திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்ற பெயர் கொண்ட உணவகம் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Trichy 2.png
Twitter LinkArchived Link

திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்று ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் பெயர் பலகை உள்ள ஒரு உணவகத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "வட இந்தியர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்யும் மதுரை கோயில் வாசல்ல இந்தியாவில் அதிகம் பேசும் இந்தியில் எழுதி இருந்தாக சேட்டுகிட்ட சண்டைக்குப் போன "ஆம்பள" திருச்சியில் இந்த கடைக்குப் போய் ஏன்டா இந்த நாட்டிலேயே இல்லாத அரபு பாஷையில போர்டு வெச்சேன்னு கேட்பானா????" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, MANIKANDAPRABHU NAIDU என்பவர் அக்டோபர் 7, 2019 அன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Trichy 3.png
Facebook LinkArchived Link

இதேபோல், Raman Iyengar என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதே படம் மற்றும் பதிவை அக்டோபர் 8, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள கடை ஒன்றில் முழுக்க முழுக்க இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த வழக்கறிஞர் ஒருவர், தமிழ்நாட்டில் சட்டப்படி தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளனர்.

DinakaranArchived Link

திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்று ஆங்கிலத்திலும் அரபியிலும் எழுதப்பட்டுள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த உணவகம் திருச்சியில் உள்ளது என்று நிலைத் தகவலில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் திருச்சியில் எந்த இடத்தில் உள்ளது என்று குறிப்பிடவில்லை. கடையின் பெயரில் திருச்சி உள்ளதால் திருச்சியில்தான் இது இருக்கிறது என்று பார்ப்பவர்கள் நம்பிவிடுவார்கள் என்று விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

திருச்சி என்பது தமிழகத்தின் பெரிய மாநகரங்களுள் ஒன்று. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8 லட்சத்து 46 ஆயிரம் பேர் அங்கு வசிக்கின்றனர். இவ்வளவு மக்கள் தொகை மிகுந்த நகரத்தில் இந்த கடை எங்கே உள்ளது என்று யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்று விட்டுவிட்டார்கள் போல.

திருச்சியில் இந்த உணவகம் எங்கே உள்ளது கூகுளில் தேடினோம். ஆனால் நமக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மணிகண்டன் என்பவர் வெளியிட்டிருந்த பதிவுக்கு யாராவது பதில் அளித்துள்ளார்களா என்று பார்த்தோம். அப்போது பலரும் இந்த உணவகம் திருச்சியில் இல்லை, அபுதாபியில் உள்ளது என்று பதில் அளித்திருந்தது தெரிந்தது.

Trichy 4.png

இது உண்மைதானா என்று உறுதி செய்ய கூகுளில், திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட், அபுதாபி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, அந்த கடையின் முகவரி, தொலைபேசி எண், பல படங்கள் நமக்கு கிடைத்தன. அந்த படங்களை ஆய்வு செய்தபோது உணவகத்தின் பக்கத்தில் பாகிஸ்தான் தலைநகரான "இஸ்லாமாபாத்" பெயரில் ஒரு கடை இருந்தது தெரிந்தது. மேலும் அங்கிருந்த கார்களின் நம்பர் பிளேட், சாலை அமைப்பு, கூகுள் மேப் சேட்டிலைட் இமேஜ் உள்ளிட்டவை கட்டாயம் அது திருச்சி இல்லை என்பதை உறுதி செய்தன.

Trichy 5.png
Search LinkGoogle Map LinkArchived Link

தமிழ்நாட்டில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில், உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அருகில், வர்த்தக நிலையங்களில் தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியில் பெரியதாக பெயர் வைத்தது ஏன் என்று வழக்கறிஞர் கேட்டது சரியா... தவறா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்திக்கு கொடுத்த அளவுக்கு தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்றுதான் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியை நீக்க வேண்டும் என்று கூட கூறவில்லை. இதில் கூட சிலர் இப்படி விஷமத்தனமான தவறான தகவலைப் பரப்புவது ஏன் என்று தெரியவில்லை.

நம்முடைய ஆய்வில், திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் அபுதாபியில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், திருச்சி நகரில் உள்ள திருச்சி தமிழ் ரெஸ்டாரண்டில் தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழில் பெயர் பலகை வைக்காத திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட்: பேஸ்புக் குழப்பம்

Fact Check By: Chendur Pandian

Result: False