தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க சொன்னாரா உதயநிதி ஸ்டாலின்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Udayanidhi 2.png
Facebook LinkArchived Link

உதயநிதி ஸ்டாலின் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றின் படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே படமாக பதிவிட்டுள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்” என்று உள்ளது.

படத்தின் கீழ் பகுதியில், “தீபாவளி வருதுன்னா பட்டாசு கொளுத்தாம, உன்னையும், உங்கப்பாவையும் நிக்கவச்சா கெகாளுத்துவாங்க!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்கும்படி உதயநிதி கூறியது போன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Ponni Ravi என்பவர் 2019 அக்டோபர் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த 2019 செப்டம்பர் மாதம் சென்னை பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளம் பொறியாளர் சுபஶ்ரீ பேனர் விழுந்ததில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கக் கூடாது என்று தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டன. அதேபோல், பட்டாசு வெடித்து வரவேற்பு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அவர் எங்கும் கூறியதாக நினைவில் இல்லை.

puthiyathalaimurai.comArchived link 1
Hindu TamilArchived Link 2

இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். “பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்” என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, குன்னூரில் நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின்போது, “திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததுபோல பேனர்களை திமுகவினர் தவிர்த்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் சாலையில் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு தருகின்றனர். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசுகளை வெடிப்பதையும் தி.மு.க-வினர் தவிர்க்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய செய்திகள் நமக்கு கிடைத்தன. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் எங்கும் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 

Archived Link
DinamalarArchived Link

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் எப்போதாவது கூறினாரா என்று அறிய, தி.மு.க இளைஞர் அணியின் அலுவலகமான அன்பகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அன்பகம் கலை என்பவர், “குன்னூரில் நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் சென்றபோது பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்து வரவேற்பு அளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். குறிப்பிட்ட எந்த ஒரு மத விழாவின்போதும் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று எல்லாம் அவர் கூறவில்லை. சமூக ஊடகத்தில் இதுபோல் தொடர்ந்து பல வதந்திகள் பரப்பி வருகின்றனர்” என்றார்.

இந்த பதிவை வெளியிட்ட பொன்னி ரவியின் பின்னணி பற்றி ஆய்வு செய்தோம். ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பொய்யான, வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிட்டு வருபவர் பொன்னி ரவி… இவர் போடும் பதிவுகளை பலரும் ஷேர் செய்கின்றனர், புகாரும் செய்கின்றனர். இதனால், அந்த ஃபேஸ்புக் பதிவுகளின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம். ஆனாலும் தொடர்ந்து வதந்தியை பரப்புவதே தன்னுடைய கடமை என்று இருந்து வருகிறார் பொன்னி ரவி. பொன்னி ரவி வெளியிட்ட பதிவு தொடர்பாக நாம் மேற்கொண்ட ஆய்வுகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம்…

இந்தியா என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்சனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளதா? 
திமுகவினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை என்று இம்ரான் கான் அறிவித்தாரா? 
திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒரு கிறிஸ்தவர் – விஷம பிரசாரம் செய்யும் ஃபேஸ்புக் பதிவர்கள்!

நம்முடைய ஆய்வில்,

சுபஶ்ரீ இறந்த நேரத்தில் பேனர் வைக்க வேண்டாம் என்று பலரும் கேட்டுக்கொண்டதைப் போல, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று உதயநிதி கூறிய செய்தி கிடைத்துள்ளது.

இந்த தகவலை மாற்றி, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று உதயநிதி கூறியதாக பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை என்று இளைஞரணி நிர்வாகி உறுதி செய்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க சொன்னாரா உதயநிதி ஸ்டாலின்?

Fact Check By: Chendur Pandian 

Result: False