தடுப்பூசி உடல் நலத்துக்கு கேடா?- பகீர் ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம் | Social சர்வ தேசம் மருத்துவம் I Medical

தடுப்பூசிகள் உடல்நலத்திற்கு என்றுமே தீங்கு விளைவிப்பவையாகும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

குழந்தைகளுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து அளிக்கும் படத்துடன் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், “தடுப்பூசிகள் உடல் நலத்திற்கு என்றுமே தீங்கு விளைவிப்பவையாகும்….

Vaccines are Injurious to Health

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது… தடுப்பூசிகள் குறித்து எனக்குத் தெரிந்த உண்மைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒரு பாரம்பரிய மருத்துவராக இயற்கை சார்ந்த வாழ்வியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அதேவேளையில் ஆங்கிலமருத்துவத்தின் பாதகங்களை மக்களிடம் அம்பலப்படுத்துவதும் எனது கடமையாகக் கருதுகிறேன்.  கடந்த இரண்டு வாரங்களில் நிகழ்ந்த இரண்டு குழந்தைகளின் மரணங்கள். ஒருகுழந்தை 5 வயது, மற்றொரு குழந்தை 8 வயது. இருவருமே தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் மரணத்தைத் தழுவியவர்கள். “1000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டா 1 குழந்தை செத்துத்தான் போகும்னு ஆஸ்பத்திரியில சொல்றாங்க, இத ஊசி போடுறதுக்கு முன்னாடியே சொல்லியிருந்தா என் குழந்தைக்கு தடுப்பூசியே போட்டிருக்க மாட்டோம் “.

குழந்தைக்கு நோயே வரக்கூடாதுன்னுதான் தடுப்பூசி போடுறோம். அதுவே என் குழந்தையக் கொல்லும்னா அதுக்குக்குப் பேரு தடுப்பூசியாங்க,? ” இவை குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரின் குமுறல்களாகும். நன்கு ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பின் காய்ச்சல் ஏற்பட்டு, அதற்குப்பின் நடக்கவும், பேசவும், பார்க்கவும் இயலாமல் முற்றிலும் செயலிழந்து போயிருந்தனர். பெற்றோர்களை வினவிய பொழுது ” இந்த பாதிப்பிற்க்குப்பின்னும் குழந்தைக்கு தடுப்பூசி ஏற்றினீர்களா ?”,

” ஆம். இதுநாள்வரை மருத்துவர்கள் பரிந்துரைத்த அட்டவணைப்படி போடவேண்டிய தடுப்பூசிகளனைத்தும் தவறாமல் போட்டாயிற்று “. என்று பதிலளித்தனர். தடுப்பூசியின் எதிர்விளைவுகளால் கொல்லப்பட்ட இந்த இரு குழந்தைகள், மற்றும் உடல்நலம் முற்றிலும் பாதிக்கப் பட்டு, நடக்கவும், பேசவும், பார்க்கவும் இயலாமல் போன இரண்டு குழந்தைகளே தடுப்பூசிகளின் விளைவுகளுக்கான சாட்சி….மேலும் போதிய விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணிகள். தடுப்பூசிகளின் சாதகங்கள் குறித்து உரக்கப்பேசும் அல்லோபதி மருத்துவம், பாதகங்கள் குறித்து இதுநாள்வரை பேசியதில்லை, இனியும் பேசப்போவதில்லை. 

ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட வயதிற்குள் இத்தனை தடுப்பூசிகள் போடவேண்டும் என்று பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கும் ஒரு மருத்துவர் தனது குழந்தைகளுக்கு அத்தனை தடுப்பூசிகளும் போட்டிருக்கிறாரா? இல்லையெனில் ஏன் அவர் போடவில்லை? என்பது குறித்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. தடுப்பூசிகள் குறித்தும், அதன் பாதகங்கள் குறித்தும் வாசிக்கும் பெற்றோர்களே…!!!! நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள்….!!!!!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sridhar Samy என்பவர் 2019 மே 10ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் இல்லை. போடுவதும் போடாததும் அவரவர் விருப்பம். தடுப்பூசி தொடர்பாக தன்னுடைய சந்தேகத்தை கூறுவதாகத் தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி உடல்நலத்திற்கு கேடு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு முதன் முதலில் யாரால் எப்போது வெளியானது என்று கண்டறிய முடியவில்லை.

பல ஆண்டுகளாக இந்த பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருவது தெரியவந்தது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

தடுப்பூசி தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது என்று பார்த்தோம். “நோய் வராமல் தடுக்க நமக்கு உள்ள சிறந்த வழிகளுள் ஒன்று தடுப்பூசி, தடுப்பு மருந்து. நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவி புரிந்து வைரஸ், பாக்டீரியா உள்ளிட்டவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

