FACT CHECK: அமித்ஷா படத்திற்கு பதில் சந்தான பாரதி படத்தை வைத்து வாழ்த்து வெளியிட்டாரா தெலங்கானா பா.ஜ.க பொதுச் செயலாளர்?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினரும் தெலங்கானா மாநில பா.ஜ.க பொதுச் செயலாளருமான தாலோஜூ ஆச்சாரி (Thaaloju Achary) அமித்ஷா பிறந்த நாளுக்கு, அமித்ஷா படத்துக்கு பதில் தமிழ் திரைப்பட நடிகர் சந்தான பாரதியின் படத்தை வைத்து வாழ்த்து தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து பெயர் கூட குறிப்பிடாமல் யாரோ ஒருவர் வாழ்த்து வெளியிட்டது போல போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதில், “அரசியல் சாணக்கியர் அமித்ஷா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று இருந்தது. பிரதமர் மோடி, தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் படத்துடன், யார் என்று தெரியாத ஒரு நபரின் படமும் இருந்தது.

இந்த பதிவை பிரிட்டோ ரஜகை என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 7ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமித்ஷாவுக்கு பதில் தமிழ் திரைப்பட நடிகர் சந்தான பாரதியின் படத்துடன் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியது போன்ற போஸ்டரை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அமித்ஷா பிறந்த நாள் அக்டோபர் மாதம் தானே, இப்போது எதற்கு ஷேர் செய்கிறார்கள் என்று சந்தேகத்தில் அந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.

போஸ்டரை வெளியிட்ட நபர் தன்னுடைய பெயரைக் கூட குறிப்பிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், போஸ்டரை வெளியிட்ட நபர் தமிழ்நாடு பா.ஜ.க-வை சேர்ந்தவர் போலவும் இல்லை.

எனவே, இவர் யார் என்று தேடினோம். போட்டோஷாப் முறையில் அவருடைய படத்தை மட்டும் தனியாக வெட்டி எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, படத்தில் இருப்பது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரும் தெலங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் தாலோஜூ ஆச்சாரி என்று பல பதிவுகள் கிடைத்தன. 

தெலங்கானா மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் எதற்கு தமிழில் போஸ்டர்  வெளியிட வேண்டும், அதுவும் தன்னுடைய பெயரைக் கூட குறிப்பிடாமல் போஸ்டர் வெளியிடத் தேவை என்ன வந்தது என்று சந்தேகம் எழவே, அவருடைய ஃபேஸ்புக் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம்.

அவருடைய சமூக ஊடக பக்கங்களில் அமித்ஷாவுக்கு அவர் வாழ்த்துக் கூறியதாக எந்த பதிவும் இல்லை. தாலோஜூ ஆச்சாரி தெலுங்கு. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை போஸ்டர் வெளியிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அவர் தமிழில் எந்த ஒரு பதிவையும் வெளியிட்டதாக இல்லை. 

தெலங்கானா மாநிலத்தின் பா.ஜ.க பொதுச் செயலாளராக உள்ள ஒருவர் தன் மாநில தலைவர் படத்தை பயன்படுத்தாமல், தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் படத்தை வைக்கத் தேவையில்லை. மேலும், தெலுங்கில் பதிவிட்டு வரும் அவர், தமிழில் பதிவிட வேண்டிய தேவையும் இல்லை. இருப்பினும் இந்த போஸ்டர் பற்றிய விளக்கத்தை பெற, தாலோஜூ ஆச்சரிக்கு அவருடைய ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக படத்தையும் அதன் மொழியாக்கத்தையும் அனுப்பி விளக்கம் கேட்டோம்.

அதற்கு அவர், “இந்த போஸ்டரை இப்போதுதான் பார்க்கிறேன். நான் வெளியிட்டது இல்லை. போலியானது” என்று நமக்கு பதில் அளித்தார். 

இதன் மூலம் யாரோ ஒருவர் விஷமத்தனமாக தெலங்கானா பா.ஜ.க பொதுச் செயலாளரும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினருமான தாலோஜூ ஆச்சாரியின் படத்தை வைத்து விஷமத்தனமாக உருவாக்கிய அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பா.ஜ.க பிரமுகர் அமித் ஷா படத்துக்கு பதில் சந்தான பாரதி படத்தை வைத்து போஸ்டர் வெளியிட்டதாக பரவும் பதிவு தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அமித்ஷா படத்திற்கு பதில் சந்தான பாரதி படத்தை வைத்து வாழ்த்து வெளியிட்டாரா தெலங்கானா பா.ஜ.க பொதுச் செயலாளர்?

Fact Check By: Chendur Pandian 

Result: False