
ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் அமைப்பின் தலைவராக நடிகர் மயில்சாமியை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தமிழர் என்பதால் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் ஒரு படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
விரைந்து ஷேர் செய்யுங்கள் போராளிகளே . தமிழண்டா ..
மயில்சாமியின் பொருளாதார அறிவைப் பார்த்து வியந்த இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் அமைப்பு அவரை தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தமிழர் என்பதால் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஃபேஸ்புக் நிறுவனம் இந்த தகவலை ஒரு ஷேர் செய்வதன் மூலம் அதை ஒரு ஓட்டாக எடுத்துக்கொண்டு இவரை நியமிக்க முடிவு செய்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மயில்சாமி தலைவராக இன்னும் 57 ஆயிரம் ஓட்டு தேவைப்படுகிறது. விரைவாக பகிருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சரவணன் திருமேனி என்பவர் கடந்த 2018 ஜூன் 5ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். விரைந்து ஷேர் செய்யுங்கள் போராளிகளே, தமிழன் டா என்று இந்த பதிவை அவர் பகிர்ந்துள்ளார். இது உண்மை என்று நம்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களுள் ஒருவர் மயில்சாமி. நடிப்பைத் தாண்டி சென்னை மழை வெள்ளத்தின்போது மக்களுக்கு உணவு வழங்கியது, டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு கஷாயம் வழங்கியது, சுற்றுப்புறத்தை தூய்மை செய்வது என்று சமூக சேவை செய்து வருபவர். தன்னை எம்.ஜி.ஆர் ரசிகன் என்று கூறும் அவர், தி.மு.க மேடை ஏறி கருணாநிதியின் புகழ் பாடியதும் உண்டு.
பல தனியார் செய்தி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றும் பேசுவார். இவரது பேச்சில் பா.ஜ.க எதிர்ப்பும் கலந்திருக்கும்.
பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக மயில்சாமி பேசியது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அஜித் அரசியல் பிரவேசம் பற்றி தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் மயில்சாமி பேசிய வீடியோ பதிவு…
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக மத்திய அரசை விமர்சித்து பேசிய புதியதலைமுறை விவாத வீடியோ பதிவு…
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தந்தி டி.வி நிகழ்ச்சி ஒன்றில் மயில்சாமி பேசுவது போன்ற புகைப்படம் உள்ளது. அதில், மயில்சாமி, பொருளாதார நிபுணர் என்று கூறப்பட்டது போல உள்ளது.
உண்மையில் தந்தி டி.வி-யில் மயில்சாமியை பொருளாதார நிபுணர் என்று கூறவில்லை. நகைச்சுவை நடிகர் என்றே குறிப்பிட்டுள்ளது. அதற்கான வீடியோ ஆதாரம் கீழே…
இந்த வீடியோவின் 1.39வது நிமிடத்தில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள காட்சி வருவதை காணலாம். அதில், நகைச்சுவை நடிகர் என்றே உள்ளது. இதன் மூலம், படமும் எடிட் செய்யப்பட்டது என்பது தெரிந்தது.

இதுதவிர, ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் என்பது உலக நாடுகள் மத்தியில் வேலை வாய்ப்பை உருவாக்குதல், வறுமை ஒழிப்பு, நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நிதி உதவி மற்றும் ஆலோசனை செய்யும் அமைப்பாகும். 189 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருந்தாலும், இதன் நிர்வாக இயக்குநராக ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வர முடியும்.
இந்த நிலையை மாற்றி, உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் நிர்வாக இயக்குநராக வர வேண்டும் என்று 2011ல் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆனால், தற்போது வரை ஐரோப்பியர்கள் மட்டுமே நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டின் லகார்ட் என்பவர் நிர்வாக இயக்குநராக உள்ளார். நிர்வாக இயக்குநருக்குத்தான் இங்கு அதிக அதிகாரம் உள்ளது. தலைவர் பொறுப்பு இல்லை.
இந்த நிலையில்தான், மயில்சாமியை ஐ.எம்.எஃப் தலைவராக நியமிக்க அந்த அமைப்பு முடிவு செய்துள்ளதாக விஷமத்தனமான தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு புகைப்படத்தில் சுட்ட வடை என்ற லோகோ இருந்தது. அந்த பெயரில் ஃபேஸ்புக் குழு ஏதேனும் உள்ளதா என்று தேடினோம். அதில், சுட்டவடை என்று ஒரு குழு இருந்தது.

அந்த பக்கத்தை ஆய்வு செய்தோம்… முழுக்க முழுக்க பா.ஜ.க ஆதரவு, தி.மு.க – காங்கிரஸ் எதிர்ப்பு நிலை பதிவுகளே இருந்தன.ஆனால், இந்த பக்கம் 2018 அக்டோபர் 21ல்தான் உருவாக்கப்பட்டு இருந்தது. சுட்டவடை பக்கத்தை ஃபேஸ்புக் பிளாக் செய்திருக்கும் என்று தெரிகிறது. இதனால், சுட்டவடை ஏகே 47 என்ற பெயரில் புதிய பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கவர் படமே ஆர்.எஸ்.எஸ் கொடியாகத்தான் இருந்திருக்கிறது.
பதிவை வெளியிட்டவர் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னைப் பற்றி சில விவரங்களைத் தெரிவித்திருந்த சரவணன் திருமேனி, தன்னுடைய அரசியல் பார்வை பற்ற எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் ப்ரொஃபைல் படத்தில் தாமரை சின்னம் இருந்தது. பதிவுகளும் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தன.

நாம் மேற்கொண்ட ஆய்வில், ஐரோப்பியர்கள் மட்டுமே ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குநர் ஆக முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மயில்சாமி நடிகர் மட்டுமே, அவர் பொருளாதார நிபுணர் இல்லை. மயில்சாமியின் பா.ஜ.க எதிர்ப்பு நிலை காரணமாக அவரை கிண்டல் செய்யும் நோக்கில் தவறான பதிவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நம்முடைய ஆய்வின் முடிவில், மயில்சாமி தொடர்பான இந்த பதிவு தவறானது, விஷமத்தனமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:ஐ.எம்.எஃப் தலைவராக மயில்சாமியை நியமிக்க ஷேர் செய்யுங்கள்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Praveen KumarResult: False
