மெசேஜ் ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் எதுவும் பணம் தருகிறதா?
‘’இந்த மெசேஜை ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் பணம் தருகிறது,’’ என்று கூறி பகிரப்பட்ட தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்து, நம்பகத்தன்மை பற்றி தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், வீடியோவை முதலில் பார்வையிட்டோம்.
அப்போது, வீடியோவில் ஒரு சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற காட்சியை இணைத்து, பின்னணியில், ‘’இந்த சிறுவன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவன். விபத்து ஒன்றில் கண் பார்வை பறிபோய்விட்டது. இவனது மருத்துவ செலவிற்கு ரூ.8 லட்சம் வரை தேவைப்படுகிறது. உங்களுக்கு மனசாட்சி இருந்தால், இந்த சிறுவனின் படத்தையும், இந்த ஆடியோவையும் நிறைய பேருக்கு ஷேர் செய்யுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷேருக்கும் ரூ.1 தர, வாட்ஸ்ஆப் நிறுவனம் முன்வந்துள்ளது. எனவே, தயவுசெய்து பகிருங்கள்,’’ என்று ஒருவர் பேசுகிறார்.
உண்மை அறிவோம்:
இதுபோன்ற நிறைய தகவல்கள் வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை அனைவரும் தெரிந்துகொள்வது, எதிர்காலத்தில் இத்தகைய தகவல்களை கண்டு நீங்கள் ஏமாறாமல் இருக்க உதவும்.
மேற்கண்ட வாட்ஸ்ஆப் ஃபார்வேர்ட் தகவலை கேட்கும்போது, ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றே நமக்கும் எண்ணம் ஏற்பட்டது. இதன்பேரில், இதில் இருக்கும் சிறுவன் யார் என்ற சந்தேகத்தில் முதலில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
அப்போது, இந்த புகைப்படம், கடந்த 2015ம் ஆண்டு முதலாக பல்வேறு மொழிகளில் பகிரப்பட்டு வரும் ஒன்று, என தெரியவந்தது.
அதில் ஒரு ஃபேஸ்புக் லிங்கை கீழே உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்.
இதன்படி, ‘’ஹேமமாலினி விபத்தில் காயமடைந்தது பற்றி பலரும் வருத்தப்படுகிறார்கள். ஆனால், இந்த ஏழைச் சிறுமி காயமடைந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை,’’ என மேற்கண்ட ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகளில் எழுதப்பட்டுள்ளது.
எனவே, 2015ம் ஆண்டு முதல் பரவி வரும் ஒரு புகைப்படத்தை எடுத்து, ‘’தற்போது ராமேஸ்வரத்தில் கண்ணில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவன்,’’ என்று புதிய தகவலை சேர்த்து வதந்தி பரப்பியுள்ளதாக, தெரியவருகிறது.
இது மட்டுமின்றி, இதுபோல பகிரப்படும் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் உண்மையிலேயே பணம் எதுவும் தருகிறதா என விவரம் தேடினோம்.
அப்போது, இப்படி பணம் எதுவும் தருவதில்லை என வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகக் கூறிய தகவலை காண நேர்ந்தது.
மேலே உள்ள வாட்ஸ்ஆப் விளக்கத்தில், சிவப்பு குறியீடு செய்யப்பட்ட விவரம், நாம் ஆய்வு செய்யும் வீடியோ தகவலுக்குப் பொருந்துகிறது.
எனவே, இந்த வீடியோ மட்டுமல்ல, இதுபோல பகிரப்படும் எந்த ஒரு தகவலாக இருந்தாலும் சரி; வாட்ஸ்ஆப் அவற்றுக்கு பணம் எதுவும் தருவதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்களை உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய வதந்திகளை புறக்கணியுங்கள்.
இந்த தலைப்பில் ஏற்கனவே நமது இலங்கைப் பிரிவினர் வெளியிட்ட செய்தியை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
Title:மெசேஜ் ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் எதுவும் பணம் தருகிறதா?
Fact Check By: Pankaj IyerResult: False