‘’பொள்ளாச்சி ஜெயராமன் மகன்‘’ என்ற தலைப்பில், இளைஞர் ஒருவர் பல இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை, ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டதை காண நேர்ந்தது. எனவே, இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றிய ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அப்போது கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

வதந்தியின் விவரம்:

பொள்ளாச்சி ஜெயராமன் மகன்

Archive Link

இந்த பதிவில், இளைஞர் ஒருவர், பல இளம்பெண்களுடன் நெருக்கமான நிலையில், செல்ஃபி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். அனைத்து புகைப்படங்களிலும், ஒரே இளைஞர் நிற்க, அவருடன் ஏராளமான பெண்கள் வெட்கத்துடன் போஸ் கொடுத்துள்ளனர். இது தவிர, ஒரு புகைப்படத்தில், அந்த இளைஞர் போலீஸ் சீருடையில் நிற்பதையும் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, அஇஅதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கு, இப்பாலியல் கொடூரத்தில் தொடர்பு உள்ளதாகப் புகார் கிளம்பியது. ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் தனிக்கதை.

இதுதவிர, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவரின் பெயர் அக்னீஷ் முகுந்தன் இன்னொரு மகனின் பெயர் பிரவீண் ஜெயராமன். பொள்ளாச்சி பாலியல் புகாரில் இவர்களின் பெயர் அடிபட்டதால், உடனடியாக, தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டீஆக்டிவேட் செய்துவைத்துள்ளனர். இதுபற்றி விகடனில் வெளியான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனினும், பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் 2 பேரின் முகமும், மேற்கண்ட பதிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞரின் முகமும் வேறுபடுகின்றன. பொள்ளாச்சி ஜெயராமன், தனது மகன்களுடன் இருக்கும் ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

நன்றி: விகடன் இணையதளம்

இந்த புகைப்படத்தையும், நாம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இந்த வித்தியாசம் புரியும்.

மேற்கண்ட புகைப்படங்களில் இருக்கும் இளைஞரின் முகத்தைப் பார்த்தால், தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி எதுவும் தெரியவில்லை. மிகவும் உற்சாகமான நிலையில், அவர் இந்த செல்ஃபிகளை எடுத்துள்ளார். அதேபோல, அவருடன் இருக்கும் பெண்களும் இதுபற்றி எந்த கவலையுமின்றி, போஸ் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், பார்க்கும்போது, அந்த இளைஞர் மற்றும் அவருடன் இருக்கும் பெண்களின் முழு சம்மதத்துடனே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதும் தெளிவாகிறது.

உண்மையில், இந்த இளைஞர் யார் என்ற சந்தேகத்தை உறுதி செய்ய தீர்மானித்தோம். இதன்படி, அந்த புகைப்படங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து, #Yandex இணையதளத்தில் ரிவர்ஸ் இமேஜ் தேடுதல் செய்தோம். அதில், இவை உண்மையான புகைப்படங்கள் என்று தெரியவந்தது. அத்துடன், #SujithShettySelfie என்ற வார்த்தையும், அதுபற்றிய செய்தி ஒன்றின் இணைப்பும் கிடைத்தன. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

கூகுள் காட்டிய செய்தியை கிளிக் செய்தபோது, புகைப்படத்தின் உண்மை விவரம் கிடைத்தது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர், கர்நாடகா மாநிலம், உடுப்பியை சேர்ந்த போலீஸ் அதிகாரி சுஜித் ஷெட்டி என்றும், பல்வேறு இளம்பெண்களுடன் சில்மிஷம் செய்த புகாரில் சிக்கி, கடந்த 2018, மார்ச் 16ம் தேதி சஸ்பென்ட் ஆகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆதார புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) சம்பந்தப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி.
2) இவர், பாலியல் புகாரில் சிக்கி ஏற்கனவே, சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
3) இந்த நபரின் புகைப்படத்தை எடுத்து, பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என பதிவிட்டுள்ளனர்.
4) பொள்ளாச்சி பாலியல் கொடூரம் அனைவரையும் எளிதில் உணர்ச்சிவசப்படுத்தும் விவகாரமாக உள்ளது. இதன்பேரில், உண்மையை பற்றி யோசிக்காமல், இந்த புகைப்படத்தை எடுத்து, அஇஅதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிரான பிரசாரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
5) மேற்கண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர் ஆவார்.

முடிவு:
நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இல்லை என்று உறுதியாகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியின் புகைப்படத்தை எடுத்து, தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்தாரா?

Fact Check By: Parthiban S

Result: False