who.intArchived Link

டாக்டர் விகடன் என்ற மருத்துவ இதழில் வெளியான தடுப்பூசி ரகசியம் என்ற கட்டுரை எழுதியவரும் தமிழில் தொடர்ந்து மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருபவருமான டாக்டர் கணேசனிடம் கேட்டோம், அப்போது அவர், “நம்மைச் சுற்றி லட்சக் கணக்கான கிருமிகள் உள்ளன. நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், உட்கொள்ளும் உணவு என எல்லாவற்றிலும் நுண்ணுயிரிகள் உள்ளன. இந்த நுண்ணுயிரிகளில் நல்லது செய்பவையும் உள்ளது, கெடுதல் செய்பவையும் உள்ளன. இந்த நுண்ணுயிரிகளிடமிருந்து உடலைக் காப்பாற்றும் வேலையை நம்முடைய நோய் தடுப்பு மண்டலம் செய்கிறது. நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தில் டி அணுக்கள், பி அணுக்கள், மேக்ரோபேஜ் அணுக்கள், ஆன்டிபாடிஸ் என்று பலதரப்பட்ட செல்கள் உள்ளன. இவை கிருமிகளை அழிப்பது, கிருமிகளின் அடையாளம் கண்டு மீண்டும் நுழைந்தால் எளிதில் தாக்க உடலைத் தயார் செய்வது என்று பல பணிகளை செய்கின்றன. நம்முடைய உடலில் தானாகவே சில நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. சிலதை செயற்கையாக உருவாக்கி உடலுக்கு பழக்கம் ஏற்படுத்துகிறோம். 

உடலுக்கு செயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியவை தடுப்பூசிகள்/தடுப்பு மருந்துகள். இவை ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடுகின்ற ஆற்றல் பெற்றவை. இதன் மூலம் அந்த நோயினால் ஏற்படும் துன்பங்கள் அவருக்கு உண்டாக வாய்ப்பே இல்லை. ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது, அவருக்கு நோய் வராது; அதனால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாது” என்றார்.

அவரிடம் தடுப்பூசி போடுவதால் ஒரு சிலர் உயிரிழக்கிறார்களே என்று கேட்ட போது, “மக்கள் தடுப்பூசிகளைப்  பயன்படுத்தத் தொடங்கிய பின்பு உலக அளவில் அம்மை நோய்கள், போலியோ போன்ற கடுமையான தொற்றுநோய்களின் தாக்கம் குறைந்து இறப்பு விகிதமும் குறைந்தது. குறிப்பாக, பெரியம்மை நோயை உலகிலிருந்தே விரட்டிவிட்டோம். இந்தியாவில், போலியோவை ஒழித்துவிட்டோம். சில தடுப்பூசிகள் தொற்று நோய்களைத் தடுப்பதோடு, புற்றுநோய்கள் வராமலும் தடுக்கின்றன. ‘ஹெப்படைட்டிஸ் பி’தடுப்பூசி கல்லீரல் புற்றுநோயையும், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயையும் தடுக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்தப் பலனாக, மக்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துள்ளது.

நான் சிறுவனாக இருந்த போது எங்கள் கிராமத்தில் 10 பேராவது போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பதை பார்த்திருக்கிறேன். அதேபோல், பெரியம்மை தழும்போடு நிறைய பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. போலியோ பாதிப்பால் கால் இழந்த மாற்றுத்திறனாளிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இவை எல்லாம் நம் கண் முன்னே இருக்கும் வரலாறு.

Description: Dr Ganesan

படம்: டாக்டர் கணேசன்

தடுப்பூசி போடப்பட்ட குழந்தை தடுப்பூசி காரணமாக உயிரிழக்க வாய்ப்பு மிகவும் குறைவு, குழந்தைக்கு வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்கனவே இருந்திருந்தால் அந்த பாதிப்பு காரணமாக உயிரிழக்கலாம், அந்த பாதிப்பு உள்ளதை முன்னரே தெரிவித்துவிட்டால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இறப்பைத் தடுத்துவிடலாம், ஆகவே தாய்மார்களுக்குத் தேவை தடுப்பூசி விழிப்புணர்வு தானே தவிர, தடுப்பூசி போடுவதே தவறு என்ற அறியாமை அல்ல!” என்றார்.

மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவது இல்லை என்று குறிப்பிட்டுள்ளது பற்றிக் கேட்டபோது, “இதுவும் வெறும் வதந்திதான். எந்த மருத்துவர் தடுப்பூசி போட்டுக்கொள்வது இல்லை என்று கூறினார்? இவர்களாக எதையாவது எழுதிவிட்டுவிடுகிறார்கள். நான் என்னுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட்டேன். எனக்கும் போட்டுள்ளேன். மற்றவர்களை விட தொற்றுநோய்க்கு ஆளாகும் ஆபத்து எங்களுக்குத்தான் உள்ளது. எனவே, மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசியை போட்டுக்கொள்கிறார்கள்” என்றார்.

1990க்கும் இப்போதும் போலியோ தடுப்பூசியால் ஏற்பட்ட வித்தியாசம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது, 1990களில் ஒரு நாளைக்கு 500 முதல் 1000ம் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இன்றைக்கு நாட்டில் போலியோவே இல்லை என்றும் செய்திகள் கிடைத்தன. பதிவிட்டவர் கூறியதை ஏற்று போலியோ மருந்து கொடுக்காமல் இருந்தால், இன்றைக்கு ஆயிரக்கணக்கான நம்முடைய குழந்தைகள் நடக்க முடியாமல் மாற்றுத் திறனாளிகளாக மாறியிருப்பார்கள் என்பதை இந்த புள்ளிவிவரம் உறுதி செய்கிறது.

ncbi.nlm.nih.govArchived Link

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தடுப்பூசி உடல் நலத்துக்கு கேடு என்று பகிரப்பட்ட இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தடுப்பூசி உடல் நலத்துக்கு கேடா?- பகீர் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False