
நாடாளுமன்றத்தில் பேசிய வைகோவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வோம்.
தகவலின் விவரம்:
வெங்கையா நாயுடு புகைப்படத்துடன் கூடிய பிரேக்கிங் நியூஸ் கார்டு போன்ற ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “வைகோவுக்கு ஆரம்பமே சறுக்கல்” என்று பெரிய தலைப்பு வைத்துள்ளனர். தொடர்ந்து, “கோரிக்கை வைப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள், எச்சிரிப்பதெல்லாம் கருப்பு பலூனோடு வைத்துக் கொள்ளுங்கள், இங்கே இடமில்லை – வைகோவுக்கு வெங்கையா கண்டனம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிலைத் தகவலில், “குற்றவாளிக்கு மரண அடி கொடுத்த வெங்கையா நாயுடு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, ஜெயம் அசோக் என்பவர் 2019 ஜூலை 26ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
23 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ நாடாளுமன்றம் சென்றார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்களை வைகோ சந்தித்து பேசினார். கட்சி வேறுபாடு மறந்து பலரை சந்தித்து வருகிறார் வைகோ.
இந்த நிலையில், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து வைகோ நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசினார். பேசி முடிக்கும்போது “மக்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றால் தமிழக மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” என்றார். உடனே குறுக்கிட்ட மாநிலங்கள் அவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு, “அவையில் எச்சரிக்கைவிடுக்கக் கூடாது… உங்கள் கோரிக்கைகளை மட்டும் கூறுங்கள்” என்றார். இந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆனால், வைகோவுக்கு வெங்கையா நாயுடு மிகக் கடும் கண்டனம் தெரிவித்து பேசியதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், , “கோரிக்கை வைப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள், எச்சரிப்பதெல்லாம் கருப்பு பலூனோடு வைத்துக் கொள்ளுங்கள், இங்கே இடமில்லை” என்று வெங்கையா நாயுடு கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தமிழகத்தில் வெளியாகும் ஊடகங்கள் அனைத்திலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது. அதில், அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு என்றே குறிப்பிட்டிருந்தனர். தி.மு.க, காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் தீவிர வலதுசாரி ஆதரவு இணைய ஊடகங்களில் கூட எச்சரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தன. ஆனால், மேற்கண்ட பதில் உள்ளது போன்று கருத்து கூறியதாக எதுவும் இல்லை.
இதனால், வைகோ நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ கிடைக்கிறதா என்று ம.தி.மு.க-வின் தொலைக்காட்சி யூடியூப் தளத்தில் தேடினோம். அப்போது, “எச்சரிக்கை விடுத்த வைகோ..வெங்கையா நாயுடு எதிர்ப்பு” என்று தலைப்பிட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. அதில் வைகோ பேசியது, அதற்கு வெங்கையா நாயுடு எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் முழுவதும் இருந்தன. அதை பார்த்தோம்.
மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என்று எச்சரிக்கிறேன் என்று கூறி அமருகிறார். அப்போது வெங்கையா நாயுடு குறுக்கிட்டு பேசுகிறார். அவர் பேசும்போது, “இந்த அவையில் எச்சரிக்கை செய்ய முடியாது முதல் விஷயம். இரண்டாவது வைகோ நீங்கள் வேகமாக பேசுகின்றீர்கள்… உங்கள் கருத்தை தெரிவித்துள்ளீர்கள். பேச்சின் கடைசியில் உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள், இதுதான் என்னுடைய ஆலோசனை அல்லது கோரிக்கை… இப்படித்தான் நாம் சென்றுகொண்டிருக்கிறோம்” என்கிறார்.
எந்த இடத்திலும் வைகோவுக்கு வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவிக்கவில்லை. என்னுடைய ஆலோசனை அல்லது கோரிக்கை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமுறையில் வெளியான வீடியோ கீழே…
நம்முடைய ஆய்வில், நாடாளுமன்றத்தில் வைகோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்தபோது, அவைத் தலைவர் கண்டனம் தெரிவிக்கவில்லை, அப்படிப் பேசக் கூடாது என்று ஆலோசனை மட்டுமே வழங்கினார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பதிவில் கூறியுள்ளது போல், உங்கள் எச்சரிக்கையை எல்லாம் கருப்பு பலூனோடு வைத்துக்கொள்ளுங்கள் என்று எல்லாம் கூறவில்லை. நாடாளுமன்றத்தில் வைகோ பேசியது உண்மை. ஆனால், அவருக்கு வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும், வெங்கையா நாயுடு கூறாத விஷயங்களை எல்லாம், அவர் பெயரில் தவறாக வெளியிட்டுள்ளனர்… இதன் மூலம் இந்த பதிவு உண்மையான சம்பவத்துடன் பொய்யான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் பொய்யான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
