மோடியின் மேக்அப் ஊழியருக்கு ரூ.15 லட்சம் சம்பளமா? விடாமல் தொடரும் வதந்தி!

அரசியல்

‘’ஏழைத்தாயின் மகன் என சொல்லிக்கொள்ளும் மோடியின் ஒரு மாத மேக்-அப் செலவு ரூ.15 லட்சம்,’’ என்று சமூக வலைதளங்களில் ஒரு பதிவை காண நேரிட்டது. மோடியை எதிர்ப்பதாகக் கூறும் பலரும், இதனை அதிகளவில் ஷேர் செய்வதால், இந்த தகவலின் நம்பகத் தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரம் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது.

வதந்தியின் விவரம்

#மோடி யின் தாய் ஏழை தாயாக இருக்கிறாள். இந்த தறுதலை, ‘ஏழை தாயின் மகன்என்று சொல்லிக் கொண்டு ஊதாரி புள்ளையாய் திரிகிறது.

Archive link

‘’பிரதமர் மோடியின் மாத சம்பளம் ரூ.1.6 லட்சம். ஆனால் அவருக்கு மேக்-அப் செய்யும் பெண்ணிற்கு மாத சம்பளமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. நமக்கிடையே மதச்சண்டையை உருவாக்கிவிட்டு சொகுசு வாழ்க்கை நடத்தும் பாஜகவை விரட்டிடுவோம்,’’ என்று இதில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி மற்றும் புகைப்படத்தையும் இந்த பதிவில் இணைத்துள்ளனர். அந்த புகைப்படத்தில், ஒரு பெண், பிரதமர் மோடிக்கு மேக்-அப் செய்வது போல நிற்கிறார்.

உண்மை அறிவோம்

முதலில், இந்த பதிவில் இடம் பெற்றிருந்த செய்தியை படித்துப்பார்த்தோம். ‘மேக்அப் செலவுக்கு மாதச் சம்பளமாக ரூ.15 லட்சத்தை வாரி வழங்கிய மோடி,’ என்று தலைப்பிட்டதால், செய்தி உண்மை என்றே நம்பத் தோன்றியது. செய்தியின் முதல் பத்தியை படித்த போது தலைப்பு நம்மை தவறாக புரிந்துகொள்ள செய்திருக்கிறது என்பதை அறிந்தோம். செய்தியின் முதல் பத்தியிலேயே இந்த செய்தி உண்மை அல்ல என்று தெரிவித்துவிட்டனர். இதன்மூலமாக, செய்தியை படிக்காமல், தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு மோடிக்கு எதிராக பிரசாரம் செய்துள்ளதாக, முதல் பார்வையிலேயே உறுதியாகிறது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

வேறு ஏதாவது இது தொடர்பான தகவல் உள்ளதா என்று கண்டறிய, கூகுளில், மோடி மேக்-அப் செலவு என்று தேடினோம். அதில், நமக்கு நிறைய செய்திகள் கிடைத்தன. அனைத்து செய்திகளுமே இந்த தகவல் பொய் என்பதை உறுதிபடுத்தின. இருப்பினும் வேண்டுமென்றே இந்த வதந்தி பரப்பப்பட்டு வருவது நமக்குப் புரிந்தது.

இந்த வதந்தியின் மூலத்தைக் கண்டறிய முடிவு செய்தோம். கூகுள் தேடலில் விகடனில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதனை கிளிக் செய்து படித்தபோது, உண்மை வெளிப்பட்டது.

இதன்படி, 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி, ஆதித்ய சதுர்த்தி என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு பெண் மேக்-அப் செய்வது போன்ற படத்தை வெளியிட்டு, மோடி தனக்கு மேக்-அப் செய்யும் பெண்ணுக்கு ரூ.15 லட்சம் மாத சம்பளமாக வழங்குகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதுதான் இந்த வதந்தியின் தொடக்கம். அவருடைய இந்த பதிவு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டிருந்தது.

இந்த தகவல் பொய் என்பது நிரூபிக்கப்பட்டதும் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த பதிவின் போட்டோ விகடன் இணையத்தில் இருந்து நமக்குக் கிடைத்தது. ஆதார படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பல உண்மை கண்டறியும் நிறுவனங்கள் இந்த தகவலில் ஏதேனும் உண்மை உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டுள்ளன. நம்முடைய #FactCrescendo ‘இந்தி’ பிரிவும் ஆய்வு மேற்கொண்டு, இதில் உண்மை இல்லை என்று நிரூபித்துள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன்படி, பிரதமர் மோடிக்கு, ஒரு பெண் மேக்-அப் செய்வது போன்ற படம் உண்மைதான். ஆனால், அது பிரதமருக்கு மேக்-அப் செய்யும்போது எடுக்கப்பட்டது இல்லை. மாறாக, அவருடைய மெழுகு சிலையை உருவாக்குவதற்காக அவருடைய நிறம், உயரம் உள்ளிட்ட தகவல் பதிவு செய்யப்படும்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

லண்டனில் மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் என ஒன்று உள்ளது. அங்கு உலகின் பிரபல தலைவர்கள், சினிமா பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் காட்சிக்காக வைக்கப்படுவது வழக்கமாகும். பிரதமர் மோடியின் சிலையை வைப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடியின் உருவம் பற்றிய துல்லியமான தகவலைத் திரட்ட லண்டன் மெழுகு அருங்காட்சியக ஊழியர்கள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள், பிரதமரின் இல்லம் சென்று, இந்த விவரங்களை பதிவு செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. இந்த புகைப்படம் 2016ம் ஆண்டிலேயே  வெளியாகி வைரல் ஆகியது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மோடியின் மெழுகு சிலை உருவாக்கம் தொடர்பாக லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் ஒரு வீடியோவையே வெளியிட்டுள்ளது. இதில், மேற்கண்ட புகைப்பட காட்சியும் இடம்பெற்றுள்ளதை காணலாம். 78 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த வீடியோவின் 10வது நொடியில் இந்த பதிவில் இடம் பெற்றுள்ள படத்தின் காட்சியை நீங்கள் காணலாம்.

பதிவு

யுடியூப் காட்சி

இதன்பின், மிக தத்ரூபமாக மோடியின் சிலையை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தினர் செய்து முடித்தனர்.  லண்டன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்த மெழுகு சிலையை வியப்புடன் பார்த்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பிரதமர் மோடி ஒரு ஆடம்பர பிரியர் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு அவர், கடந்த 2015ம் ஆண்டு ஒரு முறை அணிந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான மேலாடைதான் காரணம். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மெழுகுச் சிலை அமைக்கும்போது எடுத்த படங்களை தற்போது வெளியிட்டு, மோடியின் மேக்-அப் செலவு ரூ.15 லட்சம் என்று விஷமப் பிரசாரம் செய்துள்ளனர்.
2) இது தவறான தகவல் என்று பலமுறை நிரூபிக்கப்பட்டாலும் எதிர்க்கட்சிகளால் திரும்பத் திரும்ப விஷமத்தனமாக இந்த வதந்தி பரப்பப்படுகிறது.
3) பலரும் இது உண்மையாக இருக்கும் என்று எண்ணி அதிக அளவில் ஷேர் செய்கின்றனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மோடியின் மேக்-அப் செலவு ரூ.15 லட்சம் என்று பரப்பப்படும்  தகவல் தவறானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:மோடியின் மேக்அப் ஊழியருக்கு ரூ.15 லட்சம் சம்பளமா? விடாமல் தொடரும் வதந்தி!

Fact Check By: Praveen Kumar 

Result: False

 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares