இந்திய அரசியலின் நாயகன் ராகுல் காந்தி என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டவுன்ஹால் டைம்ஸ் என்ற ஊடகம் வெளியிட்ட செய்தியை கூகுள் டிரான்ஸ்லேட்டரில் மொழி மாற்றம் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "இந்திய அரசியலின் நாயகன் ராகுல் காந்தி - எல்.கே.அத்வானி" என்று இருந்தது. நிலைத் தகவலில், "புது தில்லி. ராகுல் காந்தி குறித்து நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் பாரத ரத்னா ஸ்ரீ லால் கிருஷ்ண அத்வானி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நான் பாஜகவைச் சேர்ந்தவனாக இருந்தாலும், இன்று இந்தியாவின் ஒரு சமூக சேவகனாக, இந்திய மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று அத்வானி தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்களுக்கு புதிய திசையை வழங்கக்கூடிய முடிவுகளை எடுங்கள். உள்துறை அமைச்சராகவும் நாட்டுக்கு சேவை செய்துள்ளேன். ஆனால், ராகுல் காந்தி போன்ற செல்வாக்கு மிக்க தலைவரை நான் அரசியலில் பார்த்ததில்லை.

இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் லால் கிருஷ்ண அத்வானியின் அறிக்கை வந்துள்ளது. சமீபகாலமாக அவருக்கு மோடி அரசு பாரத ரத்னா வழங்கியது , ஆனால் ராகுல் காந்தியை பாராட்டிய, அவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, மறைமுகமாக புதிய தலைவரை அதாவது ராகுல் காந்தியை தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ளார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வயோதிகம் காரணமாக அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அரசியலின் நாயகன் ராகுல் காந்தி என்று அத்வானி கூறியது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் நரேந்திர மோடிக்கு சொந்த கட்சியின் மூத்த தலைவரிடம் இருந்து கூட ஆதரவு இல்லை என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்வானி அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் அது எல்லா செய்தி ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். செய்தி காட்சி ஊடகங்கள் இது பற்றி மிகப்பெரிய விவாதமே செய்திருக்கும். நரேந்திர மோடி ஆதரவாளர்கள் எல்.கே அத்வானிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டிருப்பார்கள். ஆனால், அப்படி எந்த ஒரு செயலும் நடைபெறவில்லை. இதுவே, இந்த அறிக்கை உண்மையில்லை என்பதை உறுதி செய்கின்றன. இருப்பினும் ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று பலரும் பகிர்ந்து வருவதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

டவுன் ஹால் டைம்ஸ் என்ற ஊடகம் உண்மையில் இப்படி செய்தி வெளியிட்டதா என்று அறிய கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வேறு ஒரு ஊடகம் இப்படி செய்தி வெளியிட்டதாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் ஃபேக்ட் செக் கட்டுரை வெளியாகி இருந்தது. இதை வைத்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி குழுவின் உதவியை நாடினோம்.

‘’டவுன் ஹால் டைம்ஸ் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது உண்மைதான். ஆனால், அந்த செய்தியை அவர்கள் அகற்றிவிட்டார்கள். அதே நேரத்தில் தவறான செய்தி வெளியிட்டுவிட்டதாகக் கூறி அந்த ஊடகத்தில் மன்னிப்பும் வெளியிட்டுள்ளனர்,’’ என்று அச்செய்தியின் ஃபேஸ்புக் பதிவை நமக்கு கொடுத்தனர்.

அதில், "டவுன்ஹால் டைம்ஸ் வெளியிட்ட ராகுல் காந்தி தொடர்பான எல்.கே.அத்வானியின் அறிக்கை தவறானது. இந்த அறிக்கை சமூக ஊடகங்களிலிருந்து எங்களுக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில் முதல் பக்கத்தில் வெளியிட்டோம். அது தவறானது என்று தற்போது தெரியவரவே எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உண்மையில் இந்த அறிக்கையை அருண் மாஜி என்பவர் பத்திரிகைகளுக்கு வழங்கியுள்ளார். பத்திரிக்கையின் பிழை காரணமாக எல்.கே.அத்வானி வெளியிட்ட அறிக்கை என்று தவறாக பகிரப்பட்டுள்ளது. இதற்காக அத்வானியிடமும் வாசகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உண்மையைக் கண்டறிவதற்கு முன்பு தமிழ்நாடு பாஜக நிர்வாகி ஒருவருக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை வாட்ஸ் அப்-ல் அனுப்பியிருந்தோம். அவரும் இது போலியானது... அத்வானி அவர்கள் இப்படி எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்று நம்மிடம் தெரிவித்திருந்தார். அதே போல் வேறு சில ஊடகங்களும் கூட அத்வானிக்கு நெருக்கமானவர்களைத் தொடர்புகொண்டு இந்த அறிக்கை போலியானது, என்று செய்தி வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.

கடந்த 2019 தேர்தலின் போது கூட இப்படி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. அப்போதே இது தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

தவறான செய்தியை வெளியிட்டுவிட்டோம் என்று டவுன் ஹால் டைம்ஸ் ஊடகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இப்படி அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்று பாஜக நிர்வாகியும் நம்மிடம் உறுதி செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் "இந்திய அரசியலின் நாயகன் ராகுல் காந்தி" என அத்வானி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து எல்.கே.அத்வானி அறிக்கை வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்திய அரசியலின் நாயகன் ராகுல் காந்தி என்று அத்வானி கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False