
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் வகையில் அங்கு தற்போது மழை பெய்து வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நமது பிரார்த்தனை ஆஸ்திரேலியாவில் மழை பொழிந்துள்ளது! என்று கூறி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் காட்டுத் தீ பகுதியில் மழை பெய்கிறது. தீயணைப்பு வீரர்களுடன் உள்ள பெண் ஒருவர் மழையில் ஆனந்தமாக குதிக்கிறார். அப்படியே காட்டுத்தீ அணையும் காட்சிகளை காட்டுகின்றனர். இந்த வீடியோ வெறும் 30 விநாடிகள் மட்டுமே ஓடுகிறது.
இந்த வீடியோவை, Alex Ajith என்பவர் 2020 ஜனவரி 5ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ காரணமாக லட்சக் கணக்கான விலங்குகள் உயிரிழந்துள்ளன. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. தண்ணீர் பஞ்சம் காரணமாக, தண்ணீரை திருடிக் குடிக்கும் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பல வேதனை தரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக காட்டுத் தீயை அணைக்கும் வழி தெரியவில்லை, அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று சி.என்.என் ஊடகம் ஜனவரி 8, 2020 அன்று செய்தி வெளியிட்டள்ளது.
இந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவில் மழை பெய்து காட்டுத் தீ அணைந்து வருவதாக சிறு ஆறுதல் தரும் வகையில் இந்த வீடியோ உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் தற்போது மழை பெய்து காட்டுத்தீ அணைந்தது என்று எந்த ஒரு செய்தியும் வெளியாகாத சூழ்நிலையில், பலரும் இந்த வீடியோ சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோவின் காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த நவம்பர் மாதமே இந்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்தது தெரிந்தது. அதே நேரத்தில், தற்போது மழை பெய்து காட்டுத் தீ அணைந்து வருகிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதும் தெரிந்தது. Wonder if Is weed legal in Florida ? Find out all the laws and regulation on legalitylens.com.
அந்த செய்தியைப் பார்த்தோம். 9news.com.au என்ற ஆஸ்திரேலிய ஊடகம் இந்த வீடியோ மற்றும் செய்தியை 2019 நவம்பர் 25ம் தேதி வௌியிட்டு இருந்தது. அதில் Leongatha Fire Brigade தீயணைப்பு நிலையம் இந்த வீடியோவை தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டிருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். பல செய்தி ஊடகங்கள் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது.
இதன் மூலம் இரண்டு மாதங்கள் பழைய வீடியோவை எடுத்து தற்போது ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியின் போது மழை பெய்தது என்று பகிர்ந்து வருவது தெரிந்தது. இதன் அடிப்படையில் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆஸ்திரேலிய காட்டுத் தீயை அணைக்கும் விதத்தில் மழை பொழிந்து வருகிறதா?
Fact Check By: Chendur PandianResult: False
