
பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தேச விரோதிகளை களையெடுக்க போகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, இவனே என்னா…. பண்ணலாம் ?
டவர் நியூஸ் என்ற லோகோவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “BJPயினரை எங்கு பார்த்தாலும் உதைப்போம் – வேல்முருகன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “தேச விரோதிகளை களையெடுக்கப் போகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே வேல்முருகனை என்ன… பண்ணலாம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த பதிவை, Chowkidar Baburaj Babu என்பவர் 2019 ஜூன் 9ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் வேல்முருகனுக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மீத்தேன், ஸ்டெர்லைட் என்று மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருபவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் உதைப்பேன் என்று வேல்முருகன் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் உதைப்பேன் என்று வேல்முருகன் கூறியது உண்மையா, இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

வேறு யாரையாவது, எந்தக் கட்சியினரையாவது இப்படி வேல்முருகன் கூறினாரா என்று கண்டறிய பா.ஜ.க என்ற வார்த்தையை மட்டும் அகற்றிவிட்டு மீண்டும் கூகுளில் தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் நமக்கு கிடைத்தது. மேலும், “மதவாத கூட்டத்தை இனி எங்கு பார்த்தாலும் உதைப்போம் – வேல்முருகன்” என்று கூறிய வீடியோ நமக்குக் கிடைத்தது.

இந்த இரண்டையும் நம்முடைய ஆய்வுக்காக எடுத்துக்கொண்டோம். இரண்டு வீடியோவும் 2018ம் ஆண்டு எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய கண்டன பொதுக்கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்டது உறுதியானது. அதில், வேல்முருகன் பேசும்போது, “மதவாத கும்பல்களே, திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தீர்கள். மகாராஷ்டிவிலும் உத்தரப்பிரதேசத்திலும் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடைத்தீர்கள். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்று உடைத்தீர்கள்… இனி நீங்கள் எங்கு பார்த்தாலும் உதைபடுவீர்கள் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக எச்சரிக்கிறோம்” என்று பேசியது தெரிந்தது. இந்த பேச்சு வீடியோவின் 2.17வது நிமிடத்தில் இருந்து தொடங்குவதைக் கேட்கலாம்.
எஃப்.எஸ் 16 வெளியிட்டிருந்த வீடியோவில், “மதவாத கூட்டத்தை இனி எங்கு பார்த்தாலும் உதைப்போம் – வேல்முருகன்” என்று தலைப்பிட்டிருந்தனர். அதைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது பா.ஜ.க-வினர் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை ஈ.வே.ரா சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்திருந்தார். பின்னர், அது தன்னுடைய அனுமதியின்றி அட்மின் வெளியிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். இதனால் வேல்முருகன் மதவாத கும்பல் என்று கூறுவது பா.ஜ.க-வாக இருக்கலாம் என்று யூடியூப் சேனலான டவர் நியூஸ் இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பார்கள் போல.

ஆனால், வீடியோவில் எந்த இடத்திலும் நேரடியாக பா.ஜ.க தொண்டர்களையோ, மதவாத கும்பலைச் சேர்ந்தவர்களையோ உதைப்பேன் என்று வேல்முருகன் கூறவில்லை. வீடியோவை வெளியிட்ட டவர் நியூஸ், பரபரப்புக்காக அப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளது. அது உண்மை என்று நம்பி வேல்முருகனுக்கு எதிராக இந்த பதிவை பா.ஜ.க-வினர் பகிர்ந்து வருகின்றனர்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசிய வீடியோ கிடைத்துள்ளது.
அந்த வீடியோவில் மதவாத கும்பல் இனி எங்கு பார்த்தாலும் உதைபடும் என்று பேசியுள்ளார்.
பா.ஜ.க தொண்டர்களை எந்த இடத்தில் பார்த்தாலும் உதைப்பேன் என்று அவர் பேசியதாக டவர் நியூஸ் தவறான தலைப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வேல்முருகன் பற்றிக் கூறப்படும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.Result: False

Title:பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன்! – வேல்முருகன் கூறியதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்
Fact Check By: Praveen KumarResult: False
