பாஜக-வோடு அ.தி.மு.க-வை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா என ஏபிபி நாடு கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா புகைப்படத்துடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா நீக்கம்?" என்று இருந்தது.

இந்த பதிவை கரிகாலன் தங்கராசன் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அதிமுக-வின் கூட்டுத் தலைமைக்கு எதிராகவும் பா.ஜ.க-வுடனான கூட்டணி தொடர்பாகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கூறி வந்தார். இந்த சூழலில் அவர் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் அனைத்திலும் இருந்து அன்வர் ராஜா நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்தனர்.

பா.ஜ.க-வுடனான கூட்டணி தொடர்பாகவும் சசிகலாவை மீண்டும் அதிமுக-வில் இணைப்பது தொடர்பாகவும் அவர் கருத்து கூறி வந்ததால் அ.தி.மு.க-வின் கூட்டுத் தலைமை பா.ஜ.க வுக்கு ஆதரவாக உள்ளதா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது. இந்த சூழலில் அதிமுக-வை பாஜக-வுடன் இணைக்க அன்வர் ராஜா எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா என்று கேள்வி எழுப்பி ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் ஏபிபி நாடு இணையதளம் மற்றும் அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் அன்வர் ராஜா தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். எதிலும், அதிமுக-வை பாஜக-வில் இணைக்க முயற்சி நடப்பது போன்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்வர் ராஜா நீக்கப்பட்டது போன்று எந்த ஒரு செய்தியும் இல்லை.

Archive

அதே நேரத்தில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை ஏபிபி நாடு வெளியிட்டிருந்தது. ஆனால் அதில், "ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம். நாளை அதிமுக செயற்குழு நடைபெறவுள்ள நிலையில் அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தெளிவானது.

இதை மேலும் உறுதி செய்ய ஏபிபி நாடு இணைய ஊடகத்தின் ஆசிரியர் மனோஜை தொடர்புகொண்டு கேட்டோம். இப்படி எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை. இது போலியான நியூஸ் கார்டு என்றார். இதன் மூலம் "பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா நீக்கம்?" என்று ஏபிபி வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஏபிபி நாடு செய்தி வெளியிட்டதாக, பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜகவுடன் அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கப்பட்டாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False