
நம்முடைய வாழ்நாளில் மீண்டும் நிகழ வாய்ப்பில்லாத, 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நிகழும் அரிய பிப்ரவரி மாதம் 2026ம் ஆண்டு ஏற்பட உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
2026 பிப்ரவரி மாத நாட்காட்டி புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வரவிருக்கும் 2026 பிப்ரவரி மாதம் உங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் நிகழ வாய்ப்பில்லை. ஏனென்றால், இந்த வரவிருக்கும் பிப்ரவரி மாதத்தில் பின்வருவன இருக்கும்: • 4 ஞாயிற்றுக்கிழமைகள் • 4 திங்கட்கிழமைகள் • 4 செவ்வாய்க்கிழமைகள் • 4 புதன்கிழமைகள் • 4 வியாழக்கிழமைகள் • 4 வெள்ளிக்கிழமைகள், மற்றும் • 4 சனிக்கிழமைகள். இது ஒவ்வொரு 823 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது. இது ‘மிராக்கிள்இன்’ என்று அழைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிப்ரவரி மாத வழக்கமாக 28 நாட்களைக் கொண்டது. லீப் வருடம் மட்டும் 29 நாட்கள் கொண்டிருக்கும். 28ஐ வாரத்தின் ஏழு நாட்களுக்கு வகுத்தால் ஒவ்வொரு கிழமைக்கும் சரிவிகிதமாக 4 நாட்கள் வரும். லீப் ஆண்டைத் தவிர்த்து இப்படி ஒவ்வொரு கிழமைக்கும் நான்கு நாட்கள் வருவது என்பது பிப்ரவரி மாதத்தில் வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமூக ஊடகங்களில் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு என்று குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் இப்படி மாதத்திற்கு எல்லா கிழமைகளுக்கும் நாட்கள் சரிசமமாக வருவது வழக்கமான ஒன்றுதான். அதில் சிறப்பானது என்று குறிப்பிட ஒன்றும் இல்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டிருந்தது பொன்று மிராக்கிள் இன் என்று ஏதாவது உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இந்த வதந்தி புதியது இல்லை, 2025ம் ஆண்டிலும் கூட இப்படி வதந்தி பரவியது. அப்போது இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆனால் இந்த வதந்தி 2024ம் ஆண்டில் இல்லை. ஏனெனில் அது லீப் வருடமாக இருந்ததால் அந்த ஆண்டு மட்டும் இந்த வதந்தி இல்லை. மீண்டும் 2028ம் ஆண்டு லீப் ஆண்டு வர உள்ளது. அது வரை இது போன்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டு தான் இருக்கப் போகிறது. அரிய தகவல் என்றதும் அது தொடர்பாக சிறிதும் சிந்திக்காமல் உடனடியாக பரவும் போக்கே, இது போன்ற வதந்திகள் பரவ காரணமாக இருக்கிறது. எனவே, சமூக ஊடகங்களில் தகவலை ஷேர் செய்வதற்கு முன்பு அது பற்றி சிந்தித்து, அது சரியா என்று சரிபார்த்த பிறகே பகிர்வது சரியானதாக இருக்கும்.
முடிவு:
நம் வாழ்நாளில் மீண்டும் காண முடியாத அரிய பிப்ரவரி மாதம் 2026ம் ஆண்டு வருகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்துள்ளோம்.எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:அரிய 2026ம் ஆண்டு பிப்ரவரி என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


