ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவிகளாக பெயர் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும்தான் ஆண்டுக்கு 6 சிலிண்டர் மற்றும் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததாகக் கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முதலமைச்சர் பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், " முதலமைச்சர் அறிவிப்பு குடும்ப தலைவிகளுக்கு 6 சிலிண்டர் மற்றும் மாதம் 1500 இவை ரேஷன் அட்டையில் குடும்ப தலைவிகளாக இருப்பவர்களுக்கு மட்டுமே. குடும்ப தலைவர் இருக்கும் பட்சத்தில் இந்த சலுகை பொருந்தாது" என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை Kovai Kusumbu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஏப்ரல் 5ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக தமிழக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கார்டில் குடும்பத் தலைவன் என்ற இடத்தில் கணவன் பெயர் இருந்தால் இந்த சலுகை கிடையாது என்று முதல்வர் அறிவித்தது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

பார்க்கும்போது இது பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போல இல்லை. அது வழக்கமாக பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட், டிசைன் இல்லை. மேலும், இப்படி ஒரு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டதாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

பாலிமர் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை என்பது தெரிந்தது. அடுத்ததாக, பாலிமர் தொலைக்காட்சி டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த அருணைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: polimernews.com I Archive 1 I malaimurasu.com I Archive 2

சிலிண்டர் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று அறிய கூகுளில் தேடினோம். அப்போது 2021 மார்ச் 26ம் தேதி வெளியான பாலிமர் செய்தி ஒன்று கிடைத்தது. அதில், "அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் 6 கேஸ் சிலிண்டர், வாசிங்மெஷின், சோலார் அடுப்பு இலவசமாக வழங்கப்படும் - முதலமைச்சர்" என்று இருந்தது. இதன் மூலம் ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவருக்கு பதில் குடும்பத் தலைவலி பெயர் இருந்தால் மட்டுமே ரூ.1500, கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குடும்பத் தலைவி என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகளுக்கு மட்டும் கேஸ் சிலிண்டர், ரூ.1500 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:6 சிலிண்டர், மாதம் ரூ.1500 இவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும்!- முதல்வர் பழனிசாமி பெயரில் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False