மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி கலந்துகொண்ட வந்தே பாரத் ரயில் பயண தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. #pmmodi Narendra Modi #narendramodi #northernrailway #vandhebharatrail

Archived link 1

Archived link 2

பிரதமர் மோடி, பச்சை நிற கொடியை அசைத்து ரயில் பயணத்தை தொடங்கி வைக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், மோடி கலந்துகொண்ட தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவிடப்பட்டுள்ளது – ஆர்டிஐ மூலம் அம்பலம்! என்ற செய்தி இணைப்பு உள்ளது. இந்த செய்தியை 2019 மே 22ம் தேதி கலைஞர் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பலரும் உண்மை என்று பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி வரை சென்று வரும் வகையில் இந்த அதிவிரைவு, சொகுசு ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்திகளை கூகுளில் தேடினோம். அப்போது, டி.என்.ஏ பத்திரிகையில் வெளியான படங்கள் நமக்கு கிடைத்தன. அதில், மேடை ஆடம்பரமானதாக இல்லை. மிக எளிமையாக இருந்தது.

ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்க ஒன்று முதல் இரண்டு அடி வரை உயர்த்தி சிவப்பு நிற மேடை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. அதற்கு மேற் கூரை கூட இல்லை. அந்த மேடையில் நின்றுதான் பிரதமர் மோடி கொடியை அசைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு 52 லட்ச ரூபாய் செலவா என்று அதிர்ச்சியடைந்தோம்.

Vande Bharat Express 2.png

கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வடக்கு ரயில்வே பதில் அளித்துள்ளது. பதில் கடிதத்தின், படத்தை வெளியிட்டிருந்தனர்.

அந்த கடிதத்தில், “டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்பட்ட வந்தே எக்ஸ்பிரஸின் 15-2019 அறிமுக பயணம் தொடர்பான தங்களின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேடை அமைத்தல், வாட்டர் ப்ரூஃப் பேனல், எலக்ட்ரிக்கல், சிக்கல் மற்றும் தொலைத்தொடர்பு  உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.52,18,400 செலவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், Inaugration என்று மட்டுமே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அறிமுக பயணம் என்று பொருள் கொள்வது சரியாக இருக்கும். Inauguration Function என்று பொருள் கொள்வது சரியாக இருக்காது.

இது தொடர்பாக வேறு என்ன செய்திகள் வெளியாகி உள்ளது என்று ஆய்வு செய்தோம். governancenow.com என்ற இணையதளத்தில் மே 21ம் தேதி இந்த செய்தி வெளியானது தெரிந்தது. (கலைஞர் செய்திகளில் வெளியாவதற்கு முதல் நாள்)

அதில், இன்னும் சற்று விரிவாக இந்த செய்தி இருந்தது. அதில், ரயில் தொடக்க பயண செலவு என்று இருந்தது. அதாவது, டெல்லியில் நடந்த தொடக்க விழாவை தொடர்ந்து, ரயில் வாரணாசி வரை ரயில் இயக்கப்பட்ட செலவு தொகை ரூ.52,18,400 என்று கூறப்பட்டு இருந்தது.

Vande Bharat Express 3.png

மேலும், ஆர்.டி.ஐ-யில் முதல்நாள் பயணத்தின் வருவாய் எவ்வளவு, யார் எல்லாம் பயணம் செய்தார்கள் என்றும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, “முதல்நாள் என்பதால் அதில் பொது மக்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை” என்று கூறப்பட்டு இருந்தது.

முதல்நாள் ரயில் பயணத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உத்தரப்பிரதேச அமைச்சர் ரீட்டா உள்ளிட்டவர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி முதலில் கலைஞர் செய்திகளில் வெளியாகி உள்ளது. இதை கிட்டத்தட்ட அப்படியே எடுத்து, ஆர்.டி.ஐ-யில் பெற்ற விவரத்தை தமிழில் மொழிபெயர்த்து சேர்தது ஒன் இந்தியாவில் வெளியிட்டுள்ளனர்.

Archived link

Vande Bharat Express 3A.png

மேலும் கலைஞர் செய்திகளில், அறிமுக பயணத்தின்போது ரயிலில் கோளாறு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உண்மையில், வாரணாசியில் இருந்து டெல்லிக்கு வரும்போதுதான் ரயில் பெட்டியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் செய்தியில் வட இந்திய ரயில்வே என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அதற்கு பெயர் வடக்கு ரயில்வே. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ரயிலேயே, தென் இந்திய ரயில்வே என்று நாம் கூறுவது இல்லை. தெற்கு ரயில்வே என்றே அழைக்கிறோம்.

Vande Bharat Express 4.png

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வந்தே பாரத் அறிமுக பயண செலவை, தொடக்க விழா செலவு என்று தவறாக குறிப்பிட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா?

Fact Check By: Praveen Kumar 

Result: False