச் செய்துவருகின்றனர். இது தேர்தல் காலம் என்பதால் அஇஅதிமுக வெற்றியை பாதிப்பதற்காக, அவர்கள் இப்படி செய்கிறார்கள். அதனை யாரும் நம்ப வேண்டாம்,’’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
இதேபோல, தினத்தந்தி, தினகரன் உள்ளிட்ட ஊடகங்கள் ராஜேந்திர பாலாஜி பற்றிய செய்தியின் உண்மைத்தன்மையை வெளியிட்டுள்ளன. அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Dailythanthi News Link | Dinakaran News Link | Etvbharat Tamil Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை இஸ்லாமியர்கள் சிலர் சந்தித்துப் பேசியது உண்மைதான்.
2) ஆனால், இரு தரப்பும் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். உள்ளே ஒன்று நடந்திருக்கலாம், வெளியில் இரு தரப்பும் தங்களுக்குச் சாதகமான தகவலை மட்டுமே சொல்வதாக, தோன்றுகிறது.
3) ராஜேந்திர பாலாஜி இதுபற்றி உரிய விளக்கம் அளித்துள்ளார்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில், பாதி உண்மை, பாதி உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை இழிவுபடுத்தினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
